இராணுவ ஜெனெரல் தாஹா அல் ஹாஷிமி துருக்கிக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தை பக்ர் சித்கி நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். தரைப்படை, வான்படையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். தாஹாவுக்கு ஈராக்குக்கு வராதீர்கள் என்று எச்சரிக்கை செய்தார். மன்னர் பிரிட்டிஷ் தூதர் ஸர். ஆர்சிபால்ட் கிளார்க் கெர்ரை ஆலோசனைக் கேட்க, அவர் அனைத்து மந்திரிகளையும் கூட்டி அவசர ஆலோசனை செய்யச் சொன்னார். அதன்படி மந்திரிகள் ஆலோசனை நடைபெற, பக்ர் சித்கி எச்சரிக்கும் வண்ணம் சில இடங்களில் குண்டுகளை வீசிவிட்டு படையுடன் அரண்மனையை நோக்கி வந்தார். நூரி அல் சாஃஇத் என்ற மந்திரி தவிர, அனைத்து மந்திரிகளும் பக்ர் சித்கின் சொல்படி ஹிக்மத் சுலைமானை ஆட்சியில் வைக்க ஒப்புக் கொண்டார்கள். பிரிட்டிஷ் தூதரின் ஆலோசனைப்படி ஹிக்மத் சுலைமானை அழைக்க, அவர் பக்ர் சித்கியும், லதீஃப் நூர் என்பவரும் இராணுவ புரட்சிக்கான காரணத்தை விளக்கி எழுதிய கடிதத்துடன் அரண்மனைக்கு வந்தார். யாசீன் அல் ஹாஷிமி ராஜினாமா செய்தார். யாசீனால் இருமுறை பிரதம மந்திரியாகவும், அப்போது இராணுவ மந்திரியாகவும் இருந்த ஜாஃபர் அல் அஸ்கரி பக்ர் சித்கின் உத்தரவுப்படி அரண்மனைக்கு வந்து கொண்டிருக்கும் இரண்டு பட்டாலியன் படைகளை தனக்குக் கீழ்படியும் அதிகாரிகள் மூலம் திசை திருப்பினார். இதுபோல் ஏதும் நடக்கும் என்று எண்ணியிருந்த பக்ர் சித்கி விமானபடை வீரர் அக்ரம் முஸ்தபாவையும், இஸ்மாயில் தோஹல்லா என்பவரையும் அனுப்பி ஜாஃபர் அல் அஸ்கரியைக் கொன்றார். ஜாஃபரின் கொலை பழைய ஆட்சிக்கு விடப்பட்ட சவாலாகக் கருதப்பட்டது. நூரி அல் சாஃஇத் கெய்ரோவுக்கும், யாசீன் அல் ஹாஷிமி இஸ்தான்புல்லுக்கும் நாடு கடத்தப்பட்டார்கள். பக்ர் சித்கி பாக்தாத நகர வீதிகளில் இராணுவ அணிவகுப்பை நடத்தி ஈராக்கில் புதிய ஆட்சியைப் பறைசாற்றினார். 1937 ல் துருக்கிக்குச் செல்லும் வழியில் மோசூலில் விமானப்படைத் தோட்டத்தில் பக்ர் சித்ரி கொல்லப்பட்டார். உடனிருந்த இராணுவ அதிகாரி முஹம்மது அலி ஜவாதும் கொல்லப்பட்டார். சுலைமானின் பத்து மாத ஆட்சி முடிவுக்கு வந்தது. அவர் ராஜினாமா செய்ய ஜமீல் அல் மிட்ஃபாய் ஆட்சிக்கு வந்தார். 1941 ல் இரண்டாம் உலகப்போரின்போது, கோல்டன் ஸ்கொயர் என்னும் அதிகாரிகளால் அப்த் அல் லாஹ் என்பவர் பதவி நீக்கப்பட்டார். அவர் நாஜிகளைச் சார்ந்திருந்ததால் இந்த நடவடிக்கையை ராஷித் அலி என்பவர் எடுத்தார். 1945 ஈராக் ஐ.நா. சபையில் உறுபினராகி அராப் லீகிலும் இணைந்தது. அதேசமயத்தில் குர்திஷ் தலைவர் முஸ்தபா பர்ஸானி என்பவர் ஈராக்கின் மத்திய ஆட்சியை எதிர்த்து புரட்சி செய்தார். புரட்சி தோல்வி அடைந்ததால் அவரும் ஆதரவாளர்களும் சோவியத் யூனியன் தப்பிச் சென்றார்கள். 1948 ல் ஈராக் பிரிட்டிஷுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை எதிர்த்து அல் வத்பாஹ் கிளர்ச்சி உண்டானது.
1958 ல் ஜோர்டானின் மன்னர் ஹுஸ்ஸெய்ன் மற்றும் அப்த் அல் லாஹ் ஆகியோர் ஹாஷிமிட்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டி எகிப்து சிரியா கூட்டுடன் இணைய வேண்டுமென்று ஈராக்கை அழைத்தனர். பிரதம மந்திரி நூரி அஸ் ஸைத், குவைத்தையும் அழைத்தார். இக்கூட்டுக்கு பிரிட்டிஷ் எதிர்ப்பு தெரிவித்தது. எகிப்து நாசரின் கொள்கைகளால் கவரப்பட்ட பிரிகேடியர் அப்த் அல் கறீம் காசிம், கர்னல் அப்துல் சலாம் ஆரிஃப் ஆகியோர் ஈராக்கின் ஹாஷிமிட் ஆட்சியை 1958 ல் நீக்கினார்கள். பின் ஜோர்டானின் கோரிக்கையை நிராகரித்து ஈராக்கை சுதந்திர நாடாக அறிவித்தார்கள். அப்த் அல் கறீம் காசிம் சோவியத் யூனியனிலிருந்த முஸ்தபா பர்ஸானியை ஈராக்குக்கு வரவழைத்து குர்திஷ்கள் அதிகமுள்ள வடக்குப்பகுதியில் அரசுப்படைகளுக்கு அவரை அதிகாரமுள்ளவராக ஆக்கி முதலாம் குர்திஷ் ஈராக் போருக்கு வழிவகுத்தார்.
காசீம் படுகொலைக்குப்பிறகு, பாத் கட்சியின் சார்பில் பிரதம மந்திரியாகவும், ஜெனரலாகவும் அஹ்மத் ஹசன் அல் பாக்ர் மற்றும் கர்னல் அப்துல் சலாம் ஆரீஃப் ஆகியோர் ஈராக்கின் ஆட்சியை 1963 ல் கைப்பற்றினார்கள். அதேகாலகட்டத்தில் நான்கு மாதங்களுக்குப்பிறகு, சிரியாவிலும் பாத் கட்சி ஆட்சியைக் கைப்பற்ற, சிரியா, ஈராக்குக்கு குர்துக்களை எதிர்க்க விமானம், ஆயுதம் தாங்கிய வாகனங்கள், 6000 இராணுவ வீரர்களைத் தந்து உதவியது. பல மாதங்களுக்குப்பிறகு, அப்தல் சலாம் முஹம்மது என்பவர் கடும் முயற்சியில் பாத் கட்சியின் ஆட்சியை விரட்டினார். 1966 ல் அதிபர் அப்துல் சலாம் ஆரீஃப் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். அவருக்குப் பிறகு, அவர் சகோதரர் ஜெனெரல் அப்துல் ரஹ்மான் ஆரீஃப் ஆட்சிக்கு வந்தார். இவர் குர்துக்களின் புரட்சியை முறியடிக்க பெரும்பாடுபட்டார். 1967 ல் முஸ்தபா பர்ஸானி ஆறுநாள் படையெடுப்பாக ரவாண்டுஸுக்கு அருகில் மவுண்ட் ஹண்ட்ரின் போரில் ஆளும் பாத் கட்சிக்கு பெரும் சேதத்தை விளைவித்து 1968 ல் அஹ்மது ஹசன் அல் பக்ர் தலைமையில் ஆட்சியைப் பிடித்தார். பாத் கட்சி மக்களிடையே குர்திஷ்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்தது. சோவியத் யூனியன் ஈராக் மக்களை குர்திஷ்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டது. பாத்துக்கும், குர்திஷ்களுக்குமான வேறுபாட்டில் ஏறக்குறைய 100,000 பேர் காயமடைந்தார்கள். முதலாம் குர்திஷ் போரின்போதே ஆளும் கட்சிக்கும், குர்திஷ்களுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தமானது. அதன்படி, ஆட்சியில் குர்திஷ்களுக்கும் அதிகாரமுள்ள பதவிகள் கொடுக்கப்பட்டன. 1972 ல் ஈராக் அரசு சோவியத் யூனியனுடன் நெருங்கிய உறவு கொண்டு அரபுலகை விட்டு விலகியது போல் தோன்றியது. குர்திஷ்கள் அருகாமை ஈரானுடன் இராணுவத் தொடர்பு வைத்திருந்தார்கள். 1974 ல் மீண்டும் இரண்டாவது குர்திஷ் ஈராக் போர் நடந்தது. 1979 ல் அதிபர் அஹமது ஹசன் அல் பக்ர் சதாம் ஹுசெய்ன் (இவரைப் பற்றி பின்னால் பார்ப்போம்) என்பவரால் கட்டாயமாக ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். சதாம் ஹுசெய்ன் அதிபராகவும், ரெவல்யுஷனரி கமாண்ட் கவுன்சிலுக்கு சேர்மனாகவும் பதவியேற்றார். 1980 லிருந்து எட்டு ஆண்டுகள் எல்லைகளுக்காகவும், குர்திஷ் ஆதரவுக்காகவும் ஈரானுடன் சதாம் ஹுசெய்ன் போர் தொடுத்தார். இதனால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் சரிந்தது. இறுதியில் ஐ.நாவின் தலையீட்டின் பேரில் அவரவர் எல்லைகளை வகுத்துக்கொண்டு, போரை நிறுத்திக் கொண்டார்கள். ஈரான் ஈராக் போர் இருதரப்பிலும் ஐந்து லட்சம் இராணுவத்தினரும், குடிமக்களும் இறந்து போக, பல லட்சம் பேர் காயமடைய பெரும் பொருளாதார வீழ்ச்சியுடன் முடிந்தது. 1990 ல் தனது எண்ணெய் கிணறுகளிலிருந்து குவைத் அனுமதி இல்லாமல் மில்லியன் கணக்கான காலன்கள் எண்ணெய் திருடிவிட்டது என்று குவைத் மீது ஈராக் ஆக்கிரமிப்பு செய்தது. உடனடியாக குவைத்திலிருந்து வெளியேற ஐ.நா அறிவுறுத்தியும் ஈராக் படைகள் வெளியேறாததால், அமெரிக்காவுடன் பல நாடுகள் ஒன்று சேர்ந்து கூட்டுப்படைகளுடன் ‘டெசெர்ட் ஸ்டார்ம்’ என்னும் தாக்குதலை ஈராக் படைகள் மீது நடத்தி ஏறக்குறைய 30,000 இராணுவ வீரர்களையும், பல ஆயிரம் பொதுமக்களையும் கொன்று குவித்தார்கள். 1991 ல் குர்திஷ்கள் அதிகமுள்ள வடக்கு ஈராக்கில் ஷியா பிரிவினர் புரட்சியில் இறங்கினார்கள். ஒரு கட்டத்தில் அதிபர் சதாம் ஹுசெய்னைக் கொல்லவும் முயற்சித்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக