ஞாயிறு, 12 ஜூலை, 2015

மொகலாய வரலாறு 30


கூ.செ.செய்யது முஹமது
முஹம்மது ஷாவுக்குப் பிறகு, முந்தைய பேரரசர் ஜஹந்தர் ஷாவின் இரண்டாவது மகன் அஸீஸுத்தீன் இரண்டாம் ஆலம்கீர் ஆட்சிக்கு வந்தார். இமாத் உல் முல்க் என்பவர் இடையிலிருந்த அஹ்மத் ஷா பஹதூரை விலக்கி விட்டு இரண்டாம் ஆலம்கீரைக் கொண்டு வந்தார். தனது முன்னோர் ஔரங்கஸேபின் வழிமுறையை இவர் தொடர்ந்ததால் இந்த பெயர் இவருக்குண்டானது. ஔரங்கஸேப் இறந்த போது இவருக்கு ஏழு வயது. பாட்டனார் முதலாம் பஹதூர் ஷா இறந்த ஆட்சிக்காக நடந்த போரில் இவரின் தந்தை மாஸுத்தீன் தோற்கடிக்கப்பட்டு அடுத்த பேரரசர் ஃபரூக் ஷியரால் சிறை வைக்கப்பட்டார். அப்போது வைஸ்ராயராக இருந்த இமாத் உல் முல்க் பிற்காலத்தில் தனக்கு கட்டுப்பட்டு இருப்பார் என்று இவரைப் பாதுகாத்தார். பின் 1699 ல் முல்தான் பகுதியில் பிறந்த இவருக்கு சையித் பேகம், ஸீனத் மஹல், ஃபயஸ் பக்த் பேகம், அஸீஸாபதி மஹல், லதீஃபா பேகம், ஸீனத் அஃப்ரஸ் பேகம் மற்றும் ஔரங்காபாதி பேகம் என்று ஏழு மனைவிகளும், மிர்சா அப்துல்லா அலி கௌஹர், இரண்டாம் ஷா ஆலம், மிர்சா முஹம்மது அலி அஸ்கர் பஹதூர், மிர்சா முஹம்மது, ஹாரூன் ஹிதாயத், பக் ஷ் பஹதூர், மிர்சா தலி முராத் ஷா பஹதூர், மிர்சா ஜமியத் ஷா பஹதூர், மிர்சா முஹம்மது ஹிம்மத் ஷா பஹதூர், மிர்சா அஹ்சனுத்தீன் முஹம்மது பஹதூர், மிர்சா முபாரக் ஷா பஹதூர் என்று பதினோரு மகன்களும், ஸுஹ்ரா பேகம் உட்பட பனிரெண்டு மகள்களும் இருந்தனர்.
ஆட்சிப் போட்டியால் பல ஆண்டுகள் சிறையிலிருந்த இவர் ஐம்பத்தி ஐந்து வயதில் தான் ஆட்சிக்கு வந்தார். மிகவும் பலவீனமான இவர் நிர்வாகத் திறமை, இராணுவ திறமை கொஞ்சமும் இல்லாதவர். முழு அதிகாரமும் காஸியுத்தீன் இமாத் உல் முல்கிடமே இருந்தது. 1756 ல் அஹ்மத் ஷா அப்தலி டெல்லியை ஆக்கிரமித்து மதுராவில் கொள்ளையடித்தார். இமாத் உல் முல்கின் அரவணைப்பில் மராட்டியர்கள் வட இந்தியா முழுவதிலும் பலம் பெற்றிருந்தார்கள். ஏற்கனவே பலவீனமாக இருந்த மொகலாய சாம்ராஜ்ஜியத்தை மராட்டியர்கள் மேலும் சரித்தனர். இமாத் உல் முல்க் அரச வருமானம் முழுவதையும் தான் எடுத்துக் கொண்டார். நாட்டு வளர்ச்சியில் ஆர்வம் காட்டாமல் இருந்தார். இரண்டாம் ஆலம்கீரின் மூத்த மகன் அலி கௌஹரை கொடுமைப்படுத்தினார். மராட்டிய தலைவன் பாலாஜி ராவ் அவ்வப்போது கொள்ளையடித்துக் கொண்டிருந்த மொகலாயர்களைச் சார்ந்திருந்த கர்னூல், கடப்பாஹ், சவானூர் நவாப்களை ஒருங்கிணைத்தார். அஹ்மத் ஷா துர்ரானியிடம் நட்புறவு வைத்திருந்தார். மராத்தியர்களுக்கு ஆதரவளிக்கும் இமாத் உல் முல்கை வெளியேற்ற திட்டமிட்டனர். ஆலம்கீரின் மகள் ஸுஹ்ரா பேகமை, துர்ரானியின் மகன் திமூர் ஷா துர்ரானிக்கு மணமுடித்துக் கொடுத்தார். அஹ்மத் ஷா துர்ரானியும் மேலும் மொகலாய உறவு வலுப்பட முன்னாள் பேரரசர் முஹம்மது ஷாவின் மகள் ஹஸ்ரத் பேகத்தை மணந்து கொண்டார். இவரது ஆட்சியில் நஜீபாபாத் என்ற இடத்தில் நஜீபத் தௌலா என்பவரால் பத்தர்கர் (கல் கோட்டை) கோட்டை கட்டப்பட்டது. 
 ஆண்டுக்கு 50 லட்சம் கப்பம் கட்டி வந்த பெங்காலின் நவாப் அலிவர்தி கான் இறந்து போக, அடுத்து அங்கு சிராஜுல் தௌலாவை இரண்டாம் ஆலம்கீர் ஆதரவளித்தார். ஆனால் உள்நாட்டுப் பிரச்சினையால் அவருக்கு அங்கு ஆதரவில்லை. இதனால் சிராஜ் உத் தௌலா ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்குச் சொந்தமான கல்கத்தாவை பேரரசரின் அனுமதியின்றி பெங்காலுடன் இணைக்க முற்பட்டார். இதனால் ஆங்கிலேயர்களுடன் சிராஜ் உத் தௌலாவுக்கு புகழ் பெற்ற ‘ப்ளாசி போர்” உண்டானது. அதில் தப்பித்த சிராஜ் உத் தௌலாவை துரோகி மீர் ஜாஃபர் கொன்றான். இரண்டாம் ஆலம்கீர், மீர் ஜாஃபரை பெங்காலின் நவாபாக அங்கீகரிக்க மறுக்கவே அவன் இமாத் உல் முல்க்கை நாடினான். இரண்டாம் ஆலம்கீர் ஃப்ரான்சுக்கு கடிதம் எழுதி தளபதி டி புஸ்ஸியுடன் 1000 வீரர்களையும் அனுப்பும் படியும், அதற்கான அனைத்து செலவுகளையும் தான் ஏற்பதாக வேண்டினார். டெக்கானில் சலபத் கானும், ஹைதர் அலியும், ஃப்ரென்ச் தளபதி டி புஸ்ஸி மற்றும் லல்லியுடன் மராட்டியர்களை அப்பகுதியில் எதிர்த்தார்கள். அவர்கள் தான் புதிய போர் முறையாக கண்களுக்குத் தெரியாத பூமியில் புதைக்கப்படும் ‘கண்ணி வெடியை’ அறிமுகப்படுத்தினார்கள். இது மமதையிலிருந்த மராட்டியர்களை திக்குமுக்காடச் செய்தது. இதனால் இரண்டாம் ஆலம்கீரிடம் அவர்கள் புகழடைந்தார்கள். 1758 ல் போபாலில் மொகலாய நவாபாக இருந்த ஃபயாஸ் முஹம்மது கானை அவரது மாற்றாந்தாய் மமோலா பாய் மராட்டியர்களின் உதவியுடன் ரைசன் கோட்டையில் தாக்கினார். ஆலம்கீர் மேலும் படைகளை ஃபயாஸ் முஹம்மது கானுக்கு அனுப்பி ‘பஹதூர்’ என்ற பட்டமும் கொடுத்தார். மமோலா பாய் வசமிருந்த கோட்டையை ஃபயாஸ் முஹம்மது கான் மீண்டும் கைப்பற்றினார். ஆலம்கீரின் கொலைக்குப் பிறகு, மராட்டிய சதாஷிவ்ராவ் பாவ் என்பவனால் போபால் மிரட்டப்பட்டு மூன்றாம் பானிபட் போருக்கு வழி வகுத்தது. இரண்டாம் ஆலம்கீர் ரகசியமாக மூத்த மகன் இளவரசர் அலி கௌஹரை மொகலாய மன்னராக அறிவிக்க இருந்தார். இது தெரியவர பேரரசர் இரண்டாம் ஆலம்கீருக்கும், இமாத் உல் முல்குக்கும் பிரச்சினை வெடிக்க, இமாத் உல் முல்க் மராட்டிய தலைவன் சதாஷிவ்ராவ் பாவ் என்பவருடன் சேர்ந்து இரண்டாம் ஆலம்கீரை கொலை செய்தனர். ஆலம்கீரை சந்திக்க வயதான இஸ்லாமிய பெரியவர் ஒருவர் வந்திருப்பதாகக் கூற, அவர் கோட்லா ஃபதே ஷாவில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய பெரியவர் வேடத்தில் வந்தவன் ஆலம்கீர் சுதாரிப்பதற்குள் சரமாரியாக குத்திக் கொன்றான்.  அரண்மனையிலிருந்த அனைத்து ராஜகுடும்பத்தினரையும் கொலை செய்தார்கள். அருகிலிருந்த ஆலம்கீரின் மகன் டெல்லியை விட்டு தப்பி ஓடினார். அடுத்து மூன்றாம் ஷாஜஹான் என்பவரை ஒப்புக்காக ஆட்சியில் அமர்த்தினார்கள். சதாஷிவ்ராவ் பாவ் லஞ்சம் கொடுத்தோ, மிரட்டியோ இமாத் உல் முல்கை நீக்கி விட்டு விஷ்வஸ்ராவ் என்பவனை டெல்லியில் ஆட்சியில் அமர வைக்க தனி திட்டம் வைத்திருந்தான்.
இரண்டாம் ஆலம்கீர் குழந்தைப் பருவத்திலிருந்தே இஸ்லாத்தின் மீது தீவிர பற்று கொண்டிருந்தார். எந்த ஒரு தொழுகையும் தவறாமல் கடை பிடிப்பார். அரசு மசூதியான முத்து மசூதியில் (PEARL MASJID) தானே பயான் என்னும் இஸ்லாம் பற்றிய நல்லுரைகளை வழங்குவார். ஒரு பேரரசர் என்னும் எண்ணமில்லாமல், பாதுகாப்பும் இல்லாமல் டெல்லி சாலை களில் நடந்து செல்வார். வழியில் தென்படும் மசூதியில் மக்களுடன் சேர்ந்து தொழுவார். பேச்சிலும், பண்பிலும் மிகச் சிறந்தவராகக் கருதப்பட்டார்.
இமாத் உல் முல்கின் ஆதரவில் சதாஷிவ்ராவ் பாவ் என்ற அந்த ஹிந்து மராட்டிய தீவிரவாத தலைவன் மொகலாய அரண்மனையில் இருந்த விலையுயர்ந்த தங்க, வைர நகைகள், செல்வங்களைக் கொள்ளையடித்தான். டெல்லி, ஆக்ராவிலிருந்த மசூதிகள், புனித சமாதிகள், கோபுரங்களை இடித்து தரைமட்டமாக்கினான். புகழ் பெற்ற மோதி மசூதியை இடித்து கண்கவர் பொன்னால் வடிவமைக்கப்பட்டிருந்த அலங்காரங்களைக் கொள்ளையடித்தான். இவைகளைக் கேள்விப்பட்ட அஹ்மது ஷா துர்ரானி பெரும் படையுடன் துரோகி இமாத் உல் முல்க், சதாஷிவ் பாவ் மற்றும் நஜீப் உத் தௌலா ஆகியோரை அழித்து மொகலாயப் பெருமையை நிலைநாட்ட வந்தார். டெல்லியைக் கைப்பற்றி இரண்டாம் ஷா ஆலமை ஆட்சியில் அமர்த்தினார். ஒருபுறம் தெற்கில் ஹைதர் அலியின் மைசூர் இராணுவம் மராட்டியர்களைத் தாக்கியது.  

  சரித்திர பெயராக இரண்டாம் ஷா ஆலம் என்று அறியப்பட்ட அலி கௌர் தந்தை இரண்டாம் ஆலம்கீருக்குப் பிறகு, ஆட்சிக்கு வந்தார். இவரது தாயார் நவாப் ஸீனத் மஹல் சாஹிபா ஆவார். 1728 ஜூனில் டெல்லியில் ஷாஜஹானாபாத் என்ற இடத்தில் பிறந்தார். இவர் பொறுப்பேற்ற நேரத்தில் மொகலாய ஆட்சி மிகவும் மோசமான நிலையில் வருவாய் இல்லாமல் இருந்தது. இவருக்கு பியாரி பேகம், தாஜ் மஹல் பேகம், ஜமீலுன்னிசா பேகம், குத்சியா பேகம் முபாரக் மஹல், முராத் பக்த் பேகம் என்று ஐந்து மனைவிகளும், 16 மகன்கள், 2 மகள்களும் இருந்தார்கள். இமாத் உல் முல்கும், மராட்டிய தலைவன் சதாஷிவ்ராவ் பாவ் என்பவனும் இரண்டாம் ஆலம்கீரைக் கொன்றுவிட்டு, மூன்றாம் ஷாஜஹானை பெயருக்கு மொகலாய மன்னராக ஆக்கி தாங்கள் ஆதாயம் பார்த்தார்கள். மொகலாயர்களின் உறவினர் அஹ்மது ஷா துர்ரானி என்பவர் படையெடுத்து அவர்களை விரட்டி, மூன்றாம் ஷாஜஹானை நீக்கி விட்டு முறைப்படி வாரிசான இரண்டாம் ஷா ஆலமை ஆட்சியில் அமர்த்தினார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக