புதன், 22 ஜூலை, 2015

ஐக்கிய அரபு அமீரக வரலாறு 7

1949 ல் பிறந்த ஷெய்க் முஹம்மது 2006 ல் ஆட்சிக்கு வந்தவுடன் ஐக்கிய அரபு அமீரகங்களை உலக அரங்கில் சிறந்த நாடாக கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டார். நான்கு வயதில் பிரத்யேகமாக அரபு மற்றும் மார்க்க கல்வி பயின்றார். 1955 லிருந்து அல் அஹ்மதியா, அல் ஷாப், துபாய் செகண்டரி ஸ்கூல் என்ற பள்ளிகளில் பயின்றார். தனது ஒன்றுவிட்ட சகோதரர் முஹம்மது பின் கலீஃபா அல் மக்தூமுடன் இணைந்து பெல் எஜுகேஷன் ட்ரஸ்ட் இங்கிலீஷ் லாங்க்வேஜ் என்ற இங்கிலாந்து பள்ளியில் பயின்றார். மான்ஸ் கேடெட் ட்ரைனிங் ஸ்கூலில் ஆல்டெர்ஷாட் நகரத்தில் பயின்றார். அங்கு காமன்வெல்த் மாணாக்கர்களில் முதல் மாணவனாக ஸ்வார்ட் ஆஃப் ஹானர் மரியாதையைப் பெற்றார். விமானப் பயிற்சிக்காக இத்தாலிக்கும் சென்றார். 22 வயதில் தந்தையும், ஷெய்க் ஸாயெத் அவர்களும் ஏழு அமீரகங்களை ஒன்றிணைக்க ‘அர்கூப் எல் செதிரா’ என்ற பாலைவனத்தில் நடத்திய பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டார். ஐக்கிய அரபு அமீரங்களின் முதல் பொருளாதார மந்திரியாக 1971 ல் பதவி ஏற்றார். ஷெய்க் முஹம்மது இராணுவப்பயிற்சி முடிந்து துபாய் வந்த போது அவர் தந்தை இவரை துபாய் போலீஸ் மற்றும் தனியாக இயங்கிய துபாய் இராணுவத்திற்கும் தலைவராக நியமித்தார். 1972 ஜனவரியில் ஷார்ஜாவின் ஆட்சியாளராக இருந்த ஷெய்க் காலித் பின் முஹம்மது அல் கசீமிக்கு எதிராக முன்பு வெளியேற்றப்பட்ட ஷார்ஜா ஷெய்க் சக்ர் பின் சுல்தான் அல் கசிமீ சில அரபு பழங்குடியினருடனும், ராஸ் அல் கைய்மாஹ் வழியாக ஊடுருவிய சில எகிப்திய படைகளுடன்  சேர்ந்து கலகம் செய்தார். இதை முன்னின்று ஷெய்க் முஹம்மது அவர்கள் அடக்கினார். 
1973 ல் ஜப்பானுக்கு எதிராக ஜாப்பனீஸ் ரெட் ஆர்மி மெம்பெர்ஸ் என்ற தீவிரவாதிக்குழு ஒசாமா மரூவ்கா என்பவன் தலைமையில் துபாயிலிருந்து சென்ற JAL 404 என்ற பயணிகள் விமானத்தைக் கடத்தினான். அவர்களை லிபியாவில் சுட்டு வீழ்த்தி காப்பாற்றினார். அதேபோல் KML 861 என்ற பயணிகள் விமானத்தை மூன்று பேர் கொண்ட குழு கடத்த பேச்சுவார்த்தை நடத்தி வெற்றிகரமாக பயணிகளை விடுவித்தார். கல்ஃப் ஏர் என்னும் நிறுவனத்துடன் கூட்டாக இருந்த போது துபாயின் திறந்த வான்வெளி சட்டத்தை அவர்கள் எதிர்த்ததால் துபாயின் விமானத்துறையை தனியாக “எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்” என்று 10 மில்லியன் டாலரில் பிரமாண்டமாகத் துவக்கினார். அதை இன்றளவும் உலகின் தலைசிறந்த விமான நிறுவனங்களில் ஒன்றாக ஆக்கினார். துறைமுகங்களின் நிர்வாகத்தில் துபாய் வேர்ல்ட் என்னும் நிறுவனத்தை உலகில் முக்கியமாக ஆக்கினார். புர்ஜ் அல் அரப் ஹோட்டலை உலகின் முதல் செழிப்பான ஹோட்டலாக ஆக்கினார். 1989 ல் முதல் துபாய் ஏர்ஷோவைத் துவக்கினார். ஐக்கிய அரபு அமீரக அரசை (ஏழு அமீரகத்தையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் ஆட்சியாளரை தேர்ந்தெடுக்கும் முறை) பொது அரசாங்கமாக்கினார். “ஐக்கிய அரபு அமீரகங்கள் பார்வை 2021” என்ற எண்ணத்தை உருவாக்கி வருங்கால வெற்றிக்கு பாடுபட்டு வருகிறார். துபாயை அனைத்துத் துறைகளிலும் எமிரேட் ஏர்லைன்ஸ், துபாய் ஹோல்டிங், க்ளோபல் சிட்டி, ஜுமெய்ராஹ் க்ரூப், துபாய் இண்டெர்நெட் சிட்டி, துபாய் மீடியா சிட்டி, துபாய் இண்டர்நேஷனல் ஃபைனான்ஸ் சென்டர், பால்ம் ஐலண்ட், புர்ஜ் அல் அராப், புர்ஜ் கலீஃபா என்று சர்வதேச அளவில் உயர்த்தினார். ஆறு நாடுகளின் பந்தயக் குதிரைகளை மருத்துவம் மற்றும் அனைத்து பராமரிப்புகளையும் செய்யும் நிறுவனமான “டால்லெய்” என்பதை தன் சொந்த நிறுவனமாக துவக்கியுள்ளார். 2012 ல் FFI வேர்ல்ட் எண்டூரன்ஸ் சாம்பியன் போட்டிக்காக 160 கி.மீ தூரம் ‘மத்ஜி டு போண்ட்’ என்ற குதிரையில் பந்தயத்தில் கலந்து கொண்டிருக்கிறார். அரபு மொழியில் கவிதைகள் எழுதுவார்.   
 ஷெய்க் முஹம்மது அவர்கள் ஊழலை ஒழிக்கும் விதமாக 2001 ல் துபாய் சுங்க இலாகாவின் தலைவராக இருந்த ஒபைத் சக்ர் பின் புஸித்தைக் கைது செய்தார். இரண்டாண்டு ரகசிய விசாரனை செய்து மூன்று அரபுகளையும், ஆறு மூத்த அதிகாரிகளையும், 14 அதிகாரிகளையும் ஒட்டு மொத்தமாகக் கைது செய்தார். அதேபோல் தேயார் (DEYAAR REAL ESTATE) என்னும் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் 20 மில்லியன் திர்ஹாம்கள் சமீபத்தில் ஊழல் செய்திருந்தார். அவரையும் 10 ஆண்டுகள் சிறையில் அடைத்தார். 1967 ல் முதல்முறையாக குதிரைப்பந்தயத்தில் கலந்து கொண்ட ஷெய்க் முஹம்மது அவர்கள் குதிரையேற்றத்தில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். பல பரிசுகளையும் இதில் வென்றுள்ளார். 2006 ல் நடந்த 15 வது ஆசிய விளையாட்டில் இவர் மகன் ராஷித் எண்டூரன்ஸ் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார். இவரது மகன்கள் ராஷித், அஹ்மத், மஜீத் மற்றும் ஹம்தான் ஆகியோர் கூட்டு எண்டூரன்சில் தங்கப்பதக்கம் வென்றார்கள். இவரது மகள் லதீஃபா தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார். இவரது இன்னொரு மகள் மைய்தா டீக்வொண்டோவில் நடந்த விளையாட்டுப் போட்டிக்கு தலைமை தாங்கினார். 2013 ல் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய கால்பந்து அணி வென்றபோது 50 மில்லியன் திர்ஹாம்கள் பரிசாகக் கொடுத்தார். இவரது மனைவி 25 மில்லியன் திர்ஹாம்களும், இவர் பேரர்கள் 12 மில்லியன் திர்ஹாம்களும் அணிக்குக் கொடுத்தார்கள். ஷெய்க் முஹம்மது அவர்கள் 2011 பாகிஸ்தான் வெள்ளத்தின் போது, கலீஃபா பின் ஸாயெத் அல் நஹ்யானின் வழிகாட்டுதல் படி உதவினார்கள். பாலஸ்தீனின் காஸா பகுதியில் 600 குடியிருப்புகளும், ஆப்கானிஸ்தானுக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பண உதவியும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லையில் 15,000 பேர்களுக்கு தற்காலிக குடியிருப்பும் கட்டிக் கொடுத்தார். 2000 ல் நெதர்லாந்தின் ரோட்டர்டாம் மாகாணத்தில் ஒரு மசூதி கட்ட 4 மில்லியன் யூரோக்கள் கொடுத்தார். 
ஷெய்க் முஹம்மதுவுக்கு முதல் மனைவியாக ஹிந்த் பிந்த் மக்தூம் பின் ஜுமா அல் மக்தூமை 1979 ல் மணந்தார். இவர் 12 குழந்தைகளுக்குத் தாயார் ஆவார். அதில் 1982 ல் பிறந்த ஆட்சிக்குரிய ஹம்தான் பின் முஹம்மது அல் மக்தூமும் ஒருவர். அடுத்து 2004 ல் ஜோர்டானின் மன்னர் ஹுசெய்னின் மகள் இளவரசி ஹாயா பிந்த் அல் ஹுசெய்னை மணந்தார். இவர் மூலம் 2007 ல் அல் ஜலீலா என்ற மகளும், 2012 ல் ஸாயெத் என்ற மகனும் பிறந்தார்கள். மகன் பிறந்ததை ஷெய்க் முஹம்மது தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்தார். இளவரசி ஹாயா 2000 ம் ஆண்டு சம்மர் ஒலிம்பிக்கில் ஜோர்டான் குதிரை விளையாட்டில் முதல் இஸ்லாமிய அரச குடும்பத்துப் பெண்ணாகக் கலந்து கொண்டார். சர்வதேச ஈக்வெஸ்டேரியன் சங்கத்திற்கு தலைவராகவும் இளவரசி ஹாயா இருமுறை இருந்தார். ஷெய்க் முஹம்மதுவுக்கு 10 ஆண் குழந்தைகளும், 14 பெண் குழந்தைகளும் உள்ளனர். இதில் நால்வர் மத்திய கிழக்கின் அரச குடும்பத்திற்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டனர். கப்பல் பணியாட்களுடன் சேர்த்து 115 பேர் தங்கும் வசதியுடன் 162 மீட்டர் நீளமுள்ள யாட் (YACHT) எனப்படும் உல்லாசப்படகை சொந்தமாக வைத்திருக்கிறார். “துபாய்” என்ற பெயரிலுள்ள இந்த உல்லாசப்படகு ஜெர்மனியின் லாம் வாஸ் (BLOHM+VOSS) என்ற நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்டது. ஷெய்க் முஹம்மது அவர்களின் படகு லோகோ (பால்ம் தீவு- துபாய்) தீவில் நிற்பதை கூகுள் எர்தில் காணலாம். இவர் குடும்பத்தின் சொத்து மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.
2005 ல் ஐக்கிய அரபு அமீரகங்கள் பாகிஸ்தான், சூடான், மாரிடானியா மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த குழந்தைகளை ஒட்டகப் பந்தயத்திற்கு பயன்படுத்துவதாக யூனிசெஃப் நிறுவனம் குற்றம் சாட்டி, அனைத்துக் குழந்தைகளுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டு சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். 2006 ல் ஷெய்க் முஹம்மது தனிப்பட்ட முறையில் ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகளை ஒட்டகப் பந்தயத்திற்கு பயன்படுத்துவதாக அமெரிக்காவின் ஃப்ளோர்டா மாகாணத்தில் முதல்தர வழக்கு தொடரப்பட்டது. இவர் சார்பில் வாதிட்ட அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்டவர் அமெரிக்காவைச் சேர்ந்தவராக இல்லாததால் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டினார்கள். மேலும் ஐ.நாவின் சேவை குழந்தைகள் மீது மிகவும் கவனமாக இருப்பதாக வாதாட 2007 ல் நீதிபதி செசில்லா அல்டோனாகா வழக்கைத் தள்ளுபடி செய்தார். 2007 ல் லண்டனைச் சேர்ந்த மெட்ரோ என்னும் பத்திரிக்கை தீவிரவாதி காலித் ஷெய்க் முஹம்மதுவுக்கும், ஷெய்க் முஹம்மதுவுக்கும் தொடர்பிருப்பதாக செய்தி வெளியிட்டு பின் மன்னிப்பு கேட்டு மறுப்பு தெரிவித்துக் கொண்டது. 2013 ல் மதுப்பழக்கமும், தவறான உடலுறவு பழக்கமும் கொண்ட மார்டி டலெவ் என்ற பெண்ணை சர்வதேச நாடுகளின் அழுத்தத்தாலும், அதிகப்படியான பத்திரிக்கை செய்தியினாலும் மன்னித்து விடுதலை செய்தார். 2013 ல் “ஹார்ஸ் டேக்” என்று ஒட்டப்பட்ட பெயரில் அபாயகரமான போதை மருந்துகள் துபாய்க்கு ஒட்டகம் சம்பந்தமாக வருகிறது என்று ‘தி டெலிகிராஃப்’ என்ற பத்திரிக்கைக் குற்றம் சாட்டியது. சமீபத்தில் சௌதி அரேபியாவின் மக்கா புனிதப்பள்ளியின் தலைமை இமாம் துபாய் இஸ்லாமியக் கலாச்சாரத்தை விட்டு போய்விட்டதாகவும், மற்ற மத்திய கிழக்கு இஸ்லாமிய நாட்டினர் அங்கு பயணிக்கக் கூடாது என்று கருத்து வெளியிட்டு பின்னர் வற்புறுத்தலால் திருப்பப் பெற்றுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக