ஐக்கிய அரபு அமீரக வரலாறு
கூ.செ. செய்யது முஹமது
2011 ல் ஜெபெல் ஃபயா என்ற பகுதியில் நடந்த ஆராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட கைகோடாரி, துளையிடப்பட்ட சில பொருள்களும் அவைகள் 100,000 காலத்துக்கு முற்பட்ட கிழக்கு ஆப்பிரிக்காவினர் பயன்படுத்திய பொருட்கள் என்று ஐக்கிய அரபு அமீரகங்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரத்தைத் தெரிவிக்கின்றன. ஆப்பிரிக்காவைத் தவிர்த்து வெளிப்புறத்தில் மனிதன் வாழ்ந்ததற்கான பகுதியாக இப்பகுதியைக் கருதுகிறார்கள். மேலும் கி.மு. 2600-2000 உம் அந் நஹார் என்ற பகுதியின் கலாச்சாரம் இங்கு இருந்ததாக அறியப்படுகிறது. இது அபுதாபியிலுள்ள ஒரு தீவை சார்ந்ததாகும். இந்த பகுதி எண்ணெய் வளம் மற்றும் இராணுவத்திற்காக அதிகமான பாதுகாப்பில் உள்ளது. அபுதாபி இப்பகுதியை விரைவில் மக்கள் பார்வைக்கு வைப்பதற்கான முயற்சியில் உள்ளது. உம் அந் நஹாரில் பெரிய கற்களுடன் கூடிய சமாதி மனிதர்கள் வாழ்ந்ததற்கான சாட்சியமாக இருக்கிறது.
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைவிற்குப்பின் கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள் சுற்றி இருந்த முஸ்லீமல்லாத அரேபிய பழங்குடியினர்கள் மீது போரிட்டார்கள். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள் தலைமையிலும், இக்ரிமா (ரலி) அவர்களின் உதவியினாலும் நவம்பர் 632 ல் ரித்தா போரின் தொடர்ச்சியாக டிப்பா (ஃபுஜைராஹ்) என்ற பகுதியில் போரிட்டார்கள். அதில் தோற்ற இப்பகுதி மக்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள். 637 ல் ஜுல்ஃபர் (ராஸ் அல் கைமாஹ்) என்ற பகுதி இஸ்லாமியப் படைகளுக்கு ஈரானை எதிர்க்க தளமாகப் பயன்பட்டது. அப்போது இந்தியப் பெருங்கடலில் முத்துக்கள் வாணிபத்திற்கு பெரும் துறைமுகமாக ஜுல்ஃபர் இருந்தது. நாம் இப்போது பஹ்ரைன் என்று குறிப்பிடுவது இப்போதுள்ள தனி நாடல்ல. இராக் நீங்கலாக உள்ள அனைத்துப் பகுதிகளையும் குறிப்பிட்ட பஹ்ரைன் என்றழைக்கப்பட்ட காலத்தைப்பற்றி. எட்டாம் நூற்றாண்டில் அஸ்ஸைரிய மன்னன் சென்னசெரிப் வட கிழக்கு பெர்ஷியாவை வென்று பஹ்ரைனைக் கைப்பற்றினான். பெர்ஷிய வளைகுடாவுக்கு வாணிபவழியாக இருந்த இந்த பகுதியில் “தில்முன்” என்ற மக்கள் கூட்டத்தினர் வாழ்ந்திருந்தார்கள். பழங்கால சுமேரியர்களுக்கு இப்பகுதி புனித இடமாகும். மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் புராதன மக்கள் இந்த தில்முன்கள். பஹ்ரைனின் தீவுகளில் தில்முன்களின் சமாதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிரேக்க காலத்தில் பஹ்ரைன் பவளம், முத்துக்களுக்கு வியாபார ஸ்தலமாக இருந்தது. 7 ம் நூற்றாண்டிலேயே இப்பகுதி இஸ்லாத்தைத் தழுவியது. ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆட்சியின் போது இப்பகுதிக்கு அல் அலா அ அல் ஹத்ரமி என்பவரை பொறுப்பாளராக நியமித்தார்கள். உமர் (ரலி) அவர்கள் காலத்தில் நபி (ஸல்) களாரின் நெருங்கிய தோழர் அபு ஹுரைராஹ்(ரலி)வும், உதுமான் பின் அபி அல் ஆஸும் (ஸல்) கவர்னர்களாக நியமித்தார்கள். 16 ம் நூற்றாண்டில் இந்தியப் பெருங்கடலில் போர்ச்சுகீசியர்கள் வாணிபம் செய்த போது, ஓட்டோமான் களுடன் சண்டையிட்டு இந்த பெர்ஷிய கடலோரப்பகுதியைப் பிடித்தார்கள். 150 ஆண்டுகாலம் அவர்கள் வசம் இது இருந்தது.
பெர்ஷிய கடலோரத்தில் ஏழு அரபு மாகாணங்கள் உள்ளன. அவை குவைத், பஹ்ரைன், இராக், ஒமான், கதார், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகங்கள் ஆகும். அண்மைக் காலங்களில் இவை வளைகுடா நாடுகள் என்று அழைக்கப்பட்டு இராக் நீங்கலாக வளைகுடாவின் கூட்டுறவு அரபு மாகாணங்கள் என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதி மொத்தமாக கிழக்கு அரேபியாவைச் சேர்ந்தது. ஆனால் இந்த வளைகுடாவைத் தொடர்ந்து செல்லும் சௌதி அரேபியாவின் ஹிஜாஸ், நஜ்த் ஆகியவை வளைகுடாப் பகுதிகளைச் சேராது. இந்த கிழக்கு அரேபிய வளைகுடாப் பகுதி மக்கள் இசையுடன் கூடிய ஃபிஜிரி, சவ்த் மற்றும் லிவா கலாச்சாரங்களைக் கொண்டவர்கள். கலாச்சாரத்துடன் பொருளாதாரமும் கடலைச் சார்ந்தே இருக்கும். அதனால் இவர்களை கடல் சார்ந்த மக்கள் என்றும் அழைப்பார்கள். இந்த கிழக்குப்பகுதி மக்கள் ‘வளைகுடா அரபு மொழி’ என்று சௌதி அரேபிய அரபு மொழியிலிருந்து மாறுபட்ட மொழியைப் பேசுவார்கள். இந்த சௌதி அரேபியாவின் கிழக்குப்பகுதி மொத்தமும் 18 ம் நூற்றாண்டு வரை பஹ்ரைன் என்று தான் அழைக்கப்பட்டது. அரபு மொழியில் ‘பஹ்ர்’ என்றால் இரு கடல்கள் என்று பொருள். இரு கடல்கள் திருக்குரானில் ஐந்து இடங்களில் சொல்லப்பட்டுள்ளதால் இதைப்பற்றி ஆராய்ந்தவர்கள் இரு கடல்களுக்கு ‘அவல்’ என்று இன்னொரு சொல்லும் உள்ளது என்றார்கள். இந்த பஹ்ரைன் என்ற சொல் 15 ம் நூற்றாண்டிலிருந்து தான் வந்திருக்கும் என்றும், இரு கடல்கள் அல் கதிஃப் மற்றும் ஹத்ஜார் (தற்போது அல் ஹசா) என்பதையே குறிப்பதாக முடிவு செய்தார்கள். இஸ்லாம் இப்பகுதிகளில் அறிமுகமாவதற்கு முன்பு அரபு கிறிஸ்தவர்கள், பெர்ஷிய ஸோரோஸ்ட்ரியன்கள், யூதர்கள் மற்றும் அரமாயிக் மொழி பேசுபவர்கள் இருந்தார்கள். 20 ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி வரை இவர்களை “கலீஜ்’ (KHALEEJ) என்று அழைத்தார்கள். கலீஜ் என்றால் மீன் உண்ணும் கடல் மூழ்கிகள் என்று பொருள்.
இதிலுள்ள ஏழு அரபு மாகாணங்களில் (இப்போது இவைகள் மாகாணங்கள் அல்ல தனி நாடுகளாகி விட்டன) ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் தன்னுள் அடங்கிய ஏழு அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், ஃபுஜைய்ராஹ், ராஸ் அல் கைமாஹ் ஆகிய சிறு மாநில அதிகாரங்களைக் கொண்டு தனது ஆட்சியாளர்களை தேர்வு செய்து கொள்கிறது.
புரைய்மி என்னும் ஓமன் தேசத்தில் தவாஹிர் என்ற பழங்குடியினர் இருந்தார்கள். அதன் கிளைப் பிரிவினர்களாக நாஃஇம், பனி காஃப், பனி யாஸ் என்பவைகள் இருந்தன. இவர்கள் மத்திய அரேபியாவின் பழங்குடிக்கூட்டத்தினராக ஐக்கிய அரபு அமீரகத்தை இருப்பிடமாகக் கொண்டு இருந்தார்கள். பனி யாஸ்கள் துபாயிலிருந்து தென்கிழக்கு கத்தார் நாட்டைச் சேர்ந்த கவ்ர் அல் உதைய்த் வரை உள்ள மற்ற பகுதி பழங்குடியினருடன் கூட்டு வைத்திருந்தார்கள். இந்த பகுதியிலுள்ள அனைவரும் பனி யாஸ் கூட்டத்தினர் ஆவார்கள். இந்த பழங்குடியினர் தங்கள் மூத்த குடும்பத்தினரால் தலைவரைத் தேர்ந்தெடுத்து அப்பகுதிகளை நிர்வகித்து வந்தார்கள். அல் ஃபலாசி பழங்குடியினரின் குடும்பத்தார் அல் நஹ்யான் அபுதாபி (பழைய பெயர்-அல்தஃப்ரா) யையும், அல் ஃபலாசி பழங்குடியினர் குடும்பத்தார் அல் மக்தூம் துபாய் பகுதிகளையும் நிர்வகித்தார்கள். இந்த பனி யாஸ் பழங்குடியினர் அல் ஃபலாஹி, அல் ஃபலாசி, அல் ஒதைய்பா, அல் சுவைய்தி, அல் மஸ்ரூயீ, அல் ஹமேலி, அல் முஹைய்ரி, அல் ரொமைய்தி, அல் மரார், அல் மெஹைர்பி, அல் குபைய்சி, அல் கம்ஸி, அல் சிபுசி, அல் ஹமெய்ரி, அல் அமெம்மி என்று பல குடும்பங்களாக உள்ளனர். கடலில் முத்துக் குளிப்பவர்களாக இருந்த அல் நஹ்யான் குடும்பத்தினர் பெர்ஷிய கடலோரத்திலுள்ள லிவா பாலைவனத்திலிருந்து 1793 ல் அபுதாபிக்கு குடிபெயர்ந்தார்கள். அல் ஃபலாசி குடும்பத்தினர் துபாய் கடற்கரைப் பகுதிக்குக் குடிபெயர்ந்தார்கள். அன்றிலிருந்து இன்றுவரை அவர்கள் தான் ஆட்சி செய்து வருகிறார்கள். இக்குடும்பத்தினர்கள் பெண்களின் பெயர்களை வெளியில் சொல்ல மாட்டார்கள். திருமணங்களின் போது கூட இன்னாரின் மகள் என்று தான் அறிவிப்பார்கள். ஆனால் தற்போது நவீன காலத்தில் சில அமீரகப் பெண்கள் குறிப்பாக துபாய் மற்றும் ஷார்ஜா போன்ற பகுதிகளில் தங்கள் பெயர்களை பகிரங்கமாக அறிவிக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக