வியாழன், 9 ஜூலை, 2015

மொகலாய வரலாறு 21

 யாருக்காகவும் காத்திருக்காமல் முதலில் 1658 ஜனவரியில் இளவரசர் ஷுஜா பெங்காலிலிருந்து தன் படைகளை முன்னேற்றி பீஹார் வழியாக பனாரஸை அடைந்தார். தான் ஆளவிருக்கும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள தாராவும், மிர்சா ராஜா ஜெய்சிங் கஸ்வாஹா என்பவரின் உதவியுடன் தனது மூத்த மகன் சுலைமான் ஷிகோவின் தலைமையில் ஷுஜாவை எதிர்க்க படையை முன்னேற்றினார். 1658 பிப்ரவரியில் இருபடைகளும் பஹாதுர்கர் என்ற இடத்தில் மோதிக்கொள்ள ஷுஜா தோல்வியுற்று பெங்காலுக்கே பின் வாங்கினார். இதற்கிடையில் ‘முரவ்வஜுத்தின்’ என்ற பெயரில் நாணயம் வெளியிட்டு குஜராத்தில் ஆட்சியிலிருந்த முராத் ஆறாயிரம் குதிரைகள் அடங்கிய பெரும் படையுடன் சென்று சூரத் துறைமுகத்தைக் கொள்ளையடித்தார். ஔரங்கஸேப், முராதின் சூரத் வெற்றிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார். முராதும் பதிலுக்கு தான் மறுபுறம் நர்மதாவில் தாக்க இருப்பதற்கு தன்னுடன் இணைந்து கொள்ளுமாறு ஔரங்கஸேப்பைக் கேட்டுக் கொண்டார். இதனால் இரு சகோதரர்களும் இணைந்து கொண்டார்கள். தாராவும், காசிம் கான் மற்றும் ராஜா ஜஸ்வந்த் சிங் தலைமையில் அவர்களை எதிர்க்க படை அனுப்பினார். 1658 ஏப்ரலில் உஜ்ஜெயினுக்கு அருகில் தர்மத் என்ற இடத்தில் நடந்த போரில் தாராவின் மொகலாயப்படை தோற்க, ராஜா ஜஸ்வந்த் சிங் தன் ராஜபுத்திர வீரர்களுடன் தப்பித்து ஓடினார். வெற்றிபெற்ற சகோதரர்கள் சம்பல் பகுதியின் பாதையை வசப்படுத்தி, பிரபலமான சாமூகர் பகுதியைக் கைப்பற்றினார்கள். இராணுவத்திறமையற்ற முஸ்லீம் தளபதிகள் மற்றும் ஹிந்து ராஜாவால் தோல்வியடைந்ததால், முராத் தானே முன்னின்று இம்முறை போர் நடத்தத் தயாரானார். பொறுமை இல்லாத தாரா, மகன் சுலைமான் ஷிகோ மூலம் பஹாதுர்கர் பகுதியில் ஷுஜாவை வென்றார். தந்தையின் ஆலோசனையையும் ஒதுக்கி ஆக்ராவை விட்டு, வெளியே வந்து ஔரங்கஸேப், முராத் கூட்டணியை எதிர்கொண்டார். தாரா, 1658 மே மாதத்தில் சகோதரர்களை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் எண்ணத்தில் ஐம்பதினாயிரம் விரர்களுடன் சாமூகர் பகுதிக்கு வந்தார். ஒருபுறம் தங்கள் குலப்பெருமையைக் காக்க ராஜபுத்திரர்களும், உயிரை துச்சமாக மதித்து எப்படியேனும் சகோதரர் தாராவிடமிருந்து ஆட்சியைப் பிடித்து விடவேண்டுமென்று ஔரங்கஸேப், முராதும் கடுமையாகப் போரிட்டனர். ஆரம்பத்தில் மொகலாயர்கள் கை ஓங்கியது போல் இருந்தது. தாராவின் போர் யானை பலத்த காயமடைந்ததால், அவர் குதிரைக்கு மாறினார். இது போரின் போக்கை மாற்றியது. மொகலாயப்படைகள் யானையின் ஹௌதாவில் (கால்நடைகளில் அமர பயன்படுத்தும் படுக்கை) தாராவைக் காணாததால் படையை விட்டு விலகினார்கள். ஔரங்கஸேப் பெரு வெற்றி அடைந்தார். வெற்றிக்காக முராதைப் பாராட்டினார். தோல்விக்குப் பின் தாராவும், மகன் சிபெர் ஷிகோவும் ஆக்ரா திரும்பினார்கள்.
                               வெற்றி பெற்ற ஔரங்கஸேப் எந்த எதிர்ப்புமின்றி ஆக்ராவில் நுழைந்தார். பாக் இ நூர் என்ற இடத்தில் தங்கி, தந்தை ஷாஜஹானுக்கு தன்னால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார். எக்காரணத்தைக் கொண்டும் ஷாஜஹான் தாராவைத் தவிர எந்த மகன்களையும் ஆட்சிக்கு ஆதரிக்க மாட்டார் என்பதை ஔரங்கஸேப் நங்கு உணர்ந்திருந்தார். தன் மகன் முஹம்மது சுல்தானை அனுப்பி அரண்மனையைக் கைப்பற்றச் செய்தார். ஷாஜஹானை அரண்மனையிலேயே அடுத்த எட்டு ஆண்டுகள் சிறை வைத்தார். ஷாஜஹான் தன்னிடமிருந்த “ஆலம்கீர்” என்ற போர்வாளை ஔரங்கஸேப்புக்கு அளித்தார். இறுதிக் காலத்தில் மனைவியின் நினைவிடத்தை ஓய்வுநேரம் பார்க்கும் வண்ணம் ஆக்ராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 1666 ல் ஷாஜஹான் மரணமடைந்தார்.
                             ஔரங்கஸேப், ஷுஜா மற்றும் முராதுக்கும் இடையே  ஒருவருக்கொருவர் தாராவுக்கு எதிராக யார் போர் தொடுத்தாலும் உதவி செய்து கொள்ளவேண்டும் என்று ஒப்பந்தம் இருந்ததே தவிர, வெற்றி பெறுவது, ஆட்சியைப் பிடிப்பது போன்றவற்றில் எந்த உடன்பாடும் செய்து கொள்ளவில்லை. சாமூத்கரின் வெற்றிக்குப் பிறகு, ஔரங்கஸேப்பின் செல்வாக்கு உயர்ந்ததால் முராத் பொறாமை கொண்டார். அதனால் தந்தை ஷாஜஹானுக்கு மன்னிக்க வேண்டி இரகசியமாக கடிதம் எழுதி, அவரின் ஒத்துழைப்புடன் ஔரங்கஸேப்புக்கு எதிராக திட்டம் தீட்டினார். ஷாஜஹானும் முராதுக்கு உதவுவதாக கூறி, முராதையும் வெற்றி விருந்து தருவதாகச் சொல்லி  ஔரங்கஸேப்பையும், அவர் மகன்கள் அனைவரையும் அழைத்து தீர்த்துக்கட்டுமாறு ஆலோசனை சொல்லி நம்பிக்கையான ஒருவன் மூலம் கடிதம் அனுப்பினார். செய்தி அறிந்த பின் முராத் தவறுதலாக அக் கடிதத்தை ஒரு புத்தகத்தின் உள் வைத்துவிட்டார். சுத்தம் செய்யும் போது அதைக் கண்டுவிட்ட முராதின் பணியாள், அதை ஔரங்கஸேப்புக்கு அனுப்பினான். ஔரங்கஸேப் இரகசியமாக ஒரு திட்டமிட்டு முராதை தந்தை சொன்ன ஆலோசனையின் பேரில் விவாதிக்க வருமாறு அழைப்பு விடுத்தார். விருந்தின் போது, அளவுக்கு அதிகமாக மது அருந்திய முராத், ஔரங்கஸேப் ஆட்சியாள தகுதி அற்றவரென்று உளறினார். இதற்காகவே காத்திருந்தாற் போல் ஔரங்கஸேப் அவரை சங்கிலியால் சிறைப்பிடித்து குவாலியர் சிறைக்கு அனுப்பப்பட்டு கொலைக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
                        ஏற்கனவே பஹாதுர்கர் போரில் தோல்வியுற்று தப்பியோடிய ஷுஜா என்ற அடுத்த சகோதரர் மீண்டும் ஒருமுறை ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்தார். 1659 ஜனவரியில் ஔரங்கஸேப் காஜ்வாஹ் என்ற இடத்தில் தோற்கடித்தார். தப்பியோடிய ஷுஜாவை மீர் ஜும்லா என்பவர் விடாமல் துரத்தினார். பல இடங்களுக்கு ஓடிய ஷுஜா இறுதியில் 1660 ல் அராகான் என்ற இடத்தில் இருந்த போது மாக்ஸ்களால் (அராகான் பிரதேச மக்கள் மாக்ஸ்கள் என்றழைக்கப்பட்டனர்) கொல்லப்பட்டார். இதற்கிடையில் ஔரங்கஸேப்பின் அதிகாரிகள் தாராவை ஒவ்வொரு இடமாகத் தேடினார்கள். காத்தியாரிலிருந்து விரட்டி வரப்பட்ட தாரா அஜ்மீர் வந்து முடிந்தமட்டிலும் துணிவாக எதிர்த்து நின்றார். நான்கு நாட்களாக ஔரங்கஸேப்பால் தாராவை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஐந்தாம் நாள் ஏமாற்றும் விதமாக, ஔரங்கஸேப்பை விட்டு தன்னுடன் வந்து சேர்ந்து கொள்வதாக தலேர் கான் என்பவர் சொன்னதை நம்பி, பெரும்பான்மையானவர்களை தாரா அனுப்பினார். நம்பிக்கையான ஃபிரோஸ் மேவாதி என்பவருடன், தன் மகள், மகன் சிபேர் ஷிகோ மற்றும் சிலருடன் அஹ்மதாபாத் நோக்கி சென்றார். வழியில் சிலர் அவரின் உடமைகளைப் பிடுங்கிக் கொள்ள, சில நகைகள் மற்றும் பணத்துடன் அஹ்மதாபாத்தை அடைந்தார். ஆனால், அதன் கவர்னர் அரண்மனைக் கதவிகளை அடைத்து விட, பிரபலமான கொள்ளைக்காரன் கான்ஜி கோலியின் உதவியுடன் கட்ச் பகுதிக்கு வந்தார். ஏற்கனவே கட்ச் பகுதியின் ஜமீன்தார் ஒருவர் தன் மகனுக்கு தாராவின் மகளை மணமுடிக்க ஒப்புதல் அளித்திருந்தார். தற்போது அவர் மறுத்து விட்டார். இந்த இக் கட்டான சூழ்நிலையில் சிந்துவுக்கு சென்று விட தீர்மானித்து, சிந்துவை நெருங்கும் வேளையில் ஃபிரோஸ் மேவாதியும் மற்றவர்களும் அவரை விட்டுச் சென்றுவிட்டனர். துயரத்தின் உச்சமாக தாராவுக்கு பெரும் ஆதரவாக இருந்த அவர் மனைவி நாதிரா பேகம் இடைவிடாத மலப்போக்கால் இறந்து போனார். இறுதியாக தாரா, மலிக் ஜிவான் கான் என்பவரிடம் அடைக்கலமாக அவர் ஔரங்கஸேப்பிடம் ஒப்படைத்தார். சிறைபிடிக்கப்பட்ட தாரா லாகூர் வழியாக டெல்லி வரவழைக்கப்பட்டு, தேசதுரோக குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்பட்டார்.
                        தந்தை தாராவுக்கு துணையாக நின்று, அவர் மறைந்தோடிய காலங்களில் உதவி செய்த மூத்த மகன் சுலைமான் ஷிகோ, ஔரங்கஸேப்புடனான அஜ்மீர் போரில் ஒத்துழைக்காமல் ஓடிப்போனார். அவரை விரட்டிப் போன ஔரங்கஸேப்பின் உறவினரான ஷாயிஸ்தா கான் என்பவர் கார்வாலில் சிறை பிடித்து அழைத்து வந்தார். க்வாலியர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் 1662 ல் இறந்து போனார். மற்ற சகோதரர்களின் அனைத்து மகன்களையும் ஔரங்கஸேப் சிறையில் அடைத்தார். சிபேர் ஷிகோ மற்றும் ஆஸாத் பக் ஷ் என்ற சகோதரர்களின் இருமகன்கள் ஔரங்கஸேப்பின் மூன்றாவது மற்றும் ஐந்தாவது மகள்களை முறையே மணந்ததால் பிழைத்துக் கொண்டார்கள். சகோதரர் ஷுஜாவின் மகளை மணந்து இடையே ஷுஜாவுக்கு ஆதரவாக இருந்த சொந்த மகனையே ஔரங்கஸேப் சிறையில் அடைத்தார்.
                            மேற்படி உறவுகளிடையே ஔரங்கஸேப் கடுமையாக நடவடிக்கை எடுக்க காராணங்களாக பின் வருபவை கூறப்படுகின்றன. ஆரம்பத்திலேயே ஷுஜாவும், முராதும் தன்னிச்சையாக தாங்கள் பொறுப்பாக இருந்த பகுதிகளை ஆட்சியாளராக அறிவித்துக் கொண்டார்கள். இதனால் தான் தற்போது மொகலாய ஆட்சிக்கு வந்ததால், எப்போதுமே அவர்களால் ஆபத்து தான். அடுத்து டெக்கானின் பொறுப்பில் ஔரங்கஸேப் இருந்த போது, தாராவின் தலையீடு பெரும்பாலும் இருந்தது. இந்த ஆரம்ப வெறுப்பு நாளாக ஆக தந்தையின் மூலம் தாரா ஆட்சிக்கு வந்ததால் மேலும் பலமாகியது. ஷாஜஹான் உடல் நலமில்லாமல் இருந்த செய்தி முதல் கூடுமானவரை எந்த ராஜாங்க செய்தியும் மற்ற சகோதரர்கள் தெறிந்து கொள்ளாதவரை பாதுகாத்தார். ஔரங்கஸேப் மிகச்சிறந்த நெறியான முஸ்லீமாக இருந்தார். ஒருவேளை தாரா ஷிகோ ஆட்சி செய்தால் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி மிகச் சீர்கேடான நிலையை அடையும் என்று எண்ணினார் என்று முஹம்மது காசீம் கூறினார்.
                        அலி மர்தான் கான் என்பவரின் பொறியியல் மேற்பார்வையில் கட்டப்பட்ட ராவியிலிருந்து லாகூருக்கு கட்டப்பட்ட கால்வாயும், ஷலாமார் தோட்டமும் மிகச் சிறப்பானது. அசஃப்கான் என்ற அப்துல் ஹசனாகிய ஷாஜஹானின் மாமனார் மொகலாய ஆட்சியில் பெரிய பொறுப்பு வகித்தார். இறுதிக்காலம் வரை ஷாஜஹானுக்குத் துணையாக இருந்தார். அவர் 1641 ல் லாகூரில் மரணமடைந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்து, அதிகமான படிப்பறிவினால் மொகலாய ஆட்சியில் சிறப்பான இடத்திற்கு அல்லாமா சாஃதுல்லாஹ் கான் என்பவர் வந்தார். இந்திய மந்திரிகளிலேயே மிகவும் நேர்மையானவர் என்ற பெயரைப் பெற்றார். ஷாஜஹானின் நிர்வாகத்திறமை மிகவும் நன்றாக இருந்தது.  ஷாஜஹானின் நிர்வாகம் முன்னவர்களைப் போலவே இருந்தது. ஆனாலும் நல்ல முன்னேற்றம் கண்டது. ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சி கண்டு, வருவாயைப் பெருக்கியது. மக்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். நல்ல நீதி அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்று கவர்னர்கள் அறிவுறுத்தப்பட்டார்கள். வெளிநாட்டு சரித்திர ஆசிரியர்கள் பெர்னியர், தவேனியர், நிக்கோலாவ் மனுச்சி மற்றும் பீட்டர் முண்டி போன்றோர் ஷாஜஹானின் ஆட்சியை வெகுவாகப் புகழ்ந்தனர்.
                        ஆரம்பத்தில் பல போர்களில் ஈடுபட்டு வெற்றி கண்டிருந்தாலும் போரின் விளைவை எண்ணி தவிர்க்க விரும்புவார். கட்டிடக்கலை, ஓவியம், கவிதை மற்றும் இசைக்கலைகளில் சிறந்து விளங்கியது. தாஜ்மஹலும், டெல்லி கோட்டையும், டெல்லி ஜும்மா மசூதியும் கட்டிடக் கலையின் சிறப்பாகும். சிறந்த பாடகர்களான ராம் தாஸ் மற்றும் மஹாபட்டர் ஆகியோரை அரசவையில் வைத்திருந்த ஷாஜஹான் தானும் ஒருசிறந்த பாடகராக இருந்தார். தான் கட்டிய அனைத்து கட்டிடங்களையும் தோட்டங்கள் உள்ளதாக கட்டினார். நபிமார்கள் வரலாறு மற்றும் சிறந்த பெர்ஷிய இலக்கணங்களை யாரையாவது படிக்க வைத்து கேட்பது ஷாஜஹானுக்கு மிகவும் பிடித்தது. வாழ்க்கை வரலாறுகளில் தைமூரியர், பாபரின் வரலாறுகள் மிகவும் பிடித்தமானவை. இரவுகளில் திரைகளுக்குப் பின் ஒருவரை படிக்கச் சொல்லி கேட்டுக் கொண்டே உறங்குவது ஷாஜஹானுக்கு பிடித்தமான ஒன்று. மொகலாய மன்னர்களிலேயே மிகவும் கனிவானவர் ஷாஜஹான் என்று சரித்திர ஆய்வாளர் ஸ்டான்லி லேன் பூல் தெரிவிக்கிறார். மனைவி மும்தாஜ் மஹலின் மீதிருந்த அதீத பிரியத்தால் வேறு மணம் கொள்ளாதவராக இருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக