புதன், 29 ஜூலை, 2015

ஈராக் வரலாறு 3

குவைத் ஆக்கிரமிப்புக்குப் பிறகு, அமெரிக்கா ஈராக் மீது உலகப் பொருளாதாரத்தடை விதித்தது. இதனால் ஈராக் மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சி அடைந்து வறுமையுடனும், நோய்களுடனும் மக்கள் அவதிப்பட்டனர். இதனால் தென், மத்திய ஈராக்கில் பலர் இறந்து போனார்கள். 1996 ல் ஐ.நா. சபை ‘எண்ணெய்காக உணவு’ என்ற திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தடையைத் தளர்த்தியது. இதன்பின் ஜார்ஜ் புஷ் தலைமையிலான அமெரிக்கா, ஈராக் அதிபயங்கர ஆயுதங்களை வைத்திருப்பதாக குற்றம் சாட்டி, சதாம் ஹுசெய்னை தூக்கிலிடும்வரை நடத்திய நாடகத்தை உலகமே அறியும். கண் துடைப்புக்காக அதிபயங்கர ஆயுதங்களைக் கண்டுபிடிக்க ரிச்சர்ட் பட்லர் தலைமையில் அனுப்பப்பட்ட குழு, ஈராக் ஒத்துழைக்கவில்லை என்ற முடிவை ஐ.நாவுக்கு தெரியப்படுத்தியது. பின்னால் வந்த பெண்பித்த அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் ஈராக்கின் இராணுவ, அரசு நிலைகள் மீது இராணுவத் தாக்குதல் நடத்தினார். 9/11 அமெரிக்கத் தாக்குதலுக்குப் பின் சௌதியைச் சேர்ந்த ஒசாமா பின் லாடன் என்ற கோடீஸ்வரர் தான் காரணம் என்று அல்வாவில் இனிப்பு இருக்கிறது என்று கண்டுபிடிப்பது போல் அமெரிக்க உளவுத்துறை கண்டுபிடிக்க, அமெரிக்க வெளியுறவுத்துறைச் சட்டப்படி, ஈராக்கின் பாத் கட்சியை ஆட்சியைவிட்டு விலக்க அமெரிக்கா முடிவு செய்தது. ஒரு நாட்டின் ஆட்சியை மாற்ற அந்நாட்டு மக்களுக்குத்தான் உரிமை இருக்கிறது. ஆனால், உலக அதிசயமாக அமெரிக்கா 99% சதவீத வாக்குகளை செனெட் சபையில் (அதுவும் தன் அரசாங்கத்தில் பெற்று) பெற்று ஈராக் ஆட்சியை விரட்ட அனுமதி பெற்றது. கண்டம் வேறு, நாடு வேறு, இனம் வேறு, மொழி வேறு எங்கேயோ இருக்கும் அமெரிக்கா, ஈராக்கின் ஆட்சியை நீக்க தீர்மானம் போட்டது. ஈராக்கைச் சுற்றியுள்ள அனைத்து முஸ்லீம் நாடுகளும் (நான்கு கலீஃபாக்களுக்குப் பிறகு, உண்மை ஜிஹாதை மறந்து பாழாப்போன தனது பழங்குடி இனங்களே ஆள வேண்டும் என்ற குடும்ப பெருமைக்காகவே ஆளும் நாடுகள் வேடிக்கை மட்டும் பார்த்தன.) தள்ளி இருக்கும் விளக்கை தானே அணைக்கிறார்கள் நமக்கென்ன என்று இருந்துவிட்டார்கள். அமெரிக்க அதிபர் ஈராக் ஐ.நாவின் சொல்லுக்கு மதிப்பளிக்கவில்லை என்று கூப்பாடு போட்டு, இங்கிலாந்துடன் படை சேர்ந்து ஈராக்கை ஆக்கிரமித்தது. சுற்றியுள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளும் கூட்டுப்படைகளுக்கு விமானதளம், துறைமுகம், எரிபொருள், உணவு ஆகியவற்றைக் கொடுத்து தங்கள் நன்றியை தெரியப்படுத்திக் கொண்டன. இதில் ஈராக்கின் எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்கும் திட்டமும் இருந்ததாக இன்று பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். 2003 ல் சதாம் ஹுசெய்ன் பதுங்கு குழியில் மயக்க மருந்து பீய்ச்சப்பட்டு பிடித்து கண்துடைப்பு வழக்காடி தூக்கிலிடப்பட்டார். இன்றுவரை ஈராக் என்னும் ஆதியில் மனிதன் சுமேரிய நாகரீகத்திலிருந்து வாழ்ந்ததாகவும், உலக கலாச்சாரத்திற்கும், அறிவுக்கும் வித்திட்ட அந்நாடு தினசரி பல உயிர்களை தீவிரவாத குண்டு வெடிப்பின் மூலம் இழந்து கொண்டிருக்கிறது. அல் காயிதா என்ற அமைப்பே இல்லை. ஆனால் இன்னும் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு, அமெரிக்கா முஸ்லீம் நாடுகளில் முஸ்லீம்களின் உயிர்களை வேட்டையாடிக்கொண்டிருக்கிறது. ஒருநாளைக்கு குறைந்தது 50 உயிர்கள் என்றால் 2003 லிருந்து 2015 வரை சராசரி எதிர்சண்டை இல்லாமல் 300,000 லட்சம் உயிர்களைக் கொன்றிருக்கிறார்கள். பல ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு அமெரிக்கா குண்டு வீசிக் கொன்றால் அது தீவிரவாதிதான். இப்படி குண்டு வீசி திருமண கோஷ்டிகள், மத ஊர்வலங்கள், பள்ளிக்குழந்தைகள், ஈராக் காவலர்கள், அப்பாவிக் குழந்தைகள் என்று பல்லாயிரம் பேரைக் கொன்றிருக்கிறார்கள். ஈராக், ஆப்கானிஸ்தான் போரில் பத்து லட்சத்திற்கும் அதிகமான பேர்களைக் கொன்ற அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷே ஒரே ஒரு (சாரி - SORRY) மன்னியுங்கள் என்று ஆட்சியை விட்டுப் போகும்போது சொல்லிவிட்டார். இப்போது அமெரிக்க இராணுவம் ஏற்கனவே அச்சடித்து வைக்கப்பட்ட மன்னியுங்கள் என்ற அறிக்கையை ஒவ்வொரு தவறான குண்டுவீச்சின் போதும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது ஈராக்கில் இருக்கும் ஆட்சி மக்களின் ஆட்சியல்ல அமெரிக்காவால் வலுக்கட்டாயமாக ஈராக் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஆட்சி.
மக்கா நகரின் ஷரீஃபாகவும், எமிராகவும் ஹுசெய்ன் பின் அலி என்பவர் இருந்தார். அவரின் மூன்றாவது மனைவி அதிலா கானுமுக்கு பிறந்தவர் இளவரசர் ஸெய்த். இவர்தான் ஈராக்கின் ஹாஷிமிட்கள் ஆட்சியாளராக இருந்தார். இவர் இஸ்தான்புல் கலடாஸராய் உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர். பின்னர் கான்ஸ்டாண்டிநோபில், ஆக்ஸ்ஃபோர்டின் பல்லியோல் பல்கலைக்கழகங்களில் பயின்றார். 1916 லிருந்து 1919 வரை வடக்கு அரபு இராணுவத்தின் தளபதியாக இருந்தார். 1918 ல் மட்டுப்படுத்தப்பட்ட சிரியாவின் ஆட்சியாளராகவும் இருந்தார். ஃப்ரென்ச் அதிகாரத்தில் இருந்தபோது 1923 ல் ஈராக்கின் குதிரைப்படைக்கு கர்னலாக இருந்தார். 1930 ல் ஈராக்கின் தூதராக பெர்லின் மற்றும் அங்காராவிலும், 1950 ல் லண்டனிலும் இருந்தார். ஜெனெரல் முஹம்மது நஜீப் அர் ருபாஃஇ என்பவர் மன்னராட்சி கூடாது என்று சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று ஈராக்கின் மன்னர் இரண்டாம் ஃபைசலைக் கொன்றார். அதனால் 1958 ல் இளவரசர் ஸெய்த் ஈராக்கின் ஆட்சியாளரானார். இவர் கிரீசைச் சேர்ந்த இளவரசி ஃபஹ்ரெல்னிசா என்பவரை மணந்து அவர் மூலம் இளவரசர் ராஃஅத் பின் ஸெய்த் என்ற மகனைப் பெற்றார். இளவரசர் ஸெய்த் 1970 ல் மரணமடைந்து ஜோர்டான் அம்மானில் ரக்தான் அரண்மனையில் ராயல் மொசோலியமில் அடக்கம் செய்யப்பட்டார். இவருக்குப்பிறகு, இளவரசர் ராஃஅத் பின் ஸெய்த், ஹாஷிமிட் மன்னராக ஈராக்கின் ஆட்சிக்கு வந்தார். தந்தை வழியில் ஜோர்டானின் மன்னர் தலாலுக்கும், ஈராக்கின் காஸிக்கும் மிக நெருங்கிய உறவினர் (தம்பி மகன்?). இவர் எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவிலும், 1960 ல் கேம்பிரிட்ஜின் கிறிஸ்ட் கல்லூரியில் இளங்கலையும், 1963 ல் முதிர்கலைப்பட்டமும் பெற்றார். இவர் ஜோர்டானின் மன்னர்கள் ஹுஸ்ஸெய்ன் மற்றும் இரண்டாம் அப்துல்லாஹ்வுக்கும் கூட நெருங்கிய உறவினர். இவர் ஸ்வீடனைச் சேர்ந்த மார்கரெடா இங்கா எலிசபெத் லிண்ட் என்ற மஜ்தா ராதை மணந்தார். அவர் மூலம் இவருக்கு இளவரசர்கள் ஸெய்த் பின் ராத், மிரித் பின் ராத், ஃபிராஸ் பின் ராத், ஃபைசல் பின் ராத் என்ற மூன்று மகன்களும், இளவரசி ஃபக்ரெல்னிசா பின்த் ராத் என்ற மகளும் பிறந்தார்கள்.
சதாம் ஹுசெய்ன் வரலாறு 
ஈராக்கின் திக்ரித் மாகாணத்தில் அல் பு நாசீர் என்ற பழங்குடியினத்தின் ஒரு பிரிவாக அல் பெகத் பழங்குடியினர் இருந்தார்கள். அவர்களில் சுபா துல்ஃபாஹ் அல் முஸ்ஸல்லத் என்ற பெண்மனிக்குப் பிறந்தவர் தான் சதாம் ஹுசெய்ன் (அனுகூலமானவர்). தன் தந்தை ஹுசெய்ன் ஆபித் அல் மாஜிதை அறியாதவர். தந்தையார் சதாம் ஹுசெய்ன் பிறப்பதற்கு முன்பே காணாமல் போய்விட்டார். 13 வயதான மூத்த சகோதரரும் புற்று நோயால் இறந்து போனார். சிறு குழந்தையாய் இருந்த சதாம் ஹுசெய்னை அவரது மாமன் கைய்ரல்லாஹ் துல்ஃபாஹ் எடுத்துச் சென்று வளர்த்தார். யாருமில்லாத சதாம் ஹுசெய்னின் தாயார் மறுமணம் செய்து கொண்டார். அதன் மூலம் சதாமுக்கு மூன்று ஒன்றுவிட்ட சகோதரர்கள் இருந்தார்கள். மூன்று வயதானபோது திரும்பிவந்த சதாம் ஹுசெய்னை அவரது தாயாரின் கணவர் இப்ராஹீம் அல் ஹஸ்ஸன் கொடுமைப்படுத்தினார். இதனால் 10 வயதானபோது சதாம் ஹுசெய்ன் மீண்டும் பாக்தாத் நகரம் வந்து மாமன் கைய்ரல்லாஹ் துல்ஃபாஹ்வுடன் சேர்ந்து கொண்டார். கைய்ரல்லாஹ் துல்ஃபாஹ் பிரிட்டிஷாருக்கு எதிராக நடந்த ஆங்கிலோ ஈராக் போரில் அனுபவம் பெற்றவர். அவர் திக்ரித் நகரத்தைச் சேர்ந்தவராதலால் அங்கு அவருக்கு பல ஆலோசகர்களும், ஆதரவாளர்களும் இருந்தார்கள். மாமனின் ஆதரவில் பாக்தாதின் தேசிய பள்ளியில் படித்தார். பின் மூன்றாண்டுகள் சட்டம் படித்தார். 1957 ல் இருபது வயதானபோது பாத் புரட்சிக் கட்சியில் சேர்ந்தார். நடுநிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும் பணியாற்றினார். அப்போது மத்திய கிழக்கு நாடுகளில் பரவலாக இருந்த மன்னராட்சியை எதிர்த்து பல நாடுகளிலும் புரட்சி நடந்தது போல் ஈராக்கிலும் ஆட்சியாளரை எதிர்த்து புரட்சி நடந்தது. காலனி ஆதிக்கவாதம், நில முதலாளிகள், வாணிப செல்வந்தர்கள், பழங்குடியினத் தலைவர்கள் இவர்களே பலம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். எகிப்தின் கமால் அப்தெல் நாசர், சதாம் ஹுசெய்ன் போன்ற இளம் பாத் கட்சியினரை ஆதரித்தார். 1950- 60 ன் மத்தியில் எகிப்து நாசரின் புதிய எழுச்சியால் எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் மன்னராட்சி ஒழிந்தது. அப்போது சூயஸ் கால்வாய் பிரச்சினையும் உச்சத்திலிருந்ததால், பல நாடுகளில் பிரிட்டிஷ், ஃப்ரான்ஸ் ஆதிக்கத்தை எதிர்த்து மக்கள் போரிட்டனர்.
சதாம் ஹுசெய்ன் பாத் கட்சியில் சேர்ந்த சமயத்தில் அதன் இராணுவ அதிகாரி ஜெனெரல் அப்த் அல் கறீம் காசீம் என்பவர் இரண்டாம் ஃபைசலை ‘ஜூலை 14’ புரட்சியின் மூலம் ஆட்சியிலிருந்து விரட்டி இருந்தார். 16 உறுப்பினர்களைக் கொண்ட காசிமின் மந்திரிசபையில் 12 உறுப்பினர்கள் பாத் கட்சியைச் சேர்ந்தவர்கள். எகிப்து கமால் அப்தெல் நாசரின் ஐக்கிய அரபு குடியரசில் காசீம் சேர மறுத்ததால், பாத் கட்சி அவருக்கு எதிரானது. அதை ஈடுகட்ட எப்போதுமே பாத் கட்சிக்கு எதிராக இருக்கும் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் காசீம் கூட்டு வைத்துக் கொண்டார். பாத் கட்சியினர் காசீமைக் கொல்லத் திட்டம் தீட்டினார்கள். பாத் கட்சியின் உறுப்பினர்கள் மிகவும் தீவிரமானவர்கள், நன்கு படித்தவர்கள், மாணாக்கர்கள், இளைஞர்கள் என்று நிரம்பி இருந்தார்கள். இக்கொலைத் திட்டத்திற்கு சதாம் ஹுசெய்ன் தலைமை ஏற்றார். இதற்காக அவரும், சிலரும் டமாஸ்கசில் பயிற்சி பெற்றார்கள். 1959 அக்டோபர் 7 ல் அல் ராஷித் சாலையில் காசீமைக் கொல்லத் திட்டமிடப்பட்டது. காரில் காசீமுடன் பின் இருக்கையில் இருப்பவர் காசீமைக் கொல்ல பொறுப்பெடுத்திருந்தார். திட்டமிட்டபடி வந்து கொண்டிருந்த காரின் முன்புறம் சென்று சதாம் ஹுசெய்ன் கைத்துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் கார் ஓட்டுனர் கொல்லப்பட்டு, அப்த் அல் கறீம் காசிமும் துப்பாக்கியாலும், காரின் பின்புறம் இருந்தவராலும் தாக்கப்பட்டார். கொலையாளிகள் காசீம் இறந்தவிட்டதாகக் கருதி சென்றுவிட்டார்கள். ஆனால் காசீம் தப்பித்துவிட்டார். அப்போது பாத் கட்சியில் தீவிரமான 1000 உறுப்பினர்களுக்கும் கீழ்தான் இருந்தனர். கொலையில் ஈடுபட்ட சிலர் பாத் கட்சியின் பிறப்பிடமான சிரியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றனர். சதாம் ஹுசெய்ன் பாத் கட்சியின் தலைவரான மிசெல் அஃப்லக் என்பவரின் ஆதரவின் கீழ் இருந்தார். கொலைக்கு காரணமான ஆறு பேர் சிறைப்பிடிக்கப்பட்டு மரணதண்டனை கொடுக்கப்பட்டார்கள். ஆனால், என்ன காரணமோ தண்டனை நிறைவேற்றப்படவில்லை. 1959 ல் சதாம் ஹுசெய்ன் எகிப்துக்கு தப்பித்துப் போய் 1963 வரை அங்கிருந்தார். சில வெளிநாடுகளும் அப்த் அல் கறீம் காசீமை வெறுத்தனர். அவர் குவைத் மீது ஆக்கிரமிப்பு செய்ய இருந்தார். 1960 ல் அமெரிக்க CIA அமைப்பு காசீமை விஷமருந்து துவைக்கப்பட்ட கைக்குட்டையால் கொல்ல முயன்றது. ஆனால் அதிலிருந்து காசீம் தப்பித்துக் கொண்டார். ஆனால், ஈராக்கின் இராணுவ அதிகாரிகள் ‘ரமதான் புரட்சி’ என்றதின் கீழ் அப்த் அல் கறீம் காசீமை ஆட்சியைவிட்டுத் தூக்கி அப்துல் சலாம் ஆரிஃப் என்பவரை அதிபராக்கினார்கள். ஆரீஃப் அனைத்து பாத் கட்சி உறுப்பினர்களையும் கைது செய்து பாத் கட்சியைக் கலைக்க உத்தரவிட்டார். 1966 ல் அப்துல் சலாம் ஆரீஃப் ஒரு விமான விபத்தில் பலியானார். இராணுவத்தில் பாத் கட்சியின் ஆதரவுள்ள ஒருவரால் விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று ஒரு கருத்து நிலவியது. பின் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. உடனடியாக அப்த் அர் ரஹ்மான் அல் பஸ்ஸாஸ் என்பவர் சில நாட்களுக்கு ஆட்சி செய்தார். நிரந்தரமாக அவர் ஆள்வதற்கு மூன்றில் இரண்டு மடங்கு ஆதரவு தேவை. அது கிடைக்காமல் அவர் தோல்வி அடைய இறந்து போன அப்துல் சலாம் ஆரீஃபின் சகோதரர் அப்துல் ரஹ்மான் ஆரீஃப் ஈராக்கின் அதிபரானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக