ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

ஸலாவுத்தீன் வரலாறு 5



பாகம் : 9
எகிப்தில் ஸலாவுத்தீன்
சித்தப்பா அஸாத்தத்தீன் ஷிர்குஹ் இறந்த பிறகு ஸலாவுத்தீன் மூன்று நாட்கள் துக்கம் அறிவித்தார். ஃபாத்திமிட் கலிஃபா அல் அதித் (ஷியா பிரிவு ) இளைய வயதுடைய யூஸுஃப் ஸலாவுத்தீன் அல் அய்யூபை மூத்த தளபதிகள் மற்றும் முக்கிய புள்ளிகளின் முன்னிலையில் எகிப்தின் ஆட்சியாளராக நியமித்தார். ஷியா பிரிவின் ஃபாத்திமிட் அல் அதிதி இளம் வயது ஸலாவுத்தீனை பதவியில் அமர்த்துவதால் அவர் தன் அழைப்புக்கெல்லாம் தலை சாய்ப்பார் என்றும், தன் கட்டளைக்கெல்லாம் இசைந்து போவார் என்றும் கருதினார். இஸ்லாத்தின் வரலாற்றை சிறுவயதிலிருந்து சிறந்த ஞானிகளிடமிருந்து பயின்றதால் அவருக்கு ஷியாக்களின் உண்மை கொள்கை தெரியும். விதி வேறு விதமாக இருந்தது. இறைவனால் தீர்மானிக்கப்பட்டு நம்மால் விதி என்று அழைக்கப்படுவது நமக்கு தீமை செய்யும் அதே நேரத்தில் எதிராளிக்கு நன்மை செய்யும் என்பதை மறந்து விடுகின்றோம்.
ஆட்சி பொறுப்பேற்கும் போது ஸலாவுத்தீனுக்கு முப்பத்தி இரண்டு வயது, நூருத்தீனுடனும், ஷிர்குஹுடனும் இணைந்து போர்களை நடத்தியதால் சிறந்த அனுபவங் களைப் பெற்று அதுவே அவர் மேன்மேலும் உயர்வடை வதற்க்கு காரணமாகியது. ஸலாவுத்தீன் எகிப்து மக்களை அன்புடனும், பொருளுதவிகள் கொடுத்தும் நல்ல முறையில் நடத்தினார். எகிப்து இளவரசர்களுடனும் நல்லுறவை வளர்த்துக் கொண்டு அவர்களை நெருங்கி உறவாடும் நிலையில் வைத்துக் கொண்டார். மேலும் டமெய்டா, காஸா, அக்காபா போன்ற இடங்களை வென்று சுதந்திர பிரதேசமாக்கி பிரபலமானார். அக்காபா துறை முகத்தை செங்கடலுக்கு நுழைவாயிலாக்கி எகிப்தியர்கள் மக்கா புனித பயணம் மேற்கொள்ள வழி வகுத்தார். இது எகிப்து மக்களிடையே ஸலாவுத்தீனுக்கு மிகப் பெரிய புகழை ஈட்டித் தந்தது. மேலும் எகிப்தியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஷியா கொள்கையை விட்டு சுன்னி வழி முறையில் ஸலாவுத்தீனுடன் இணைந்து அல்லாஹ்வின் எதிரிகளை எதிர்த்தனர். இளம் வயது அதுவும் வெளி நாட்டவர் மிக வேகமாக முன்னேறி அதுவும் ஷியா கொள்கையை விரட்டுவது கண்டு அடிப்படை ஷியா ஃபாத்திமிட்கள் என்ன விலை கொடுத்தேனும் ஸலாவுத் தீனை எகிப்தை விட்டு விரட்ட திட்டம் தீட்டினர்.
நஜாஹ்வின் நயவஞ்சக திட்டம்
அதில் குறிப்பிடத்தக்கவர் நஜாஹ் மற்றும் ஃபாத்திமிட் கலிஃபாவுக்கு நம்பிக்கையான இமாரா அல் யமனி, கன்ஸ் அத் தௌலா ஆகியோர். 564 A.H. ல் இறுதி ஃபாத்திமிட் கலிஃபா அல் அதீதின் அரண்மனையைச் சேர்ந்த நஜாஹ் என்னும் செல்வாக்கான அரவாணி எகிப்தில் ஒரு குழுவை உருவாக்கி சிலுவைப் போராளிகளான ஃப்ராங்க்ஸுடன் இணைந்து ஸலாவுத்தீனை எதிர்த்தான். அரவானி நஜாஹ் சிலுவைப் போராளிகளை முன்னோக்கி வரச்செய்து அவர்கள் ஸலாவுத்தீனுடன் போரிடும் போது தான் பின்னிருந்து தாக்குவதாகவும் திட்டமிட்டு கடிதம் ஒன்றை எழுதி அதை ஒரு ஒற்றன் மூலம் புது ஷூவுக்குள் வைத்து ஃப்ராங்க்ஸுக்கு செய்தி அனுப்பினான். விதி அது தவறு தலாக ஸலாவுத்தீனின் ஆதரவாளர் ஒருவரிடம் கிடைக்க அவர் உடனடியாக ஸலாவுத்தீனிடம் சேர்ப்பித்தார். அவர் நஜாஹ்வை தண்டிப்பதிலிருந்தும் கடிதம் உரியவரிடம் சேர்ந்து தன்னை அவர்கள் எதிர்க்க காத்திருந்தார். தன் உத்தரவுகளையும் தாமதப்படுத்தினார்.
நஜாஹ் தன் திட்டத்துடன் கெய்ரோவிற்கு வெளியே உள்ள தனது அரண்மனையை அடைந்தவுடன் ஸலாவுத்தீன் ஒரு படைக் குழுவை அனுப்பி நஜாஹ்வை கொல்ல உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து கலீஃபா அல் அதீதின் சூடானிய வீரர்கள் 50,000 பேர் அடங்கிய படை ஸலாவுத்தீன் இராணுவத்தினருடன் இரண்டு நாட்கள் போரிட்டனர். ஸலாவுத்தீன் அவர்களை வென்று நஜாஹ் மற்றும் சூடானிய படைகளை விரட்டினார். சூடானியர் களின் சூழ்ச்சி மட்டுமில்லாமல் ஃபாத்திமிட் இளவரசர் மூட்டிய போர் தீயையும் விரட்டினார்.
பாகம் : 10
இமாராஹ் அல் யமானியின் சூழ்ச்சி
ஸலாவுத்தீனுக்கு எதிராக மிகப்பெரிய குழப்பத்தை சரித்திரத்தில் விளைவித்தவன் காலத்தால் நன்கு பதியப்பட்ட இமாராஹ் அல் யமானி. இவன் பலமான ஆதரவு கூட்டத்தை கெய்ரோவில் கூட்டி ஃபாத்திமிட்களின் கடைசி மன்னன் அல் அதீதின் ஒரு மகனின் தலைமையில் ஸலாவுத்தீனை விரட்டி விட்டு மீண்டும் ஷியா பிரிவின் ஃபாத்திமிட் ஆட்சியைக் கொண்டு வர திட்டம் தீட்டினான். அந்த செய்தியை உடனே ஃப்ராங்க்ஸுக்கு தெரியப்படுத்தி தனக்கு ஒத்துழைப்பு தர வேண்டினான். மிக குரோத எண்ணமும், வெறுக்கத்தக்க குணம் கொண்டவர்களும் இமாராஹ்வுடன் இணைந்தனர்.
அவர்களிலிருந்து ஒரு குழப்பவாதி ஸைன் அத்தீன் இப்னு நஜா என்பவன் பிரிந்து வந்து ஸலாவுத்தீனிடம் சேர்ந்து பரிசும், நல்ல பெயரும் வாங்க வேண்டும் என்று நம்பிக்கை துரோகம் செய்யும் விதமாக ஸலாவுத்தீனுக்கு காட்டிக் கொடுத்தான். ஸலாவுத்தீன் அவனையும் கூட்டாளிகளையும் கொன்று நாட்டில் கேடு விளைவிப் பவர்களுக்கு இது தான் பாடம் என்று உதாரணமாக்கினார். இது நடந்தது 569 A.H.
கன்ஸ் அத் தௌலாஹ்வின் சூழ்ச்சி
570 A.H. ல் மீண்டும் ஓரு குழப்பம் அஸ்வான் மற்றும் குஸ் பகுதியில் தோன்றியது. இதன் காரணகர்த்தா அஸ்வான் பகுதியை ஆண்ட கன்ஸ் அத் தௌலாஹ். இவன் அரபியர் கள், சூடானியர்களை ஒன்று கூட்டி ஃபாத்திமிட் ஆட்சியை மீண்டும் கொண்டு வர உத்தேசித்து நேரடியாக கெய்ரோ விற்குள் நுழைந்தான்.அதை நிறை வேற்றுவதற்காக பெரும் பணம் செலவு செய்தான். மேலும் ஒரு குழுவை இணைத்துக் கொண்டு பத்து ஸலாவுத்தீன் ஆதரவு இளவரசர்களைக் கொன்றான். மேலும் துட் என்னும் கிராமத்திலிருந்து வந்த கியாஸ் இப்னு ஷாதி என்பவன் குஸ் பகுதியின் வளத்தை சூறையாடினான். ஸலாவுத்தீன் தன் சகோதரர் அல் மாலிக் அல் ஆதில் மூலம் பெரும் படை அனுப்பி கியாஸ் இப்னு ஷாதியைக் கொன்று அவன் படைகளை சிதறடித்தார். பின் அல் மாலிக் அல் ஆதில் கன்ஸ் அத் தௌலாஹ்வின் பெரும் படைகளைக் கொன்று தப்பிச் சென்ற தௌலாஹ்வையும் கொன்று கெய்ரோ திரும்பினார். இவைகள் எல்லாம் ஸலாவுத்தீன் குழப்பங் களை வேரறுத்து, நேர்மையற்றவர்களையும், அநீதியாளர் களையும், சூழ்ச்சியாளர்களையும் களையெடுத்து தன் புத்திசாலிதனத்தையும், ஆர்வத்தையும் அரசியல் அரங்கில் காட்டச் செய்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக