வெள்ளி, 10 ஜூலை, 2015

மொகலாய வரலாறு 22

முஹி உத் தின் முஹம்மது ஔரங்கஸேப் ஆலம்கீர்
கூ.செ.செய்யது முஹமது
இவரின் வரலாறு நீ......ண்டதாக இருக்கலாம். காரணம் ஒரு திரைப்படம், நாவலுக்குண்டான விறுவிறுப்பு கொண்டது. மேலும் இவரது வரலாற்றி னுடனே சிவாஜி என்பவனின் காலகட்டமும் இணைந்தது. மீர் ஜும்லா என்ற கர்நாடக பிரதம மந்திரியின் வரலாறும் உள்ளது. ஔரங்கஸேப் மொகலாய பேரரசர்களிலேயே அதிக பிரச்சினைகளின் இடையே ஆட்சி செய்தவர்.
   ஷாஜஹான், மும்தாஜ் மஹல் தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார். ஷாஜஹான் தனது குடும்பத்துடன் குஜராத்தில் உஜ்ஜைனிக்குப் போகும் வழியில் தோஹத் என்ற இடத்தில் 1618 அக்டோபரில் 24 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பிறந்தார். ஷாஜஹான் தனது தந்தையிடமிருந்தும், நூர்ஜஹானின் சூழ்ச்சியிலிருந்தும் தப்பிக்க தெலுங்கானா, ஒரிஸ்ஸா, பெங்கால், டெக்கானுக்கு இடையே ஆபத்தான பாதையில் மனைவி, குழந்தைகளுடன் ஓடிக்கொண்டிருந்தார். உதவியற்று இருந்தபோது பணயமாக மகன்கள் தாரா ஷிகோவையும், ஔரங்கஸேப்பையும் ஜஹாங்கீரின் தர்பாரில் விட்டு வைத்தார். 1626 ல் ஜூன் மாதம் முதல் 1628 பிப்ரவரி வரை இருவரும் நூர்ஜஹானின் கண்காணிப்பில் இருந்தனர். ஜஹாங்கீர் இறந்த பின்னர் தான் குழந்தைகள் பெற்றோரிடம் திரும்பினர். ஔரங்கஸேபுக்கு தினம் 500 ரூபாய் செலவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
 பத்து வயதான போது ஷாஜஹானிடம் வைஸ்ராயராக இருந்த சஃதுல்லா கான் என்பவரிடம் கல்வி கற்றார். இன்னொரு ஆசிரியர் கிலானைச் சேர்ந்த மீர் முஹம்மது ஹாஷிம் ஆவார். இவர் பனிரெண்டு ஆண்டுகள் மக்கா, மதீனாவில் பயின்றவர். ஹகீம் அலி கிலானி என்பவரிடம் மருத்துவமும் பயின்ற ஹாஷிம் இந்தியா வந்து அஹ்மதாபாதில் நீதிபதியாகவும் இருந்தார். ஷாஜஹானின் ஆட்சிகாலம் முடியும் வரை ஹாஷிம் ஔரங்கஸேபுக்கு ஆசிரியராக இருந்தார். எதையும் விரைவில் கற்றுகொள்ளும் ஆவலுள்ள ஔரங்கஸேப் திருக்குரானையும், ஹதீஸ் களையும் மனப்பாடம் செய்திருந்தார். எந்த நேரத்திலும் குறிப்பிட்ட அத்தியாயத்தின் எண்களுடன் சொல்லக்கூடியதுடன் பெர்ஷியா, அரபு மற்றும் ஹிந்தி மொழிகள் யாவும் அறிந்திருந்தார். அரபு மொழியில் திருக்குரான் மொத்தத்தையும் தன் கையால் எழுதக்கூடியவர். அப்படி எழுதப்பட்டு உயரிய முறையில் தொகுக்கப்பட்ட இரு பிரதிகளை மக்காவுக்கும் ,மதீனாவுக்கும் கொடுத்தார். மூன்றாவது பிரதியை டெல்லியிலுள்ள நிஜாமுத்தீன் அவுலியா நினைவிடத்திற்கு கொடுத்தார். மேலும் பல பிரதிகளை விற்றும், இஸ்லாமியர்கள் அணியும் தலைத் தொப்பியைப் பிண்ணி விற்றும் அதில் கிடைக்கும் வருமானத்தில் தான் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் பேரரசர் உணவு உண்டார். அரசு சம்பந்த மான அனைத்து கடிதங்களையும் தானே தன் கையால் எழுதுவார்.
யானையுடனான ஔரங்கஸேபின் வீரச்செயல் இந்தியா முழுவதும் மிகப்பிரபல்யமானது. ஷாஜஹான் யமுனா நதிக்கரையில் அமர்ந்து யானை சண்டைகளைப் பார்ப்பதை மிகவும் விரும்புவார். அப்படி ஒருநாள் சுதாகர், சூரத் சுந்தர் என்று பெயரிடப்பட்டிருந்த பெரிய யானைகளின் சண்டையை மூன்று மகன்களுடன்பார்த்துக் கொண்டிருந்தார். சண்டை யின் தீவிரத்தில் குதிரை மீதமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த ஔரங்க ஸேப் தன்னை அறியாமல் யானைகளின் மிக அருகில் சென்று விட்டார். சண்டையின் போக்கிலிருந்த சுதாகர் என்ற யானை பலமாக பிளிறிக் கொண்டு ஔரங்கஸேபை நோக்கி திரும்பியது. பனிரெண்டு வயதே ஆன ஔரங்கஸேப் சற்றும் பயப்படாமல் கையிலிருந்த ஈட்டியால் யானை யின் தலையில் தாக்கினார். மேலும் பிளிறிய யானையின் ஓசையால் அனைவரும் சிதறி ஓடினர். யானை ஔரங்கஸேபை நோக்கி பிளிறிய வண்ணம் வர ஔரங்கஸேபும் குதிரையிலிருந்து இறங்கி உருவிய வாளுடன் பயப்படாமல் யானையை எதிர்கொண்டார். யானையுடன் தனித்து விடப்பட்ட ஔரங்கஸேபை ஷாஜஹானின் தனி வீரர்கள் வந்து பாதுகாத்தார்கள். ஷாஜஹான் மகனைப் பாராட்டி ‘பஹதூர்’ என்று புகழ்ந்து எடைக்கு எடை தங்க நாணயங்களும், இரண்டு லட்ச ரூபாய் பெருமானமுள்ள பிற பொருள்களும், சுதாகர் யானையையும் ஔரங்கஸேபுக்கு பரிசளித்தார். பதினாறு வயது கடக்கும் முன்பே சிகப்பு நிற கூடாரம் அமைத்துக் கொள்ளும் அந்தஸ்தும், பத்தாயிரம் குதிரை மற்றும் நான்காயிரம் வீரர்களின் நிர்வாகமும், டெக்கானின் கவர்னராக வும் பதவி பெற்றார். 1635 ல் முதல்முறையாக இராணுவ திறமைக்காக பந்தேலா போரில் ஜுஜார் சிங்கையும், அவர் மகன் விக்ரமஜித்தையும் எதிர்த்து கலந்து கொண்டார். 
பழைய ஆக்ராவிலிருந்து டெக்கான் செல்லும் வழியில் இடப்புறம் குவாலியரைத் தவிர்த்து நீண்ட பெரும் காட்டுப்பகுதி பந்தேல்கண்ட் ஆகும். கஹர்வார் ராஜபுத்திரர் களின் வழி வந்த பழைய பந்தேலா பழங்குடியினரின் பெயரால் இப்பகுதி அழைக்கப்படுகிறது. அங்கு நியமிக்கப்பட்டிருந்த மூன்று மொகலாய தளபதிகள் ஒரே தகுதியுடைய வர்கள் ஆனதால் அவர்களி டையே ஒத்துப்போவதில் பிரச்சினை இருந்தது. அதனால் ஷாஜஹான், ஔரங்கஸேபை அங்கு நியமித்தார். ஜுன்ஜ்ஹார் சிங்கை எதிர்த்து உர்ச்சா, தாமுனி ஆகிய இடங்களைக் கைப்பற்றினார். ஜுன்ஜ்ஹார் சிங் கோண்ட்வானாக்களால் கொலை செய்யப்பட்டார். அவரின் இரு மகன்களும், பேரனும் இஸ்லாமைத் தழுவினார்கள். மொகலாயர்கள் எப்போதுமே பெர்ஷியர்களுடன் இரத்த உறவை ஏற்படுத்திக் கொள்வார்கள். ஷாநவாஸ் கான் என்பவரின் மகள் தில்ரஸ் பானுவை 1637 ல் ஔரங்கஸேபுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
1657 ல் உடல்நலக் குறைவால் குழந்தைப் பேற்றின் போது, தில்ரஸ் பானு பேகம் இறந்தார். இரண்டாவதாக காஷ்மீரின் ரஜௌரி மாகாண மன்னர் ராஜா ராஜு என்பவரின் மகள் நவாப் பாய் என்னும் ரஹ்மத்துன்னிசா என்பவரை ஔரங்கஸேப் மணந்தார். இவர் தான் பின்னாளில் மொக லாய வாரிசான முதலாம் பஹதூர்ஷாவின் தாயார் ஆவார். சில அரசியல் மற்றும் குடும்ப காரணங்களால் கணவர் மற்றும் குழந்தைகளைப் பிரிந்திருந்த இவர் 1691 இறக்கும் வரை டெல்லியில் வசித்தார். ஔரங்க ஸேபின் இன்னொரு மனைவி பெயர் ஔரங்கபாதி மஹல் ஆகும். இவர் ஔரங்காபாதைச் சேர்ந்ததால் இந்த பெயரில் அழைக்கப்பட்டார். உயிர்கொல்லும் ப்ளேக் நோயால் 1688 ல் பிஜப்பூரில் மரணமடைந்தார். அரசு அதிகாரமில்லாத இன்னொரு மனைவி உதைய்புரி மஹல் ஆவார். இவர் தான் கம் பக் ஷின் தாயார். வயதான ஔரங்கஸேபுக்கு மிகவும் பிடித்த இளம் மனைவியாக இருந்தார். இவரின் அழகிலும், அன்பிலும் கவரப்பட்ட ஔரங்கஸேப் கம் பக் ஷின் பல தவறுகளை மன்னித்தார். மேலும் ஹிராபாய் என்ற மனைவியும் இருந்தார். ஹிராபாய் ஔரங்க ஸே பின் அத்தை (ஷாஜஹானின் சகோதரி) வீட்டில் இருந்த அடிமைப் பெண் என்றும், அவருடனான ஔரங்கஸேபின் காதல் சிறுவயதில் குரான் படித்திருந்த ஒரு தீவிர முஸ்லீமுக்கு உண்டானதாகவும் நம்பும் படியும் இல்லை. அதனால் அந்த ஹிராபாய், ஔரங்கஸேபுக்கு மது       கொடுத்தது போன்ற நீண்ட கதைகளை தவிர்த்து விடுவோம்.                ஔரங்கஸேபுக்கு நிறைய குழந்தைகள் இருந்தனர். அதிகாரபூர்வமான மனைவி தில்ரஸ் பானு பேகத்திற்கு, ஸெபுன்னிசா (1638 ல் தௌலதா பாதில் பிறந்து 1702 ல் டெல்லியில் இறந்து ‘முப்பதாயிரம் மரங்கள்’ என்னும் காபூலீ நுழைவாயிலில் புதைக்கப்பட் டார். திருக்குரானை மனப்பாடம் செய்து ஔரங்கஸேபின் கையால் 30,000 தங்கத் துண்டுகளை பரிசாக  பெற்றார்.), ஜீனத்துன்னிசா (பதிஷா பேகம் என்றும் அழைக்கப் பட்ட இவர் 1643ல் பிறந்தார். தன் சொந்த செலவில் டெல்லியில் கட்டிய ‘ஜீனத்துல் மசூதி’ யின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டார்.), சப்தத்துன் னிசா (1651 ல் பிறந்த இவர் தாரா ஷிகோவிம் இரண்டாவது மகன் ஸிபிர் ஷிகோவை மணந்தார். 1707 ல் இறந்தார்), என்ற மகள்களும், முஹம்மது ஆஸம் (1653 ல் பிறந்து 1707 ல் இறந்தார்), முஹம்மது அக்பர் (1657 ல் ஔரங்காபாதில் பிறந்து, 1704 ல் பெர்ஷியாவில் இறந்தார்) என்ற மகன்களும் பிறந்தார்கள். மனைவி நவாப் பாய்க்கு முஹம்மது சுல்தான் (1639 ல் கதுராவில் பிறந்து, சிறை வைக்கப் பட்ட போது 1676 ல் இறந்து போனார்.), முஹம்மது முஃஅஸ்ஸம் (ஷா ஆலம் என்றும் அழைக்கப்பட்ட இவர் ஔரங்கஸேபுக்குப் பிறகு பஹதூர் ஷா என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தார். 1643 ல் பிறந்து 1712 ல் இறந்தார்.) என்ற மகன்களும், பத்ருன்னிசா (1647 ல் பிறந்து, 1670 இறந்த இவரும் திருக்குரானை சிறப்பாக ஓதக் கூடியவர்.) என்ற மகளும் பிறந்தார்கள். மனைவி ஔரங்காபாதிற்கு ஒரே குழந்தையாக மெஹ்ருன்னிசா (1661 ல் பிறந்து 1706 ல் இறந்த இவர் முராத் பக் ஷின் மகன் இஸித் பக் ஷை மணந்திருந்தார்.) என்பவர் பிறந்தார். மனைவி உதைய்புரி மஹலுக்கு, முஹம்மது கம் பக் ஷ் (1667 ல் டெல்லியில் பிறந்து 1709 ல் ஹைதராபாதில் இறந்து போனார்.) என்ற மகன் பிறந்தார்.
தீக்காயமடைந்து நோயிலிருந்த சகோதரி ஜஹனாராவைக் காண ஔரங்கஸேப் ஆக்ரா வந்தார். அத்தருணத்தில் அவரின் பதவி நீக்கப் பட்டு, தகுதி, ஊக்கத் தொகை அனைத்தும் நிறுத்தப்பட்டது. அதற்கான காரணம் முட்டாள்தனமான சில நடவடிக்கைகளை மேற்கொண்டதாலும், பேரரசரின் அனுமதியின்றி சில முடிவுகளை எடுத்ததற்காகவும் என்று கூறப்பட்டது. ஔரங்கஸேப், ஷாஜஹான் அளவுக்கதிகமாக தாரா ஷிகோவிடம் நெருங்கி இருப்பதாகவும், அதனால் தந்தையுடன் தனது தனிமை மற்றும் ஆதரவும் பாதிக்கப்படுவதாகக் கூறி ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது. 1646 ல் பல்க் பகுதியில் ஷாஜஹானின் இளைய மகன் முராத் பக் ஷ் தலைமையில் 15,000 வீரர்களுடன் போரிடப்பட்டது. அவர் வெற்றி பெற்று பலமுறை தந்தைக்கு கடிதம் எழுதி, தன்னை திரும்ப அழைக்குமாறு வேண்டினார். ஆனால் ஒவ்வொரு முறையும் ஷாஜஹானால் மறுக்கப்பட்டது. இருபத்தி இரண்டு வயதான முராத் பஹதூர் கானின் பொறுப்பில் பல்கை விட்டு விட்டு அனுமதியின்றி வெளியேறினார். பின்னர் ஷாஜஹானால் சஃதுல்லா கான் அனுப்பப்பட்டு, முறையான அதிகாரிகளை நியமித்து நிலைமை சரி செய்யப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, குஜராத்தின் நிர்வாகத்திலிருந்த ஔரங்கஸேப், மால்வாவின் கவர்னர் ஷாயிஸ்தா கானை அங்கு மாற்றப்பட்டு, வைஸ் ராயராக பல்கில் நியமிக்கப்பட்டார். பல்க் பகுதி பல பிரச்சினைகளையும், போர்களையும் அவ்வப்போது சந்தித்து மொகலாய வீரர்களின் ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கி இருக்கிறது. 1648 லிருந்து 1652 வரை மீண்டும் டெக்கானின் வைஸ்ராயராக ஆகும் வரை ஔரங்கஸேப் முல்டானின் கவர்னராகவும் இருந்தார். அக்காலகட்டத்தில் ஔரங்க ஸேப் 1649 மற்றும் 1652 ல் இருமுறை பெர்ஷியர்களை எதிர்க்க கந்த ஹாருக்கு அழைக்கப்பட்டார். 1650 லிருந்தே ஔரங்கஸேப் பரவலாக புகழடைந்தார். இவரின் தனிசெயலாளராக காபில் கான் என்ற மற்றொரு பெயருடனும், ‘முன்ஷி உல் மமாலிக்’ என்ற பதவியும் அளிக்கப்பட்ட ஷெய்க் அபுல் ஃபத் இருந்தார். தன் கண் பார்வை பழுதடையும் வரை இருபத்தாறு ஆண்டுகள் அபுல் ஃபத் ஔரங்கஸேபிடம் சிறந்த உதவியாள ராக இருந்தார். இவரால் பாதுகாக்கப்பட்ட பல ஆவணங்களிலிருந்து தான் ஔரங்கஸேபின் வாழ்க்கை வரலாறு தெரிய வந்தது.
மலிக் அம்பர் அஹ்மத்நகரை புணரமைத்த போது தலைநகரை சிறு கிராமமாக இருந்த கிர்கி என்ற பகுதியில் அமைத்தார். அங்கு சுல்தான் தங்குவதற்காக ஒரு அரண்மனையும், அதை ஒட்டி தனக்கும் ஒரு மாளிகையைக் கட்டினார். மேலும் மக்களை அங்கு குடியமர்த்த தண்ணீர் மிக அவசியமாக இருந்தது. அதற்காக அர்சூலுக்கருகிலுள்ள ஆற்றி லிருந்து கால்வாய் மூலம் நீரைக் கொண்டு வந்து மிகப்பெரிய தொட்டி யில் சேமித்தார். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கிராமம் வளர்ந்தது. இரண்டாம் முறையாக ஔரங்கஸேப் டெக்கான் பகுதியின் அதிகாரத்திற்கு வந்த போது, தௌலதாபாதில் சிறிய குழுவுடனே தங்க முடிந்தது. பல அதிகாரிகளுடன் இருந்து ஆட்சி செய்ய நல்ல இடத்தை தேடிய ஔரங்கஸேபுக்கு கிர்கி தோதாக இருந்ததால் நீர்த் தொட்டிக்கு அருகில் ஒரு அரண்மனையைக் கட்டினார். மேலும் அதிகாரிகளுக்கும், தலைவர்களுக்கும் நிலங்களை அளித்து வீடுகள் கட்டிக் கொடுத்தார். அவர் கிர்க்கியின் அரண்மனைக்கு குடியேறிய பிறகு, மிக வேகமாக அப்பகுதி வளர்ச்சி அடைந்தது. பின்னர் ஔரங்கஸேபின் பெயர் தாங்கி ‘ஔரங்காபாத்’ என்று அழைக்கப்பட்டது. 
பலமுறை தாக்குதலுக்குள்ளான டெக்கானில் வளர்ச்சியின்றி வரி வசூலில் மிகவும் பின் தங்கி இருந்தது. பலமுறை ஔரங்கஸேப் தந்தை ஷாஜஹானிடம் உதவித் தொகை கேட்டும் அவர் கொடுக்கவில்லை. இவரையே சமாளித்து சில வரிகளை உயர்த்தி வசூலிக்கச் சொன்னார். அதில் ஔரங்கஸேப் ஈடுபாடு காட்டாததால் ஷாஜஹான் கடிந்து கொண்டார். ஔரங்கஸேபின் எதிரிகளின் தூண்டுதல்களால் பல விவகாரங்களில் அவரின் செயல் ஷாஜஹானிடத்தில் பல அவநம்பிக்கை யும், சந்தேகத்தையும் விளைவித்தது. ஷாஜஹானுக்குப் பிறகு, சகோதரர் தாரா ஷிகோ ஆட்சிக்கு வர ஆர்வம் கொண்டிருந்தார். ஷாஜஹானும் அவரைக் கொண்டுவர விரும்பினார். ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஔரங்கஸேப்பை விழா மற்றும் சிறப்பு கூட்டங்களுக்கு தலைநகர் அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டார். நாம் ஏற்கனவே சிலவற்றை ஷாஜஹான் வரலாற்றில் பார்த்துவிட்டதால் சிலவற்றை தவிர்த்து விடுவோம். ஒருவரை ஆகவில்லை என்றானால் பல சிறு சிறு விவகாரங்கள் கூட பிரச்சினையாகத் தோன்றும். அது போல் ஷாஜஹான், ஔரங்கஸேப் உண்டான சிறு பிரச்சினைகள் பல பக்கங்களுக்கு உள்ளது. அது தேவையில்லை.   
தனக்கு தடங்கலாக இருந்த அனைத்து நபர்களையும் புறம் தள்ளிய ஔரங்கஸேப் 1658 ஜூலையில் ஆட்சிக்கு வந்தார். வெள்ளிக்கிழமை தொழுகையில் ஔரங்கஸேப்பின் பெயர் மொழியப்பட்டு, நாணயமும் புதியதாக வெளியிடப்பட்டு, “அபுல் முஸஃப்ஃபர் முஹி உத் தின் முஹம்மது ஔரங்கஸேப் பஹதூர் ஆலம்கீர் பாதுஷா இ காஸி “ என்று பட்டம் சூட்டப்பட்டார். ராஜகுடும்ப பெண்களான பாதுஷா பேகம் 5,00,000 ரூபாயும், ஸெபுன்னிஸா 4,00,000 ரூபாயும், பதுருன்னிஸா 1,60,000 ரூபாயும், ஸுப்ததுன்னிஸா 1,50,000 ரூபாயும், இளவரசர்களான முஹம்மது ஆஸம் 2,00,000 ரூபாயும்,10,000 குதிரைகளும், முஹம்மது சுல்தான் 3,00,000 ரூபாயும், யானைகள் மற்றும் நகைகளும், முஹம்மது முஃஸ்ஸம் 2,00,000 ரூபாயும், முஹம்மது அக்பருக்கு 1,00,000 ரூபாயும் வழங்க ஆணையிட்டார். மேலும் உயரதிகாரிகளான அமீருல் உமராஃபாஸில் கான்ஸமான், சாஃதுல்லாஹ் கான் மற்றும் ராஜா ரகுநாத் ஆகியோருக்கும் ராஜஅங்கியும் வழங்கி சிறப்பித்தார். பதவியேற்பு விழாவை இரண்டு மாதங்கள் விருந்தளித்து கொண்டாடினார்கள்.
பல வெளிநாட்டு முஸ்லீம் தூதுவர்களும் வந்து வாழ்த்தினார்கள். அவர்களும் சிறப்பு அங்கி அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். டச்சு மற்றும் ஃபிரான்சு நாட்டு பிரதிநிதிகளும் வந்து மரியாதை செலுத்தினார்கள். ஆரம்பத்தில் பல போர்கள் நடந்ததால், மொகலாய நிர்வாகம் சற்று கவனம் இல்லாமல் போனது. ‘ராஹ்தாரி’ எனப்படும் சாலை கடக்கும் (TOLL) வரி, வெறும்காலி நிலம் மற்றும் வீடு கட்டிய நிலத்திற்கான ‘பண்டாரி’ வரி என்று எண்பது வகையான வரிகள் விதிக்கப்பட்டிருந்தது. அனைத்தையும் ஔரங்கஸேப் நீக்கினார். சோளத்தின் மீதிருந்த வரியை நீக்கி உணவுப் பொருள் விலையை வீழ்த்தினார். மது விற்பனை, விபச்சார, சூதாட்டவிடுதிகளை தடைசெய்து முஸ்லீம் ஞானிகளிடமும், ஹிந்து யாத்ரீகர்களிடமும் நற்பெயர் பெற்றார். நாணயங்களில் ‘கலிமா’ வரிகளை பொறிப்பதை நிறுத்தினார். மது அருந்தி, அருவருப்பான நடனம் ஆடிக் கொண்டாடும் பெர்ஷிய நௌரோஸ் பண்டிகையை தடை செய்தார். பழைய பள்ளிவாசல்களை புதுப்பித்து அரசு ஊதியத்தில் இமாம்களையும், முஃஅத்தீன்களையும் (தொழுகைக்கு அழைப்பவர்) நியமித்தார். இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிராக செயல்படும் அனைத்து சமூக பொதுத்துறைகளும் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.
தனது முன்னோர்களின் ஆட்சியில் அதிக கவனம் செலுத்தப்படாமல் இருந்த சுன்னிப்பிரிவு இஸ்லாமிய கொள்கைகளை தீவிரமாகக் கடைபிடித்து வெற்றி கொண்டதால் இன்றுவரை பல உலகநாடுகளின் பாராட்டை பெற்று வருகிறார். ஊழலில் ஊறிக்கிடந்த பல மாகாண கவர்னர்களையும், வைஸ்ராயர்களையும் இடம் மாற்றினார். கீழ் பணிபுரிந்த அனைவரும் ஔரங்கஸேப்புக்கு உண்மையாக உழைத்தனர். அவரும் பெருமகிழ்ச்சி கொண்டு பல பதவி உயர்வும், பரிசுகளையும் கொடுத்து நன்றியை வெளிப்படுத்தினார். லாகூரின் கவர்னராக இருந்த ராஜா ஜெய்சிங் மேலும் சம்பார் பகுதிக்கும் கவர்னராக ஆக்கப்பட்டார். டெக்கானுக்கு ஷாயிஸ்தா கானும், மஹபத்கான் குஜராத்துக்கும், ஷெய்க் மீர் காபூலுக்கும், டெல்லிக்கு டானிஷ்மண்ட் கானுக்கும், லாகூருக்கு கலீலுல்லாஹ்வும், அலஹாபாத்துக்கு மீர் பாபாவும், பாட்னாவுக்கு லஷ்கர்கானும், காஷ்மீருக்கு  தைனத் கானும், சிந்துவுக்கு ஷாஹ் ஷுஜாவும் நியமிக்கப்பட்டார்கள். கச் பகுதியின் ராஜாவால் மொகலாயப் பகுதிகளான பீகாரும், அஸ்ஸாமும் கையகப்படுத்தப்பட்டது. மீர் ஜும்லாவின் தலைமையில் படையெடுக்கப்பட்டு மீட்கப்பட்டது. மீர் ஜும்லா மேலும் சென்று சீனாவை கைப்பற்ற எண்ணினார். ஆனால் கடுமையான மழை காரணமாக தொடர்புகள் துண்டிக்கப்பட்டு திரும்பிவிட்டார். வயதின் காரணமாக 1663 மார்சில் டெக்கானை அடையும் முன் கிஸ்ர்பூரில் மரணமடைந்தார். 
  இங்கு மீர் ஜும்லாவைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். பிஜப்பூர், கோல்கொண்டா அரசியலில் ஒரு மிக்கிய புள்ளியாக இருந்த இவர் கோல்கொண்டாவின் வஸீராக இருந்தார். இவர் பெர்ஷியாவின் இஸ்ஃபஹானைச் சேர்ந்த சையத் வம்சத்தின் எண்ணெய் வியாபாரின் மகனாவார். இளமையில் ஷியா பிரிவினரின் பல வெற்றிகளைக் கேள்விப்பட்டிருந்த மீர் ஜும்லா எதிர்காலம் வேண்டி, 1630 ல் டெக்கான் சுல்தான் பகுதிக்கு வந்தார். ஒரு வைர வியாபாரியான இவருக்கு செல்வம் பெருவாரியாக இருந்தது. அதல்லாமல் இவரின் தனிப்பட்ட திறமைகள் அப்துல்லா குத்ப் ஷாவால் கவனிக்கப்பட்டு, பிரதம மந்திரியாக ஆக்கப் பட்டார். இவர் தொழில், இராணுவம், தலைமைத்துவம் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியடைந்தார். கர்நாடகாவுக்கு பொறுப்பேற்ற இவர் பல மாற்றங்களைச் செய்தார். தனது சொந்த முயற்சியால் ஐரோப்பிய துப்பாக்கி வீரர்களையும், பீரங்கிகளையும் கொண்டு பலப்படுத்தி சுல்தானால் முன்னேற முடியாமல் போன கடப்பாவை வெற்றி கொண்டார். மலைக்கோட்டையான கண்டிகோட்டா, கிழக்கு கடப்பாவில் சித்தௌட், வட ஆற்காட்டில் சந்திரகிரி மற்றும் திருப்பதியை வென்றார். தென்பகுதியில் பழைய கோவில்களில் புதையுண்டிருந்த பல பொக்கிஷங்களை அள்ளி வந்தார். செம்பாலான பல இந்து கடவுள் சிலைகளை உருக்கி பீரங்கிகளைச் செய்தார். பல இடங்களைத் தோண்டி வைரங்களை கண்டு பிடித்தார். தென் பகுதியின் இணையற்ற பெரும் செல்வந்தரானார். மீர் ஜும்லா ஷாஜஹானிடம் பணிக்கு சேர்ந்த போது, பதினைந்து லட்ச ரூபாய் அன்பளிப்பு செய்தார். அதே தொகையை ஔரங்கஸேபுக்கும், அவர் மகனுக்கும் கொடுத்தார். 300 மைல் நீளம், 50 மைல் அகலத்தில் கர்னாடகாவில் வைரச் சுரங்கங்களுடன், ஆண்டுக்கு ரூபாய் 40 லட்சம் வருவாய் வரும் சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார். திறமையான 5000 குதிரை வீரர்கள், 20,000 காலாட்படை, பீரங்கிப் படை, போர் பயிற்சி பெற்ற யானைப்படை என்று ஒரு இராணுவத்தையும் அமைத்திருந்தார்.
மீர் ஜும்லாவின் செல்வத்தில் பங்கும், அவ்வப்போது இராணுவ உதவியும் கிடைத்தும், கர்நாடகாவில் தனிச் செல்வாக்கிலிருந்த மீர் ஜும்லாவின் சிறப்பு சுல்தான் குத்ப் ஷாவைக் கலவரப்படுத்தியது. இதனால் பங்கில் பிரச்சினை எழுப்ப்பட்டு, மீர் ஜும்லாவுக்கு செய்யும் சேவைக்கு ஏற்ப சுல்தானால் ஊதியம் மட்டுமே தரப்படும் என்றும் மற்ற அனைத்தும் சுல்தானுக்கு சேர வேண்டும் என்று பிரச்சினை உருவானது. தன் சொந்த உழைப்பால் பல முதலீடுகளைச் செய்து வெற்றி கண்ட மீர் ஜும்லாவுக்கு தன் எஜமானனின் பலவீனம் நன்கு தெரியும். மீர் ஜும்லா சுல்தானால் அழைக்கப்பட்டு, கோல்கொண்டா சென்றார். இவர் வந்தால் கைது செய்து கண்களைப் பிடுங்க திட்டம் தீட்டி சுல்தான் தயாராய் இருந்தார். திட்டம் செயலாவதற்கு முன்பு சுதாரித்துக் கொண்டு மீர் ஜும்லா திறமையாகத் தப்பித்துச் சென்றார். இதன் பிறகு, எத்தனையோ முறை குத்ப் ஷா அழைத்தும் மீர் ஜும்லா கோல்கொண்டா செல்லவில்லை. இதை அறிந்த பிஜப்பூர் சுல்தான் ஆதில் ஷா கர்நாடகாவை மீர் ஜும்லாவே வைத்துக் கொள்ளட்டும் என்றும், வைரம் பதிக்கப்பட்ட விலையுயர்ந்த கழுத்தணியை பரிசளித்து தன்னிடம் இருக்க அழைத்தார்.  மீர் ஜும்லா வுக்கு அதில் விருப்பமில்லாததால் டெக்கானின் இரு சுல்தான் களிடமிருந்து பாதுகாப்பு வேண்டி பெர்ஷியாவை நாடினார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. மீர் ஜும்லா மொகலாயர்களின் உதவியை நாடினார். அதேநேரத்தில் வளம் கொழிக்கும் கோல்கொண்டாவைப் பிடிக்க ஆர்வமாய் இருந்த ஔரங்கஸேபும் மீர் ஜும்லா மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்புக்கும், அவரின் செல்வங்களுக்குப் பாது காப்புக்கும் உத்திரவாதம் அளிப்பதாகவும், அதற்கு பிரதியாக அவரை மொகலாய தர்பாரில் பணி செய்யுமாறும் அழைத்தார். இதைத் தொடர்ந்து ஔரங்கஸேப் விவேகமான தரகராக முஹம்மது முஃமீன் என்பவரை ரகசிய பணி ஒப்பந்தம் ஒன்றைக் கொடுத்து நேரடியாக மீர் ஜும்லாவிடம் அனுப்பினார்.
  இதைகேள்விப்பட்ட குத்ப் ஷா பதறிப்போய் நம்பகமான அதிகாரிகளை அனுப்பி மீர் ஜும்லாவை கட்டுப்படுத்தினார். அதற்கு மீர் ஜும்லா அடுத்த இரண்டாண்டுகளில் ஒன்று தான் குத்ப் ஷாவுக்கு பணி செய்யலாம் அல்லது இந்தியாவை விட்டு போகலாம் என்று இருப்பதாகக் கூறினார். இதற்கிடையில் மொகலாயர்களுக்கும், மீர் ஜும்லாவுக்கும் இடையே ரகசியமாக தூதுவர்கள் செய்தி பறிமாறிக்கொண்டிருந்தார்கள். ஓராண்டில் தனக்கான துறைமுக வரி பாக்கிகளை வசூலித்துக் கொண்டு மொகலாயப் பணியில் இணைவதாக ஒப்புக் கொண்டார். இதற்குள் மீர் ஜும்லாவின் நடவடிக்கை பிஜப்பூர் சுல்தானுக்கும் தெரிய வர இரண்டு சுல்தான்களும் கூட்டாக இணைந்து மீர் ஜும்லாவைத் தாக்க முடிவெடுத் தார்கள். மீர் ஜும்லா தாமதிக்காமல் ஔரங்கஸேபுக்கு, தான் ஷாஜ ஹானுக்கு கீழ் பணிபுரிய ஒப்புதல் அளிப்பதாகவும், தன்னை சுல்தான்களிடமிருந்து காப்பாற்றுமாறும் கடிதம் எழுதினார். ஔரங்க ஸேப் சுல்தான்கள் மீர் ஜும்லாவை தாக்கும் வரை பொறுமையாய் இருந்து, அப்புறம் தான் சம்மதித்து பதில் கடிதம் அனுப்பினார். 
      மீர் ஜும்லாவின் மகன் முஹம்மது அமீன் தந்தையின் அபரிதமான சொத்துக்களின் காரணமாக திமிர் பிடித்தவனாக இருந்தான். கோல் கொண்டா சுல்தான் குத்ப் ஷாவிடம் பணியிலிருந்த காலங்களில், அவரை மன்னராகக்கூட மதிக்காமல் உரக்கப் பேசுவது, மறுத்துப்பேசுவது என்று தான் ஏதோ இளவரசர் என்பது போல் நடந்து கொள்வான். இப்போது அவன் நன்கு மது அருந்திவிட்டு, சுல்தானின் அறையிலேயே அலங்கோல மாக உறங்கினான். இனி பொறுப்பதற்கு ஆகாது என்று சுல்தான், முஹம்மது அமீனின் குடும்பத்தைச் சிறைப்பிடித்து, சொத்துக்களைப் பறிமுதல் செய்தார். இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கருதிய ஔரங்கஸேப் ஷாஜஹானிடம் போருக்கு உத்தரவு கேட்க, அவர் மீர் ஜும்லாவுக்கு 5000 குதிரைவீரர்களுக்கு தகுதியாகவும், அவர் மகனுக்கு 2000 குதிரைவீரர்கள் தகுதியாகவும் கௌரவித்து மொகலாய தர்பாரில் பணி நியமன உத்தரவையும் வழங்கி, கையோடு சுல்தானுக்கு மீர் ஜும்லா வின் மீது நடவடிக்கையோ, சொத்துப் பறிமுதலோ செய்யக்கூடாது என்றும், அவர் மகனையும் குடும்பத்தையும் விடுதலை செய்ய வேண்டு மென்றும் உத்தரவிட்டார். மொகலாய உத்தரவை செயல்படுத்தும் முன் சுல்தான் படைகளை கோல்கொண்டா எல்லை நோக்கி நகர்த்தினார். மொகலாயர்களின் அனைத்து உத்தரவுகளையும் மீறி குத்ப் ஷா பொரில் இறங்கினார். மொகலாயர்கள் மீர் ஜும்லாவுக்கு ஆதரவாக வருகிறார்கள் என்று அறிந்தவுடன் பிஜப்பூர் சுல்தான் விலகிக் கொண்டார். ஜுன்னார் பகுதியில் சிவாஜி தொந்திரவு கொடுத்த போதிலும் மொகலாயப் படைகள் முன்னேறின. சுல்தானின் படைகளை வெற்றி கொண்டு மொகலாயர்கள் வளமான, பல தலைவர்களையும், அதிகார்களையும், வைர வாணிபமும் நடந்து கொண்டிருந்த ஹைதராபாதுக்குள் நுழைந்தார்கள். சுல்தானின் அனைத்து செல்வங்களையும் ஔரங்கஸேப் கைப்பற்றினார். பின்னர் மூன்று திசைகளிலிருந்தும் தாக்கி கோல்கொண்டாவை வெற்றி கொண் டார். பின்னர் சுல்தான் தன் தாயாரை ஔரங்கஸேபிடம் மன்னிப்பு வேண்டியும், தன் மகளை ஔரங்கஸேபின் மகனுக்கு மணமுடித்து தருவதாகவும் கெஞ்சினார். இங்கு ஔரங்கஸேபுக்கும், தந்தை ஷாஜஹானுக்கும் இடையேயான நீண்ட அரசியல் தகராறு இருப்பதால் அக்கதையை நாம் தவிர்த்து விடுவோம். பிற்காலத்தில் மீர் ஜும்லா, ஷாஜஹானின் தர்பாரில் சிறப்பாக பணிபுரிந்து இரந்து போனார். மீர் ஜும்லாவின் அனைத்து பொறுப்புகளும் மகன் முஹம்மது அமீனுக்கு வழங்கப்பட்டது.
மீர் ஜும்லா கவர்னராக இருந்த பெங்கால் மட்டும் ஷாயிஸ்தாகானுக்கு வழங்கப்பட்டிருந்தது. சிட்டகாங்கில் அட்டூழியம் செய்து கொண்டிருந்த கொள்ளைக்காரர்களையும், அவர்களுக்கு ஆதரவளித்துக் கொண்டிருந்த அராகானின் ராஜாவையும் அடக்க புதிய கவர்னர் ஷாயிஸ்தாகான் நடவடிக்கை எடுத்தார். 1665 ல் மாக் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளையும் கைப்பற்றி, 1666 ஜனவரியில் முழுவதுமாக சிட்டகாங்கை வெற்றி கொண்டு இஸ்லாமாபாத் என்று பெயர் மாற்றினார்கள். வங்காள விரிகுடாவில் சொந்தீப் தீவையும் கைப்பற்றியதால் அப்பகுதியில் கொள்ளைக்காரர்கள் முற்றிலும் தடுக்கப்பட்டனர். ஆட்சிக்கு வந்த ஐந்து ஆண்டுகளில் ஔரங்கஸேப் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். இடையே ராஜா ஜஸ்வந்த் சிங்கும், மஹபத்கானும் சிறையிலிருந்து ஷாஜஹானை விடுவிக்க இருக்கிறார்கள் என்று பேச்சு அடிபட்டது. ஒருபிரிவினர் ஔரங்கஸேப்பின் மகன் முஃஅஸ்ஸமையும், இன்னொரு பிரிவினர் இன்னொரு மகன் அக்பரையும் ஆட்சிக்கு கொண்டு வர ஆதரித் தனர். அடுத்த ஐந்து நாட்களில் ஔரங்கஸேப் உடல்நலம் பெற்று தன் அலுவல்களை கவனித்தார்.
தன்னால் இயலாமல் போனால், தான் உத்தரவிட்டு போகும் போது மட்டும் உபயோகிக்க வேண்டி சகோதரி ரௌஷனாரா பேகத்திடம் கொடுத்து வைத்திருந்த ராஜ முத்திரையை திரும்பப் பெற்றார். மேலும் உடல்நலம் தேற ஓய்வெடுக்க காஷ்மீர் சென்றார். ஃபிரான்சு தத்துவஞானி பெர்னியரையும் உடன் அழைத்துச் சென்றார். பின்னர் வடமேற்குப் பகுதியில் தீவிர கவனம் செலுத்தினார். பழங்குடிகளை கொண்ட அப்பகுதி எப்போதுமே பேரரசுக்கு பாரமாகவே இருந்தது. சட்டம், ஒழுங்கு சரியில்லாத இடமாகவே இருந்தது. அப்பிரதேச வெற்றி அறைகுறை யாகவே இருந்தது. பழங்குடியினர் அடிக்கடி மொகலாய பிரதேசமான பெஷாவரில் நுழைந்து  தாக்குதல் நடத்தினர். 1667 ல் பாகு தலைவன் யூசஃப்ஸைஸ் என்பவன் இந்துவைக் கடந்து ஹஸாரா மாகாணத்தைத் தாக்கினான். அங்கிருந்த ஏழைகளைத் தாக்கி அதிகாரம் செலுத்தினான். மொகலாய எல்லைகளைத் தாக்கி மேலும் உள்ளே நுழைய முன்னேறி னான். ஔரங்கஸேப் மீர் ஜும்லாவின் மகன் முஹம்மது அமின் கான் மூலம் படை அனுப்பி, யூசஃப்ஸைஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்கச் செய்தார். அமின் கான் மேலும் காமில்கான், ஷம்ஷெர்கான் ஆகியோரு டன் சேர்ந்து யூசஃப்ஸைஸை காபூல் பள்ளத்தாக்கின் ஆற்றில் விரட்டிச் சென்று தோற்கடித்தனர். ஜம்ரூத் பகுதியில் ராஜா ஜஸ்வந்த் சிங் அதிகாரத்தில் வைக்கப்பட்டவுடன் ஆஃப்கான் சற்று அடங்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக