திங்கள், 20 ஜூலை, 2015

சௌதி அரேபியா வரலாறு 2

இவருக்குப்பின் மகன் அப்தல்லாஹ் இப்ன் ஃபைசல் 1865 லிருந்து 1871 வரை ஆறு ஆண்டுகள் ஆண்டார். அவருக்குப்பின் 1871 ல் சௌத் இப்ன் ஃபைசல் சில மாதங்கள் ஆண்டு, மீண்டும் அப்தல்லாஹ் இப்ன் ஃபைசல் மூன்றாண்டுகள் ஆண்டார்கள். இவர்கள் இருவருமே சகோதரர்கள் ஆனாலும் தாயார் வேறு. சௌதும், உடன்பிறந்த இன்னொரு சகோதரர் அப்துல் ரஹ்மானும் ரியாதின் தென்கிழக்கிலுள்ள பிதோயின் பழங்குடியின பிரிவான உஜ்மான் கூட்டத்தைச் சேர்ந்த தாயாருக்குப் பிறந்தவர்கள். அப்துல்லாஹ்வும், இன்னொரு சகோதரர் முஹம்மதுவும் சௌத் குடும்பத்தைச் சேர்ந்த தாயாருக்கு பிறந்தவர்கள். தந்தையால் ஆட்சிக்கு அப்தல்லாஹ் இப்ன் ஃபைசல் தான் பரிந்துரைக்கப் பட்டிருந்தார். ஆரம்பத்தில் சகோதரர்களுக்கிடையில் ஆட்சிக்காக வளரும் பகையைத் தவிர்ப்பதற்காக தந்தையார் அப்தல்லாஹ்வை நஜ்தின் அல் கர்ஜ் பகுதிக்கு கவர்னராக அனுப்பினார். ஆனால் தாயாரின் பழங்குடியினரின் ஆதரவினால் சாதுரியமாக சௌத் ஆட்சியைக் கைப்பற்றினார். 1870 ல் சௌத் இப்ன் ஃபைசலுக்கு அல் ஹசா பகுதி பழங்குடியினர், ஒமான், அபுதாபி மற்றும் பஹ்ரைன் ஆட்சியாளர்கள் ஆதரவுதர அப்தல்லாஹ் இப்ன் ஃபைசலின் படைகளைத் தோற்கடித்து, அவர் சகோதரர் முஹம்மதையும் சௌத் கைது செய்தார். அப்தல்லாஹ் ரியாதுக்கு தப்பி ஓட, சௌத் குடும்ப வழக்கப்படி தானும் ஒரு இமாம் என்று கூறினார். இடையில் சௌதின் சிறிய தகப்பனார் அப்தல்லாஹ் பின் துர்கி புரட்சியின் மூலம் தலைநகரை சௌதிடமிருந்து கைப்பற்றினார். தப்பி ஓடிய அப்தல்லாஹ் இப்ன் ஃபைசல் ஓட்டோமானின் பாக்தாத் கவர்னர் மிதாத் பாஷாவிடம் உதவி கோரினார். அவர் ஓட்டோமான் பேரரசுக்காக அல் ஹசாவைக் கைப்பற்ற இதுதான் சரியான தருணம் என்று கருதி, படையுடன் வந்த அவர் சௌதின் மகன் அப்துல் அஜீஸின் பாதுகாப்பிலிருந்த அப்தல்லாஹ் இப்ன் ஃபைசலின் சகோதரர் முஹம்மதை விடுவித்தார். சகோதரர்கள் அப்துல்லாஹ்வும், முஹம்மதுவும் ரியாதுக்கு வர, 1873 ல் சிறிய தந்தையிடமிருந்து மீண்டும் தலைநகரைக் கைப்பற்றி இருந்த சௌத் இப்ன் ஃபைசல் சகோதரர்கள் இருவரையும் பழங்குடிகள் முதைய்ர் மற்றும் ஒதைய்பா கூட்டத்தினருடன் வெளியேற்றினார். போரில் பட்ட காயங்களாலும், சிறிய அம்மை நோயாலும் சௌத் இப்ன் ஃபைசல் மரணமடைந்தார். இதன்பின் முஹம்மது, அப்தல்லாஹ் மற்றும் அப்துல் ரஹ்மான் ஆகியோர் ஒன்றாக இணைந்தார்கள். சௌதின் மற்ற பிள்ளைகள் அல் கர்ஜ் பகுதியைத் தலைமை இடமாகக் கொண்டு அப்தல்லாஹ் இப்ன் ஃபைசலை சில காலம் எதிர்த்தபோது 1888 ல் ஒரு தாக்குதல் போது அனைவரும் கொல்லப்பட்டார்கள். சௌதின் வழி, சௌத் பின் அப்துல் அஜீஸ் பின் சௌதின் பேரர்கள் இன்றைக்கும் சௌதி அரேபியாவின் மூத்த சௌத் அல் கபீரின் குடும்பத்தினர்களாக அரசு விழாக்களில் கௌரவம் பெறுகிறார்கள்.
சௌதி அரேபியாவின் இரண்டாவது மாகாண ஆட்சிவம்சத்தினராக ஃபைசல் பின் துர்கியின் இளைய மகன் அப்துல் ரஹ்மான் பின் ஃபைசல் அல் சௌத் ஆட்சிக்கு 1875 ல் வந்தார். முதலில் ஓராண்டு மட்டுமே ஆட்சியிலிருந்த இவரை புரட்சி செய்து விரட்டிவிட்டு, அப்துல்லாஹ் இப்ன் ஃபைசல் மூன்றாம் முறையாக 12 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சியில் இருந்தார். பின்னர் 1889 ல் மீண்டும் அப்துல் ரஹ்மான் பின் ஃபைசல் ஆட்சியைப் பிடித்தார். 1902 ல் அப்துல் ரஹ்மானின் மகன் அப்துல் அஜீஸ் என்ற இப்ன் சௌத் ஆட்சிக்கு வந்தார். இவர்தான் இன்றைய சௌதி அரேபியாவை நவீனப்படுத்தியவர். இப்ன் சௌத் 1876 ல் ரியாத் நகரத்தில் பிறந்தவர். இவரின் தாயார் சுதைய்ரி குடும்பத்தைச் சேர்ந்த சாராஹ் அல் சுதைய்ரி ஆவார். தாயார் 1910 ல் காலமானார். 1890 களில் சௌத் குடும்பத்திற்கு பகையாக இருந்த ராஷித்களை விட்டு 15 வயதில் இப்ன் சௌத் அரேபியாவின் தென் பாலைவனப் பகுதியான பிதோயின் பழங்குடியினரான அல் முர்ராஹ் கூட்டத்தினரிடம் அகதிகளாக குடும்பத்துடன் சென்றார். பின் சில மாதம் கதாரிலும், சில காலம் பஹ்ரைனிலும், அதிகபட்சமாக 10 ஆண்டுகளுக்கும் மேல் குவைத்திலும் இருந்தார். மிகச்சிறிய உறவினர் கூட்டத்துடன் இப்ன் சௌத் ராஷித்கள் இருந்த நஜ்த் பகுதியின் மீது தாக்குதல் நடத்தினார். அதில் நல்ல பலன் கிடைக்க, இதனால் கவரப்பட்ட பழங்குடியினர் மேலும் சேர 200 பேராக ஆனார்கள். 1902 ரமதான் மாதம் இரவில் 40 திறமையான வீரர்களுடன் ரியாத் சென்றார். பேரீச்சமரங்களின் மேலமர்ந்து வளைத்து நகரச் சுவற்றைத் தாண்டி உள்ளே குதித்து, ராஷிதி கவர்னரைக் கொன்று அஜ்லான் கோட்டையைக் கைப்பற்றி சௌதியின் மூன்றாவது மாகாண ஆட்சியைத் தோற்றுவித்தார்.
இப்ன் சௌதின் ரியாத் வெற்றியால் பழைய சௌத் குடும்ப ஆதரவாளர்கள் இவர் பக்கம் அணி திரண்டார்கள். மிகச் சிறப்பான தலைவரான இப்ன் சௌத் ஆயுதங்கள் கொடுத்து அவர்களை அரவணைத்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆதரவாளர்களுடன் நஜ்த் பகுதியின் பல பகுதிகளை ராஷிதிகளிடமிருந்து கைப்பற்றினார். 1904 ல் ராஷிதிகளின் அப்துல் அஜீஸ் என்பவர் இப்ன் சௌதை அடக்க ஓட்டோமான்களிடம் இராணுவ உதவியைக் கோரினார். ஒப்புக்கொண்ட அவர்கள் அரேபியாவுக்குள் ஓட்டோமான் இராணுவத்தை அனுப்பினார்கள். தொடர்ந்து இப்ன் சௌதின் படைகளைத் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தினார்கள். இப்ன் சௌத் போர்த் தந்திரத்தை மாற்றி கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் தொடர்ந்து கொரில்லா தாக்குதல் நடத்தி ஓட்டோமான் மற்றும் ராஷித் படைகளின் இராணுவம் மற்றும் பொருள் பரிமாற்ற வழிகளைத் தடுத்தார். இதனால் அவர்கள் பின்வாங்கினார்கள். இதில் முக்கியமானது கஸ்ஸிம் பகுதியில் நடந்த “ரவ்தத் முஹன்னா” போர். கஸ்ஸிம் பகுதி தலைவர்களுடன் கூட்டு வைக்க படைகளுடன் அப்துல் அஜீஸ் ராஷித் சென்றார். இப்ன் சௌத், இப்ராஹீம் இப்ன் அகீல் என்பவர் தலைமையில் ஒரு படையை அனுப்பி, போரிட்டு அப்துல் அஜீஸையும் கொன்றார். இப்ன் சௌதுக்கு மிகத் திருப்பு முனையாக அமைந்த போர் இது. இதனால் ஓட்டோமான் மற்றும் ராஷித் படைகள் நஜ்த் மற்றும் கஸ்ஸிம் பகுதியிலிருந்து ஒரே அடியாக மறைந்தன. பின் அரேபியாவின் கிழக்குக்கரை பகுதிகளையும் 1912 ல் வென்ற இப்ன் சௌத், சல்ஃபி உலமாக்களின் அனுமதியுடன் “இக்வான்” என்னும் மதசார்புள்ள இராணுவம் ஒன்றை பிற்கால படையெடுப்புகளுக்காக உருவாக்கினார். அரபு பழங்குடியினரிடையே இருந்த புராதன வழிமுறைகளை மாற்றி, ‘அக்ரேரியன் கொள்கை’ எனப்படும் பொருளாதாரம் சார்ந்த விவசாயம், தொழில்நுட்பங்களை இந்த இக்வானாவுடன் சேர்ந்து அவர்களுக்கு குடியிருப்பு காலனிகளை அமைத்து சமூகத்தில் இணைய வைத்தார்.
முதல் உலகப்போரின் போது கேப்டன் வில்லியம் ஷேக்ஸ்பியர் என்பவரை தூதுவராக அனுப்பி பிரிட்டிஷ் அரசாங்கம் இப்ன் சௌதிடம் “டாரின் ஒப்பந்தம்” என்று ஒன்றைப் போட்டது. அதன்படி சௌதுகளின் நிலப்பரப்புக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் பாதுகாப்பதாகவும், மேலும் வளர்ச்சிக்கான அனைத்து ஒத்துழைப்பையும் தருவதாகவும் உறுதி அளித்தது. பதிலுக்கு இப்ன் சௌத் ஓட்டோமான்களுடன் அவ்வப்போது தொல்லைதரும் எஞ்சியுள்ள ராஷித் குடும்பத்தினரை அழிக்க உதவ வேண்டும் என்று கேட்டார். இதே பிரிட்டிஷ் அரசாங்கம் 1915 ல் டி. இ. லாரன்ஸ் (லாரன்ஸ் ஆஃப் அரேபியா) என்பவர் மூலம் ஷரீஃப் ஹுசென் பின் அலியை ஆதரித்தது. இப்ன் சௌத் 1925 ல் ஷரீஃப் ஹுசெனை வென்று மக்கா நகரத்தைக் கைப்பற்றினார். இதனால் 700 ஆண்டுகால ஹாஷிமிட்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. மக்கா, மதீனா, ஜெத்தா பகுதியினர் அனைவரும் இப்ன் சௌதை மன்னராக ஏற்றுக்கொண்டார்கள். இப்போது 1927 ஜெத்தா மாநாடு, 1952 தம்மாம் மாநாடுகளின் மூலம் சௌதிக்கு மாதம் 5,000 பவுண்டுகளும், ஆயுதத்தளவாடங்களும் தர ஒப்புக்கொண்டது. சர்வதேச ஒத்துழைப்புடன் இப்ன் சௌத் மத்திய அரேபியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றினார். பின் அவர் போர் நடவடிக்கைகளை கைவிட இக்வானாவுடனான தொடர்பு நொறுங்கிப் போனது. சில மத்திய அரேபிய பகுதிகள் பிரிட்டிஷின் ஒப்பந்தப் பகுதியாக இருந்ததால் இப்ன் சௌதால் கைப்பற்ற முடியவில்லை. இதற்கிடையில் வஹ்ஹாபி அல்லாதவர்கள் இப்ன் சௌதால் நாட்டு மக்களைப்போல் கருதப்படவில்லை என்று இக்வானா அமைப்பு புரட்சியில் இறங்கியது. இரண்டாண்டு கால நடவடிக்கைக்குப் பிறகு, இப்ன் சௌதால் ‘சபில்லா போரால்’ இக்வானாக்கள் அடக்கப்பட்டார்கள்.
1932 ல் இப்ன் சௌத் தன் வசமிருந்த அனைத்துப் பகுதிகளையும் இணைத்து சௌதி அரேபியாவாக மாற்றி தான் அதன் மன்னர் என்று அறிவித்தார். 1938 ல் மஸ்மக் கோட்டையிலிருந்து முரப்பா அரண்மனைக்கு குடியிருப்பை மாற்றிக் கொண்டு 1953 ல் மரணிக்கும் வரை அதில் வாழ்ந்தார். சௌதி அரேபியாவில் எண்ணெய் வளம் அறியப்பட்டு, வளம் செழிக்க ஆரம்பித்தவுடன் பழங்குடியினருக்கு தங்குவதற்கு சிறப்பான வசதிகளைச் செய்து கொடுத்தார். வாஹ்ஹாபிச கொள்கைகளை கடைபிடித்த வந்த அக்காலத்தில் புனிதபயணமாக வந்த பல வெளிநாட்டினரை இஸ்லாமிய முறைப்படி இல்லாததற்காக சௌதிகள் தாக்கினார்கள். குறிப்பாக எகிப்திய வாசிகள் சிலர் கேளிக்கையில் ஈடுபட்டு வந்ததை அறிந்த சிலர் கடுமையாகத் தாக்க, இதனால் எகிப்திய அரசாங்கத்தினரிடம் இப்ன் சௌத் மன்னிப்புக் கோரினார். ஜோர்டானின் மன்னர் ஹுசெனுக்கு எதிராக கலகம் செய்த ஷரீஃப் ஹுசெனை முறியடிக்க ஜோர்டானுக்கு உதவிகள் புரிந்தார். 1937 ல் இளவரசர் ராஷித் அல் குஸாய் ஜோர்டானை விட்டு விரட்டப்பட்டபோது இப்ன் சௌதின் உபசரிப்பில் பல வருடம் சௌதி அரேபியவில் இருந்தார். சௌதியின் ஆட்சியை வளப்படுத்த சொந்த தந்தையையே வெளியேற்றினார். தன் ஐந்து சகோதரர்களுக்கு ஆதரவாக இருந்தார். குறிப்பாக ஆட்சியைப் பிடிப்பதற்கு உறுதுணையாக இருந்த  முஹம்மதுவுக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். இரண்டாம் உலகப்போரின் போது நடுநிலையாக இருந்தாலும், கூட்டுப்படைகளுக்கு ஆதரவாக இருந்தார். 1938 ல் ஈராக்கின் மன்னராட்சியில் பிரிட்டிஷின் எண்ணெய் குழாய்கள் தாக்கப்பட்டதற்கு ஜெர்மனியின் தூதர் ஃப்ரிட்ஸ் க்ரோப்பா குற்றம் சாட்டப்பட்டார். இப்ன் சௌத் க்ரோப்பாவுக்கு சௌதியில் அடைக்கலம் கொடுக்க பிரிட்டிஷார் இவர் மீது கோபம் கொண்டனர். இவர் ஆட்சிக்கு வர பிரிட்டிஷ் பலவகையிலும் உதவி புரிந்தாலும், எண்ணெய் வளத்திற்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் செய்து கொண்டார். 1945 ல் சூயஸ் கால்வாயில் யூ.எஸெ.எஸ். க்வின்சி என்ற கப்பலில் அமெரிக்க அதிபர் ஃப்ராங்கிலின் டிலானோ ரூஸ்வெல்டுடனான சந்திப்பில், இரு நாடுகளுடனான எதிர்கால சந்திப்புக்கு பேச்சுவார்த்தை நடத்தினார். 1945 ல் கெய்ரோ நகரத்தின் ஃபய்யூன் பாலைவனத்தில் க்ராண்ட் ஹோட்டல் டு லாக்கில் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்சிலை சந்தித்து பாலஸ்தீன விவகாரம் பற்றிப் பேசினார். 1948 ல் அராப் இஸ்ரேல் போரில் பங்கு கொண்டார். மன்னர் குடும்பத்தினரின் விருப்பப்படி, அரண்மனைகள், தோட்டங்கள், விலையுயர்ந்த கார்கள் என வசதி செய்து கொடுத்தார். தனது நீண்ட நாள் கனவான பாலைவனத்தில் ரயில் ஓடச்செய்வதை, அராம்கோ என்னும் நிறுவனத்தின் மூலம் 70 மில்லியன் டாலரில் பூர்த்தி செய்தார். இப்ன் சௌதின் மறைவிற்குப் பிறகு, ரயில் போக்குவரத்து வணிக ரீதியாக பயன்படுத்தப்பட்டது. தலைநகர் ரியாதை உலகத்தரத்திற்கு முன்னேற்றினார்.
சௌதி அரேபியாவை உருவாக்குவதற்காக பல பழங்குடியினரின் அரவணைப்பு தேவைப்பட்டதால் பல திருமணங்களை அவர்களிடையே செய்து கொண்டு பல மனைவிகளுடன் வாழ்ந்தார். 45 மகன்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இவருக்கு இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சிறுவயதில் ராஷித்களின் பிடியிலிருந்து மறைந்து வாழ தென் அரேபியாவின் பழங்குடியினத்தவர்களுடன் வாழ்ந்த போது இவரது அத்தை ஜவ்ஹரா பின்த் ஃபைசல் தான் ஆதரவாக இருந்தார். சௌத் குடும்பத்தின் பாரம்பரிய வரலாறுகளைச் சொல்லி இவருக்கு வீரமுண்டாக்கினார். சௌத் குடும்பம் அரேபியாவின் ஆட்சியை வென்றெடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டினார். அத்தை ஜவ்ஹரா பின்த் ஃபைசல் இஸ்லாமைப் பற்றியும், பழங்குடியினத்தவர்களின் குணநலன்கள், வாழ்க்கைமுறை பற்றியும் நன்கு அறிந்தவர். அவையாவும் கேட்டு வளர்ந்த இப்ன் சௌதுக்கு பிற்காலத்தில் பெரும் பயனைத் தந்தது. இப்ன் சௌத் தன் ஒவ்வொரு நடவடிக்கையின் போதும் அத்தையைச் சந்தித்து ஆலோசனைக் கேட்பதை வழக்கமாக வைத்திருந்தார். 1930 ல் அத்தை இறக்கும் வரை தினசரி அவரைச் சென்று சந்திப்பதை இப்ன் சௌத் வழக்கமாக வைத்திருந்தார். தன்னைவிட ஒரு வயது மூத்த சகோதரி நௌராவுடனும் இப்ன் சௌத் அன்பாக இருந்தார். பல பொது நிகழ்ச்சிகளின் போது நான் நௌராவின் சகோதரன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வார். அந்த அளவுக்கு பாசமுள்ள சகோதரி நௌரா இப்ன் சௌத் இறப்பதற்கு சில வருடங்கள் முன்பு காலமானார். 1935 ல் புனித ஹஜ் மேற்கொள்ளும் போது ஆயுதம் தாங்கிய சிலரால் தாக்க முற்பட்டபோது காயமின்றி தப்பித்தார். இவர் அடிக்கடி நம் மக்களும், மண்ணும் மிக முக்கியம். மதமும், உரிமைகளும் தந்தையர்களின் வழி வந்தவை என்று கூறுவார். பெண்கள் கல்வி பயில உரிமை உள்ளவர்கள் என்றும் சொன்னார். அப்போது வருங்கால ஆட்சியாளர்களாக இருந்த தன் மகன்கள் மன்னர் சௌதுக்கும், இளவரசர் ஃபைசலுக்கும் சகோதரர்களாய் இருக்கும் நீங்கள் இணைந்திருங்கள் என்றார். மேலும், என் பிள்ளைகளும், என் உடமைகளுமே எனக்கு பெரிய எதிரிகள் என்றார். இப்ன் சௌத், 1953 ல் இருதய நோயால் பாதிக்கப்பட்டு தாயிஃப் நகரத்தில் ஃபைசல் அரண்மனையில் காலமானார். தாயிஃபின் அல் ஹவியாவில் இவருக்கு இறுதித் தொழுகை நடத்தப்பட்டு, உடல் ரியாதுக்கு கொண்டு வரப்பட்டு அல் அவ்த் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. இவர் இறக்கும் போது இளவரசர் ஃபைசல் உடனிருந்தார். அமெரிக்க செயலாளர் ஜான் ஃபாஸ்டர் டுல்லெஸ், நாட்டுக்காக பல சாதனைகள் செய்தவர் இப்ன் சௌத் என்றார். இப்ன் சௌத் பல விருதுகளை வென்றிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக