வியாழன், 9 ஜூலை, 2015

மொகலாய வரலாறு 20

1636 ல் பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டா சுல்தானுக்கு மொகலாயர்களுக்கு அடிபணிந்து கப்பம் செலுத்தவும், அஹ்மத்நகர் மீது காட்டும் ஷாஜி போன்ஸ்லா (சிவாஜியின் தந்தை) வின் தலையீட்டை தடை செய்யவும் அரசாணை அனுப்பப்பட்டது. இதற்கு கோல்கொண்டா வின் ஆட்சியாளர் மொகலாயர்களின் அனைத்து ஷரத்துகளுக்கும் உட்பட்டு ஒப்புக்கொண்டனர். ஆனால் பிஜப்பூர் சுல்தான் முழுவதுமாக உடன்பட மறுத்தார். அதனால் பிஜப்பூரின் மீது தாமதமின்றி படையெடுக்க ஷாஜஹான் உத்தரவிட்டார். ஒருபுறம் கான் ஜஹான் ஷோலாபூர் மீதும், கான் இ ஸமான் இந்தாபூர் மீதும், கான் இ தௌரான் வடகிழக்கில் பிதார் மீதுமாக முப்புறத் தாக்குதலாக படை நடத்தப்பட்டது. அப்படியும் ஆதில் ஷாவிடமிருந்து மொகலாய தளபதிகளால் தலைநகரைக் கைப்பற்ற முடியவில்லை. பிஜப்பூரின் சுற்றுவட்டாரங்களைக் கைப்பற்றி ஆதில் ஷாவை சமாதானத்திற்கு உடன்பட முயன்றனர். ஆதில் ஷா ஷாஜஹானின் கீழ்பணிந்து இருக்கவும், இருபது லட்சம் ரூபாய் பரிசாக மொகலாயர்களுக்கு கொடுக்க வேண்டியும், நிஜாம்ஷாவின் பிரதேசம் இருவருக்கும் பிரிக்கப்பட்டு, பிஜப்பூர் ஐம்பது பர்கானாக்களாகவும் (வருவாய் வரும் இடமாக), எட்டிலிருந்து, இருபது லட்ச ரூபாய் செலுத்த வும், ஏற்கனவே மொகலாயர்களிடம் கீழ்பணிந்து விட்ட கோல் கொண்டாவின் குத்ப் ஷாஹிக்கு மரியாதை செய்ய வேண்டும் என்றும், இனி ஷாஹ்ஜி போன்ஸ்லேவிடமிருந்து எந்த உதவியும் பெறப்பட மாட்டாது என்று சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. சுல்தானின் வேண்டுகோளுக்கிணங்க விலையுயர்ந்த உலோகத்தால் செய்யப்பட்ட ஷாஜஹானின் உருவப்படம் ஒன்று அனுப்பி வைக்கப் பட்டது. சுல்தானும் தங்கங்களை ஷாஜஹானுக்கு பரிசாக அனுப்பினார். இதன் பிறகு டெக்கான் பகுதி இருபது வருடங்களுக்கு வளமாக இருந்தது. ஷாஜஹான் ஆக்ரா திரும்பியவுடன் டெக்கான் பகுதியின் பதினெட்டு வயதான தனது மூன்றாவது மகன் ஔரங்கஸேப் பொறுப்பில் ஒப்படைத் தார். இது ஔரங்கஸேப்பின் எதிர்கால ஆட்சிக்கு உருதுணையாக இருந்தது.
                        இதன் பிறகு ஷாஜஹான் மத்திய ஆசியாவின் ஆட்சியில் கவனம் செலுத்தினார். பல்க் மற்றும் பதக் ஷானும் இணைந்து தைமூர் களின் வம்சத்தினர் புகழின் உச்சியிலிருந்து ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஷாஜஹானின் புகழ் வெளியுலகத்திலும் பரவியது. ஆரம்பத்தில்  ஷாஜஹான் ஆட்சி செய்ய துவங்கிய கந்தார் பேரரசின் அரசியல் களத்திற்கும், தலையாய வாணிபத்திற்கும், இந்திய, பெர்ஷியா வின் இடையே வியாபார எல்லையாகவும் இருந்தது. மேலும் அப்பிரதேசங்கள் பலமான இராணுவ தளமாகவும் இருந்தது. ஆனாலும், மத்திய ஆசியாவை கொள்வதில் ஷாஜஹானுக்கு சிரமமாகத்தான் இருந்தது.  நான்கு கோடி ரூபாய் செலவு செய்தும் பல்கின் ஒரு அங்குல நிலம் கூட பிடிக்க முடியவில்லை. மூன்று முறை கந்தாரின் மீதான படையெடுப்புக்கு பனிரெண்டு கோடி ரூபாய் செலவிடப்பட்டது. பெர்ஷியாவின் மீதான இளவரசர்  தாராவின் தலைமையிலான கௌரவப்போர் மொகலாயர்களின் பலவீனத்தை தான் காட்டியது.
         ஒரு போரின் வெற்றிவிழாவில் கலந்து கொள்ளாததால், ஷாஜஹான் இறந்து விட்டதாக தவறான செய்தி நிலவியது. ஆனால் அவருக்கு நோய்வாய்பட்டிருந்த காரணத்தாலேயே அவர் கலந்து கொள்ள முடியாமல் போனது. ஷாஜஹானுக்கு எட்டு மகன்கள், ஆறு மகள்கள். அதில் மூத்த மகன் தாரா ஷிகோ, நான்காவது மகன் முஹம்மது ஷா ஷுஜா, ஆறாவது மகன் முஹம்மது ஔரங்கஸேப், பத்தாவது மகனாக முராத் பக் ஷும் இருந்தனர். தாரா, ஷுஜா, ஔரங்கஸெப் மற்றும் முராத் ஆகியோர். நால்வரும் வித்தியாசமான குணங்களைக் கொண்டிருந்த தால் ஷாஜஹானுக்கு தனிப்பட்ட வகையில் பிடித்தமானவராகவும் இல்லை அதே நேரத்தில் வெறுக்கப்பட்டவராகவும் இல்லை. அவருக்குப் பிறகு நால்வருமே ஆட்சிக்கு வர ஆசைப்பட்டார்கள். அதிகார தோரணையுள்ள தாராவே பதவிக்கு உரியவராகக் கருதப்பட்டார். ஆனால் அதற்கான வாய்ப்பு அவருக்கு அருகில் இல்லை. அவருக்குள்ள அற்பமான பழக்கங்களும், இயற்கையான தயக்க குணமும், எளிதில் கோபம் கொள்ளும் தன்மையும் இவருக்கு அரசவையில் பல எதிரிகளை உருவாக்கி இருந்தது. அதிக இந்துக்களுடனான நட்பும், நெருங்கிய கிறிஸ்தவர்களின் தொடர்பும், விருப்பமான ஷியா பிரிவு கொள்கைகளும் இவருக்கு ஆட்சிக்கு வர எதிர்ப்பாக இருந்தது.
                        தாரா ஷிகோ எப்போதும் பிராமணர்கள், இந்து துறவிகளுடனேயே இருந்தார். அவர்களின் வேதங்களும், போதனை களும் தான் கடவுளை அடைய சிறந்த வழி என்று எண்ணிக் கொண்டிருந் தார். தொழுகைகளை கடைபிடிக்காமல், ரமதான் நோன்பையும் புறக் கணித்து தான் தான் இறைவனைப்பற்றி அதிக அறிவுள்ளவராகக் காட்டிக் கொள்வார். ஷாஜஹானின் மற்ற மகன்களை விட போர்திறமை கொஞ்சம் கூட இல்லாதவர். இவருக்கு இருந்த ஒரே தகுதி ஷாஜஹானின் விருப்பமானவராக இருந்தது தான்.
                            ஷுஜாவுக்கு புத்திசாலித்தனமும், தனிப்பட்ட விருப்பமும் இருந்தும் மதுப்பழக்கம் அதிக அளவில் இருந்தது. மேலும் வெளிப்படை யாகவே ஷியா கொள்கையைக் கடைபிடித்தார். முராத் பக் ஷ் முரட்டுத் தனத்துடன் புத்திசாலித்தனம் இல்லாமல் இருந்தார். இளயவராகவும் ஆட்சிப் பொறுப்புக்கு ஏற்றவராக இல்லாமல் இருந்தார். மூன்றாவது மகன் ஔரங்கஸேப் எல்லா சகோதரர்களை விட ஆட்சிக்கு பொருந்தி தகுதியானவராக இருந்தார். எதையும் கூர்ந்து நோக்குபவராகவும், தைரியமாக எதிர்கொள்ளும் திறனும் பெற்றிருந்தார். நிர்வாகத் திறமையை நன்கறிந்த அதேவேளையில் முழுக்க முழுக்க சுன்னிப் பிரிவுக் கொள்கைகளை கடைபிடிப்பவராக இருந்தார். இருவேறு கொள்கைகளை பலமாக சார்ந்தவர்களாக இருந்ததால் இருவரும் ஒருவரை ஒருவர் எதிரியாகவே கருதினர். ஷாஜஹான் உடல்நலம் குன்றி இருந்தபோது நால்வரும் தனித்தனி பிரதேசங்களுக்குப் பொறுப்பாக இருந்தனர்.
                                     தாரா பஞ்சாப் மற்றும் வடமேற்கு பிரதேசங்களுக்கு வைஸ்ராயாகவும், ஷுஜா பெங்கால் மற்றும் ஒரிஸ்ஸாவுக்கு கவர்னராக வும், ஔரங்கஸேப் டெக்கான் பகுதிக்கு பொறுப்பாளராகவும், குஜராத் தின் கட்டுப்பாடு முராத் வசமும் இருந்தது. ஒவ்வொருவரிடமும் மற்ற சகோதரனை எதிர்க்க தேவையான பணமும், பலமான போர் படையும், தனிப்பட்ட அதிகாரமும் இருந்தது. திறமையும், வீரமும் உள்ளவர் யாரும் ஆட்சிக்கு வரலாம் என்பது மொகலாய ஆட்சியில் எழுதப்படாத சட்டமாக இருந்தது. பாபர், ஹுமாயுன், அக்பர், ஜஹாங்கீர் மற்றும் ஷாஜஹான் ஆகியோர் அப்படித்தான் நெருங்கிய உறவுகளை எதிர்த்து ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் தோல்வி அடைந்தால் விளைவு என்ன என்பதையும் நன்கறிந்திருந்தார்கள். 1658 செப்டம்பரில் ஷாஜஹானின் உடல்நலம் முன்னேற்றமடையும் வாய்ப்பில்லாமல் இருந்தது. அப்போது டெல்லியில் தாரா தந்தைக்கு அருகிலிருந்து கவனித்துக் கொண்டார். இடையே உடல்நலம் சற்று சீரானபோது அரசவை மந்திரிகளையும், பொறுப்பான வர்களையும் அழைத்து தனக்குப் பிறகு, தாரா தான் ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்று சாசனம் எழுதினார். ஆனால் இதில் சந்தேகம் கொண்ட மற்ற மூன்று சகோதரர்களும் யாரும் தடுத்து சமாதானம் கூறும் நிலையில் இல்லாத வகையில் போருக்குத் தயாரானார்கள். இந்தியா வின் மொகலாய இஸ்லாமிய ஆட்சியில் முதல் மகனுக்கு ஆட்சியில் உரிமை கொண்டாட முதல் தகுதி உண்டு. மேலும் சகோதரர்கள் இருந்து விருப்பப்பட்டால் அவர்களும் உரிமை கோரலாம். அப்படியாரும் இல்லாவிட்டால் கவர்னர்களோ அல்லது பலரின் சிபாரிசு பெற்ற சிறந்த தலைவரோ உரிமை கோரலாம். ஆனால் மொகலாயர்களிடம் எப்போதும் இல்லாத முதல்முறையாக ஷாஜஹான், இன்னார்தான் அடுத்த ஆட்சி யாளர் என்று சாசனம் எழுதியதால் மற்ற சகோதரர்கள் வெகுண்டன        ஷாஜஹான் அருகிலிருந்த தாரா தனக்கு ஆட்சிப் பொறுப்பு வழங்கப் பட்டுவிட்டது என்பதையோ, மேலும் அரண்மனையில் நடப்பது எதையும் சகோதரர்களுக்கு தெரியப்படுத்தக்கூடாது என்று மற்றவர்களுக்கு உத்தரவிட்டார். பயணிகள் யாரும் டெல்லியில் நடப்பதை தெரியப்படுத்தி விடுவார்கள் என்று எண்ணியதால், பெங்கால், குஜராத் மற்றும் டெக்கான் செல்லும் சாலைகளை அடைத்தார். அரசவையில் இருந்த ஔரங்க ஸேப்பின் அலுவலகத்தை பறிமுதல் செய்து கொண்டு, அவரின் அதிகாரி களையும் அழைத்துக் கொண்டார். சகோதரர்களை சிறை பிடிக்க எதிர் பாராத விதமாக படைகளை அனுப்பினார். இதற்குள் ஷாஜஹான் சற்று உடல்நலம் தேறி பொறுப்பில் இருந்ததால் சகோதரர்களின் மீது படையெடுப்பது நிறுத்தப்பட்டது அல்லது தாமதப்படுத்தப்பட்டது. ஷாஜஹானும் தான் உயிரோடிருக்கும் போது தனது மகன்கள் ஆட்சிக்கு சண்டையிடுவதை விரும்பவில்லை. தாராவின் நடவடிக்கைகள் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. ஷாஜஹானும் மற்ற மகன்களின் வலிமை தெரியாமல் தாராவையே ஆதரித்தவராக இருந்தார்.
                        ஆனால் தன் அன்புக்கு பாத்திரமாக விளங்கும் மூத்த சகோதரி ரோஷனாரா பேகத்தின் மூலம் அரண்மனையில் நடக்கும் அத்தனையை யும் ஔரங்கஸேப் தெரிந்து கொண்டார். மற்ற சகோதரர்களான ஷுஜா, முராதுடன் எந்த நிபந்தனையுமற்ற ஒரு கூட்டுடன் ஒருவர் மற்றவருக்கு உதவ வேண்டும் என்று தாராவை எதிர்க்கத் தயாரானார்கள். இதை தெரிந்து கொண்ட ஷாஜஹானும், தாராவும் எப்படியும் இதை முறியடிக்க திட்டமிட்டார்கள். அதன்படி ஷாஜஹான் க்வாஜா சராஸ் என்ற அரவாணி யின் மூலம் மூன்று சகோதரர்களுக்கும் தந்தை என்ற முறையில் உதவுவதாக ஒருவருக்குத் தெரியாமல் மற்றவருக்கு கடிதம் அனுப்பினார். இது மூவருக்குமிடையில் குழப்பம் எற்படுத்தும் என்பதை உணர்ந்த ஔரங்கஸேப், ஷாஜஹானுக்கு இனி க்வாஜா சராசின் மூலம் கடிதம் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார். ஷுஜாவும், முராதும் தங்கள் பொறுப்பிலிருந்த பெங்கால் மற்றும் குஜராத் பிரதேசங்களுக்கு தாங்களே மன்னர்களென்று அறிவித்து நாணயங்களும் அச்சடித்துக் கொண்டார்கள். இதற்கு நேர்மாறாக ஔரங்கஸேப் எந்த ஒரு செயலிலும் ஈடுபடாமல் அமைதி காத்தார். நர்மதா ஆற்றின் கரையிலிருந்த அனைத்து படகுகளையும் கைப்பற்றி சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார்.
                           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக