புதன், 13 ஆகஸ்ட், 2014

ஸலாவுத்தீன் வரலாறு 7



பாகம் : 13
ஸலாவுத்தீன் தனக்கெதிரான ஒவ்வொரு தடைகளையும் கவன மாக நீக்கினார். மிக குறுகிய இடைவெளியில் கிழக்கு பகுதியில் முஸ்லீம்களின் சிறந்த தலைவராக விளங்கினார். தலையாய விதி அவரை தேர்ந்தெடுத்து அவ்வப்போது சிலுவைப் போராளிகளிட மிருந்து முஸ்லீம்களை காப்பாற்றச் செய்தது.
நூருத்தீனுக்கு பிறகு சிரியா
“ அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான் அவன் அவர்களை நேசிப்பான். அவனை அவர்களும் நேசிப்பார்கள். அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள். காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள். அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள். இது அல்லாஹ்வின் அருட் கொடையாகும்.” (அல் மாயிதா 5:54)
நூருத்தீன் இறப்பிற்குப் பிறகு, பரம்பரை வாரிசாக அவர் மகன் அல் மாலிக் அஸ் ஸாலிஹ் இஸ்மாயில் பதவிக்கு வந்தார். வெறும் 11 வயதே ஆனவரானதால் அவருக்கு ஆதரவு இல்லை. ஷம்ஸ் அத்தீன் இப்னு அல் முகத்திம் என்பவர் அவருக்கு காப்பாளராகவும், நிர்வாகஸ்தராகவும் இருந்தார். சிரியாவின் இளவரசர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டும், அவதூறு கூறியும், மற்றவரை பலவீனப் படுத்தியும், வீழ்த்துவதிலும் குறியாய் இருந்தனர். சிறு வயது அல் மாலிக் நாட்டின் நடப்பு தெரியாமல் இருந்தார். மற்ற இளவரசர்கள் ஆட்சியை ஆக்கிரமித்து கொண்டு அவரை கைப் பொம்மையாக வைத்திருந்தனர். மோஸூலின் ஆட்சியாளராக இருந்த அல் மாலிக்கின் உறவினன் ஸைஃப் அத்தீன் என்பவன் நூருத்தீனின் நகரான அல் ஜஸீராஹ்வை (டிக்ரிஸ் மற்றும் யூப்ரடிஸ் நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி) கைப்பற்றி மற்ற இளவர சர்களை ஆள்வதற்கு அனுமதி அளித்தார். சில இளவரசர்கள் சிலுவைப் போராளிகளின் உதவியை நாடி அடுத்தவரை வீழ்த்த திட்டம் தீட்டினர். அரசு நிர்வாகத்தில் பிரிவுகளும், குழப்பங்களும் தோன்றி நாட்டை பலவீனப் படுத்தின. விதி ஸலாவுத்தீனை சிரியாவில் தலையிடச் செய்து வெட்கக்கேடான செயல்களில் இருந்தும், வெறுக்கத்தக்க பிரிவினைகளில் இருந்தும் நாட்டைக் காக்கச் செய்தது.
டமாஸ்கஸில் ஸலாவுத்தீன்
ஸலாவுத்தீன் சிரியாவின் ஒழுங்கின்மையையும், தடைகளையும் நன்கு அறிவார். சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். தவறான நேரத்தில் தான் தலையிடுவதால் சிரியா மக்களின் கோபத்திற்கும், எதிர்ப்புக்கும் ஆளாக நேருமோ என்று அஞ்சினார். நூருத்தீனிடம் காட்டிய அதே நேசத்தை சிறியவர் மகன் அல் மாலிக்கிடமும் காட்டினார். நூருத்தீனுக்குப் பிறகு, வெள்ளிக் கிழமை தொழுகை போதனைகளை அவர் பெயரில் துவங்கியும், அவர் பெயரில் நாணயங்கள் வெளியிட்டும் அவர் ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பது போல் காட்டிக் கொண்டார்.
டமாஸ்கஸ் மக்கள் ஸைஃப் அத்தீன் அல் ஜஸீராஹ்வை கைப்பற்றிக் கொண்டதும், சிறுவர் அல் மாலிக்கின் பாதுகாவலர் ஷம்ஸ் அத்தீன் கள்ளத்தனமாக ஜெருசலத்தின் சிலுவைப் போராளிகளுடன் உறவு வைத்திருப்பதும், நூருத்தீனின் மற்ற இளவரசர்கள் ஆட்சியில் தலையிட்டு அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்வதையும் நன்கு அறிந்திருந்தனர். வேறு வழி யோசிக்காமல் அம் மக்கள் ஸலாவுத்தீனுக்கு செய்தி அனுப்பி தங்கள் நாட்டைக் கைப்பற்றி  குழப்பங்களுக்கு முடிவு கட்டி, தீயவர்களின் கைகளிலிருந்து விடுவித்து அவரையே ஆளும்படி வேண்டினர். தனது வலிமையின் வாயிலாக செய்ய வேண்டியதை அவர் நினைத்தபடி சிரிய மக்களின் வேண்டுதல் வாயிலாக செய்ய வேண்டிய நேரம் வந்தது. அவரின் பொறுமைக்கு முற்றுப் புள்ளி விழுந்தது.
பாகம் : 14
சிரிய மக்களே கை நீட்டி தன்னிடம் உதவி கோருவதை கண்டு ஸலாவுத்தீன் பெரு மகிழ்ச்சி அடைந்தார். சிரிய மக்களே சரியான தீர்ப்பு தந்தபின் அவர் அல்லாஹ்வின் நம்பிக்கையுடனும், தன் படைபல உதவியுடனும், தன்னம்பிக்கையுடனும் ஃப்ராங்க்ஸுக்கு சிறிதும் பயப்படாமல் டமாஸ்கஸ் புறப்பட்டார். முதலில் அவர் பஸ்ரா நகருக்கு பயணித்தார். அதன் இளவரசர் நல்ல முறையில் ஸலாவுத்தீனை வரவேற்றார். பின் ரபி அல் அவால் 570 A.H. ல் (1174 C.E. ) டமாஸ்கஸ் வந்தடைந்தார். அங்கு கோட்டை சரணடையும் வரை அவர் தன் தந்தையின் பழைய முந்நாள் வீட்டில் தங்கினார். பின் அரசுக் கருவூலங்களைக் கைப்பற்றினார். சுயநலத்திற் காகவோ, தவறான ஆடம்பர வழிமுறைக்காகவோ அவர் அப்படிச் செய்யவில்லை. இன்றைய முஸ்லீம் ஆட்சியாளர்கள் என்று சொல்லிக் கொண்டு விளக்கு சுழளும் ஆடம்பர வாகனத்தில் பயணித்துக் கொண்டும், மேலும் எண்ணிலடங்கா பல விலை மதிப்பில்லா ஆடம்பர வாகனங்களை பெருமைக்காக அரண்மனையில் அடுக்கி நிற்க வைத்து விளம்பரம் தேடிக்கொள்பவர்கள் போலில்லாமல், அவரின் அன்றாட வாழ்க்கை சாதாரண குடி மக்களின் வாழ்வு போலவே இருந்தது.
அரசுப் பணத்தை இஸ்லாமிய கோட்பாடுகளுக்கேற்ப வறுமையை போக்குவதற்கும், நோய்களைத் தடுப்பதற்க்கும், இல்லை என்று வருபவர்களுக்கும் தாராளமாக வழங்கினார். ஸலாவுத்தீன் டமாஸ்கஸ் வந்ததை மக்கள் டமாஸ்கஸ் நகரில் பெரும் திரளாக கூடி ஊர்வலமாக்கி தங்கள் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தினர். ஒரு நாள் இவர் ஜெருசலத்தை மீட்டி, நாட்டை ஒன்று படுத்தி உலகில் இஸ்லாமிய ஒளியை பரவச் செய்வார் என்று நம்பினர். கவிஞர்கள் ஸலாவுத்தீனை ஜிஹாத் வழியில் போராடி வெற்றி கொள்ள வந்த வீரர் என கவிதைகள் புனைந்தனர். இன்றும் அரபு நாட்டு நூலகங் களில் இவர் மீது வாஜிஷ் அல் அஸாதி, நஷூ அத் தௌலாஹ் அபுல் ஃபத்ல், ஸா அதாஹ் இப்னு அப்துல்லாஹ் ஆகிய கவிஞர்கள் இயற்றிய பாடல்கள் இருக்கின்றன. ஸாலாவுத்தீன் டமாஸ்கஸ் நீதித்துறையில் இருந்து மக்களுக்கு நியாமும், அவர்களின் உரிமைகளையும் கிடைக்கச் செய்து முன் ஆட்சியாளர்கள் விதித்த அநியாய வரிகளை நீக்கினார். டமாஸ்கஸில் ஆட்சியை நிலைப்படுத்திய பின், அலிப்போ நகரின் நடுநிலையாளருக்கு, ‘நான் இந்த நாட்டுக்கு வருகை தந்தது அல் மாலிக் அஸ் ஸாலிஹிக்கு எனது ஆதரவை தெரிவிக்கவும். இஸ்லாமிய கோட்பாடுகளை ஒருமைப் படுத்துவதற்க்கும், எதிரிகளைத் தடுத்து, மக்களை நேர்வழிப்படுத்தவும், அல் மாலிக்குக்கு ஆட்சி முறையை கற்றுக்கொடுக்கவே அன்றி வேறு காரணமில்லை’ என்று கூறினார்.
ஹாம்ஸ், ஹமாஹ் மற்றும் அலிப்போ
டமாஸ்கஸை அடக்கி சிறிது நாள் அங்கு தங்கி அதன் அரசு காரியங்களை சரிப்படுத்தினார். பின் தனது சகோதரர் ஸைஃப் அத்தீன் டக்டகின் என்பவரை அதன் ஆட்சியாளராக்கி விட்டு ஹாம்ஸ் என்னும் நகரை நோக்கிச் சென்றார். அதை வெற்றி கொண்டு தன் தளபதிகளை கோட்டையை முற்றுகை இடச்செய்து ஹாம்ஸ் நகரை பாதுகாப்பாக்கி விட்டு ஹமாஹ் நகரம் நோக்கி நகர்ந்தார். ஸலாவுத்தீன் எகிப்தில் மூன்றாம் முறை போர் செய்யும் போது தளபதிக்கு அடுத்த நிலையில் இருந்த இஸ்ஸத் தின் ஜுர்திக் என்பவன் ஹமாஹின் ஆட்சியாளராக இருந்தான். அவன் இப்போது ஸலாவுத்தீனுக்கு அடி பணியாமல் முரண்டு பிடித்தான். ஸலாவுத்தீன் அவனிடம், தான் ஃப்ராங்க்ஸிடமிருந்து ஹமாஹை பாதுகாக்கவும், மோஸூலின் ஆட்சியாளர் ஸைஃப் அத்தீன் பிடியில் இருந்து அல் ஜஸீராஹ் நகரைக் கைப்பற்றவே வந்திருப்பதாகவும், தான் என்றுமே இளவரசர் அல் மாலிக் அஸ் ஸாலிஹ் இஸ்மாயில் அவர்களை ஆதரிக்கிறேன் என கூற அதை ஒப்புக் கொண்டு இஸ்ஸத் தின் ஜுர்திக் ஸலாவுத்தீனிடம் சரணடைந்தான். மேலும், ஸலாவுத்தீனுக்கும் அலிப்போ நகரின் ஆட்சியாளர் ஸா அத்தீன் கமஷ்தகினுக்கும் இடையே தூதுவராக சேவை செய்வதாகவும் கூறினான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக