புதன், 22 ஜூலை, 2015

ஐக்கிய அரபு அமீரக வரலாறு 5

துபாய் அமீரக வரலாறு

18 ம் நூற்றாண்டு வரை துபாயின் வரலாறுகள் அவ்வளவாகப் பதிவு செய்யப்படவில்லை. 1993-1998 ல் அபுதாபியிக்கும், துபாய்க்கும் இடையில் ‘ஷெய்க் ஸாயெத் சாலை’ என்று பெரும் சாலை போடப்பட்டது. அதற்காக தோண்டும்போது, மான்குரோவ் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் சதுப்புநில மரவகை கண்டுபிடிக்கப்பட்டது. இம் மரப்படிவம் தோராயமாக கி.மு. 7000 ஆண்டைச் சேர்ந்ததாக அறியப்பட்டு மனிதர்கள் வாழ்ந்த அடையாளத்தைச் சொன்னது. இந்தச் சாலைக்கும் தற்போது ஜெபெல் அலி துறைமுகம் அமைந்துள்ள கடற்கரைக்கும் 3 கி.மீ தூரத்திற்கு மேலுள்ளதால், சாலையில் அம்மரம் இருந்த பகுதிவரை கி.மு 3000 த்தில் கடற்கரைப்பகுதி இருந்ததாகக் கணித்தார்கள். இங்கு கால்நடைகளுடன் கூடிய பழங்குடியினர் வளமாக வாழ்ந்திருக்கிறார்கள். கி.மு 2500 க்குப் பிறகு, இங்கு பேரீச்சை மரங்கள் தோன்ற மக்கள் விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள். இந்த மேய்ச்சல்காரர்கள் அஸ்த் என்னும் அரபு பழங்குடியினரின் சிலையான பஜிர் (பஜிரா) என்றதை தெய்வமாக வழிபட்டு வந்தார்கள். சில ஆராய்ச்சியாளர்கள் சுமேரிய நாகரீகத்தின் ஒரு பிரிவான மகன் கூட்டத்தார் இங்கு வாழ்ந்திருக்கலாம் என்று கருதுகிறார்கள். ஏனென்றால் இந்த மகன் கூட்டத்தாரின் படிமங்கள் அருகாமை பஹ்ரைனில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. கி.மு. 2000 க்குப் பிறகு எந்த ஆதாரமும் மனிதர் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் துபாயில் கிடைக்கவில்லை. ஈரானை ஆட்சி செய்த அகாயிமெனிட்களும், சஸ்ஸானியர்களும் கவர்னர்கள் ஆளக்கூடிய சில பகுதிகளுக்கு சட்ரபி என்று அழைப்பார்கள். அப்படியான ஒரு சட்ரபியாக மனிதர்கள் நடமாட்டமில்லாத பகுதியாக பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, துபாய் இருந்தது. பின்னர் தற்போதைய ‘ஜுமெய்ராஹ்’ என்ற இடத்தில் கடற் கரையோரப் பகுதியில் வரும் படகுகளிலிருந்து பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் 6 ம் நூற்றாண்டிலிருந்து நிறுத்தப்பட்டிருந்தன.
7 ம் நூற்றாண்டிலிருந்து உமய்யாத்கள் ஆட்சியில் துபாயில் இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டது. உமய்யாத்கள் துபாய் பகுதியை மீன், முத்துக்குளிப்பு ஆகிய வாணிபங்களுக்கு முக்கிய இடமாக ஆக்கி இங்கிருந்து இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கு வாணிபம் செய்தார்கள். எழுத்து மூலமாக துபாய் 1095 ல் அபூ உபைத் அப்த் அல்லாஹ் அல் பக்ரி என்பவர் மூலம் “மொஜம் மா ஒஸ்தோஜம் மென் அஸ்மாயீ அல் பிலாத் வல் மவத்யீ” என்ற நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. காஸ்பிரோ பால்பி (GASPERO BALBI) என்ற வெனீஷிய முத்து வியாபாரி 1580 ல் இங்கு வருகை தந்து பல வெனீஷிய முத்துக்குளிப்பவர்களுடன் பணி புரிந்திருக்கிறேன் என்று பதிவு செய்திருக்கிறார். 19 ம் நூற்றாண்டில் அபுதாபியின் ஆதரவில் பனி யாஸ் பழங்குடியின் ஒரு பிரிவான அல் அபு ஃபலாசா (அல் ஃபலாசி குடும்பத்தினர்) என்ற அரசவம்சம் துபாயை ஆட்சி செய்தது. நாளடைவில் பெருகிப்போன அல் ஃபாலாசிக் குடும்பத்திலிருந்து பிரிந்த இன்னொரு குடும்பமான அல் மக்தூம் 1833 ல் துபாயின் ஆட்சிக்கு வந்தது. இவர்கள் அப்போது 800 பேர் அடங்கிய பழங்குடிகளாக மக்தூம் பின் புட்டி என்பவர் தலைமையில் இருந்தார்கள்.
துபாயின் ஆட்சியாளர்களாக 1833-1852 வரை ஷெய்க் மக்தூம் பின் புட்டி பின் சுஹைல், 1852-1859 வரை ஷெய்க் ஸயத் பின் புட்டி, 1859-1886 வரை ஷெய்க் ஹுஷுர் பின் மக்தூம், 1886-1894 வரை ஷெய்க் ராஷித் பின் மக்தூம், 1894-1906 வரை ஷெய்க் மக்தூம் பின் ஹுஷூர், 1906-1912 வரை ஷெய்க் புட்டி பின் சுஹைல், 1912-1929 வரை இரண்டாம் ஸயீத் பின் மக்தூம், 1929 ல் ஏப்ரல் மாதம் மூன்று நாட்கள் மட்டும் ஷெய்க் மனி பின் ராஷித், 1929-1958 வரை இரண்டாம் ஸயீத் பின் மக்தூம் இரண்டாம் முறையாக, 1958-1990 வரை ஷெய்க் இரண்டாம் ராஷித் பின் ஸயீத் அல் மக்தூம், 1990-2006 வரை ஷெய்க் மூன்றாம் மக்தூம் பின் ராஷித் அல் மக்தூம், 2006 லிருந்து தற்போது வரை ஷெய்க் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் ஆட்சி செய்து வருகிறார். இவர்களின் முந்தைய ஆட்சியாளர்களின் வரலாறுகள் அவ்வளவாகக் குறிப்பிடப் படவில்லை. 1929-1958 வரை இரண்டாம் ஸயீத் பின் மக்தூம் இவர் “எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்” தலைவர் அஹ்மத் பின் ஸயீத் அல் மக்தூமுடைய தந்தை ஆவார். இவருடைய ஆட்சி திடீரென்று மூன்று நாட்களுக்கு பறிக்கப்பட்டு தூரத்து உறவினர் ஷெய்க் மனி பின் ராஷித் வசம் போனது. தற்போதைய ஆட்சியாளருக்கு இவர் பாட்டனார் ஆவார். 1929-1958 வரை இரண்டாம் ஸயீத் பின் மக்தூம் ஆட்சியில் முத்துக்குளிப்பு வாணிபம் வீழ்ந்து பொருளாதாரம் தடைப்பட்டது. இருந்தாலும் இவர் மற்ற வாணிபங்களில் கவனம் செய்து வீழ்ச்சியை சரி செய்தார். இவருக்குப்பின் 1958-1990 வரை ஆட்சி செய்த ஷெய்க் இரண்டாம் ராஷித் பின் ஸயீத் அல் மக்தூம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை ஜனாதிபதியாகவும் இருந்தார். இவர் சிறிய அளவில் இருந்த துபாயின் வாணிபத்தை துபாய் க்ரீக் என்ற துறைமுகத்தின் வாயிலாக சர்வதேச அளவில் விரிவு படுத்தினார். இவர் மொழிந்த, “எனது பாட்டனார் ஒட்டகத்தில் சவாரி செய்தார். என் தகப்பனார் ஒட்டகத்தில் சவாரி செய்தார். நான் மெர்சிடிஸ் என்னும் விலையுயர்ந்த காரில் சவாரி செய்கிறேன். என் மகன் லாண்ட் ரோவர் என்னும் காரில் சவாரி செய்வார். அவர் மகனும் லாண்ட் ரோவர் காரில் சவாரி செய்வார். ஆனால், அவரின் மகன் மீண்டும் ஒட்டகத்தில் சவாரி செய்வார்” என்பது முத்தான வார்த்தைகளாகக் கருதப்படுகிறது. அதாவது 1969 ல் ஏற்றுமதி செய்யப்பட்ட துபாயின் எண்ணெய் வளம் சில காலங்களில் வற்றிவிடும் என்பதைக் கணித்துச் சொல்லப்பட்டதாகவும் கருதப்படுகிறது. ஆனால் இவர் ஆரம்பித்து வைத்த துபாயின் சர்வதேச வாணிபம் அந்த எண்ணெய் இழப்பீட்டைச் சரி செய்துவிடும் என்று எண்ணப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக