வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

அடிமைகள் வரலாறு 1பதினாறாம் நூற்றாண்டின் ஒரு காட்சி. ஒரு கப்பல் நடுக்கடலில் சென்று கொண்டிருக்கிறது. அதன் தளத்தில் நான்கைந்து பேர் மது அருந்திக் கொண்டிருக்கிறார்கள். உற்சாகத்திலிருக்கும் அவர்கள் இந்த முறை ஏற்றிச் சென்றுகொண்டிருக்கும் சரக்குகளில் எவ்வளவு லாபம் கிட்டும் என்று கணக்கிட்டு மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். சரக்குப் பகுதியின் கதவைத் திறந்து கொண்டு ஒருவன் வருகிறான். தலைவன் போல் இருப்பவனிடம் சரக்குகளில் சில கெட்டுப்போய் விட்டதாகக் கூறுகிறான். உற்சாகம் சட்டென்று குறைகிறது. தலைவன் வந்து சொன்னவனிடம், கெட்டுப்போன சரக்கை உடனே கடலில் எறிந்து விடச் சொல்கிறான், மேலும் அவைகள் இருந்தால் நன்றாக இருக்கும் சரக்குகளும் சேர்ந்து கெட்டுபோய் நமக்கு பெரிய நஷ்டம் ஏற்படும் என்கிறான். உடனே அந்த கப்பலின் சரக்கு உள்ள பகுதியின் இயந்திரக்கதவு பெரியதாக வாய் பிளந்து திறக்கிறது. கெட்டுப்போன சரக்குகள் மளமளவென கடல் நீரில் விழுகின் றன. அலைபுரண்டு ஆர்ப்பரிக்கும் அந்த கடல் முழுதும் சரக்குகள் மிதக்க ஆரம் பிக்கின்றன். ஒரு நிமிடம் மூச்சை நன்றாக இழுத்து விட்டுக் கொள்ளுங்கள். இங்கே இவ்வளவு நேரம் சரக்கு என்று சொல்லப்பட்டது அவ்வளவும். உடல்கள். மனித உடல்கள். அடிமைகளாகிப்போன கருப்பின மனித உடல்கள். ஆம்! அது கருப்பின அடிமைகளை ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்லும் சரக்கு கப்பல். வழியில் நோய் வாய்ப்பட்டு இறந்துபோன அடிமைகளைத் தான் நடுக்கடலில் கொட்டினார்கள். இப்படியான ஒரு காட்சி அடிமைகளைப்பற்றிய ஆங்கில நாவல் ஒன்றில் நாவலாசிரியர் விவரிக்கிறார். உண்மை அத்தனையும் உண்மை ஆறாம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டு வரை அடிமைகளின் வாழ்க்கை அப்படித்தான் இருந்தது. உலக வியாபாரத்தில் அவர்கள் ஒரு பொருளாகவே (COMMODITY) கருதப்பட்டு வந்தார்கள்.  
                                                                             மெல்லிய இதயமும், இரக்ககுணமும் உள்ளவர்கள் இதைப்படிப்பதை விட்டு தவிர்த்துக்கொள்ளுங்கள். இதயம் கணத்துப்போய் விடும் சில பகுதிகளை நான் தவிர்த்துவிட்டேன். சில நாட்களுக்கு தூக்கம் இழக்கும் அடிமைகளைப்பற்றிய சம்பவங்களை நான் விலக்கி விட்டேன். ஆம் மனித சமுதாயம் அடிமைகள் என்னும் ஒரு கூட்டத்தை எப்படி எல்லாம் பயன் படுத்தினார்கள், நடத்தினார்கள் என்று முழுமையாக நீங்கள் அறிந்தால் மேற்சொன்னவை தான் உங்களுக்கு நடக்கும். பெண் அடிமைகளை நம் மனித சமுதாயம் தேர்ந்தெடுத்த விதம், விற்ற விதம், பயன்படுத்திய விதம் அறிந்தால் நெஞ்சு பிளந்து போகும் அளவுக்கு சோகம். அடிமைகள் மனிதர்களுக்கு இயற்கையாக உள்ள பசி, சிரிப்பு, உறக்கம், அழுகை, ஆத்திரம், கோபம்  இவையெல்லாம் நீக்கப்பட்ட உணர்ச்சியற்ற வெறும் உயிருள்ள அமைப்பு. மின்சாரம் பொருத்தப்படாத இயந்திரங்கள். ஆணாயினும், பெண்ணாயினும் காமஇச்சைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட எதிர்ப்பில்லாத உடல்கள். மன்னர்களின் வாரிசுகள் வைத்து விளையாடிய அசையும் பொம்மைகள். உயிர் வாழ ஒரு வாய் உணவுக்கு எஜமானர்கள் உத்தரவிடும் வரை நிறுத்தாமல் சகல உறுப்புகளையும் இயக்கி உழைக்கும் மனிதர்கள். புராதன காலத்திலிருந்து தன்னைப்போல  அடிமைகளும் ஒரு மனிதன் தான் என்பதை மனிதன் மறந்து போன மனிதர்கள். இரக்கம், அன்பு, பரிதாபம் எதுவுமே மனிதர்களிடமிருந்து காட்டப்படாமல் போன மனிதர்கள். அடிமைகள் கடந்த நூற்றாண்டுகளில் உலக வணிகத்தில் தானியங்கள், துணிகள், உலோகங்கள் போல் கருதப்பட்ட ஒரு விற்பனைப்பொருள். அந்த காலங்களில் ஆர்ப்பரிக்கும் கடலில் பல ஆயிரம் டன் எடையுள்ள கப்பலைத் தங்கள் கரங்களால் துடுப்பிட்டவர்கள். எந்த மன்னனோ யாருடனோ போரிடும் போது சம்பந்தமில்லாமல் தங்கள் உயிரைவிட்டவர்கள். சிந்திக்கவே வாய்ப்பளிக்க முடியாமல் போன நடமாடும் சிதைந்த சிலைகள். தங்கள் செவிகளை எஜமானின் உத்தரவுக்கு மட்டுமே பயன்படுத்தியவர்கள். இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம். அடிமைகளைப் பொறுத்த வரையில் இன்னும் இரண்டு கைகள் இருந்தால் இன்னும் ஒரு வாய் உணவு. அடிமைகளுக்காக அந்த கால அரசாங்கங்கள் போட்ட சட்டங்களை அறிந்தால் வேதனை நெஞ்சை பிளக்கும். உதாரணத் திற்கு ஒரு அடிமைத்தாய்க்கு பிறந்த குழந்தையும் ஒரு வாழ்நாள் முழுவதும் அடிமையாகவே பதிவு செய்யப்பட்டன.   
                    
                                   அடிமைகள் முதன்முதலில் சுமேரிய நாகரீகத்தில் இருந்ததாகத் தெரிகிறது. பெரும்பாலும் எல்லா புராதான எகிப்து, சீனா, இந்தியா, அக்கடியன், சிரியா, கிரீஸ், ரோம, கொலம்பிய (அமெரிக்கா), இஸ்லாமிய சாம்ராஜ்ஜியங்களில் இருந்திருக்கிறார்கள். அடிமைகள் பல வகையாக இருக்கிறார்கள் கடன்பட்டதற்கான அடிமைகள், போரில் பிடிபட்ட அடிமைகள் மற்றும் குழந்தைப் பருவத்திலேயே கைவிடப்பட்ட அடிமைகள். ஒரு காலத்தில் அடிமையாக இருந்தவர்களின் உண்மைக் கதைகளைக் கேட்டீர்களானால் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியாது. உதாரணத்திற்கு, ‘நான் அந்த பண்ணை வீட்டிலிருந்த போது அங்கிருந்த குதிரைகளுக்கும், வளர்ப்பு நாய்களுக்கும் என்னைவிட நல்ல உணவு கிடைத்தன. 1945 ல் மரத்தில் குத்தி வைத்திருந்த கோடாலி நழுவி என் காலில் விழுந்து ரத்தம் பீறிட்டது. கொஞ்சும்போது கீறிவிடுகின்றதென்று தன் நாய்க்கு நகம் வெட்ட செல்லும் எஜமானியம்மாள் ஒரு பழைய துணியை தூக்கி என்னிடம் எறிந்து ரத்தத்தைத் துடைத்துவிட்டு சீக்கிரம் வேலையை முடிக்கச் சொல்லிவிட்டு குதிரை வண்டியேறி சென்றுவிட்டார்’ என்று அமெரிக்காவில் அடிமையாய் இருந்த ஒருவர் கூறி இருக்கிறார். இன்னொருவர், ‘எனக்கு அந்த தட்டின் மீது முதலில் வெறுப்பு வந்தது. ஏனென்றால், எஜமானால் எனக்கு உணவுண்ண கொடுக்கப்பட்ட என் அலுமினிய தட்டு அவ்வப்போது எஜமானியம்மாவின் கோபத்திற்காளாகி நசுங்கி இருக்கும். ஆனால், ரெமியின் அந்தத்தட்டு மிகவும் அழகான பூப்போட்ட அமைப்பில் இருக்கும். உயர்ந்த பீங்கானால் செய்யப்பட்டு கனமாக இருக்கும். ரெமி அதில் உணவுண்ணும் அழகை ரசிப்பேன். பின் நான் அந்த தட்டை விரும்ப ஆரம்பித்தேன். அந்த தட்டை தொடும் சந்தர்ப்பத்திலெல்லாம் தட்டை ரசிப்பேன். ஆம் தட்டை மட்டுமே விரும்பினேன். ஏனென்றால், ரெமி அடிமையான என்னைவிட சிறந்த ஒரு நாய் தானே’. என்றார்.    
                            இன்று செழிப்பாக இருக்கும் அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளை கருப்பின அடிமைகளின் கைகள் தான் உருவாக்கின. காரியங்கள் முடிந்தவுடன் வழக்கம் போல் அடிமைத்தனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நல்ல பெயர்பெற்றுக் கொண்டு தடை செய்தனர். இதே எதிர்ப்பு சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் இருந்தபோது அடிமைத்தனத்தற்கு சாதகமாக சட்டங்கள் போட்டு பல அடிமைகளை நரகத்தில் தள்ளி கொன்று போட்டார்கள். பல புராதன கிரீஸ் அடிமைகள் தூரத்திலுள்ள மைசினியன் கிரீஸுக்கு கொண்டு செல்லப்பட்ட சரித்திரப்பதிவுகள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. அவர்கள் நகரங்களை நிர்மாணிப்பதில் சமூகத்தையும், பொருளாதாரத்தையும் சார்ந்திருந்தார்கள். புராதன கிரீஸில் அடிமைகள் இன்றியமையாத சாதனமாக இருந்தார்கள். புராதன இஸ்ரேல் (இஸ்லாமுக்கு முன்) மற்றும் கிறிஸ்தவ சமுதாயத்தில் ஒரு அங்கமாகவே விளங்கினார்கள். ஏதென்ஸில் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒரு அடிமையை வைத்திருந்தார்கள். அந்த காலங்களில் அடிமைகளை வைத்திருந்தது இயற்கையான செயலாக மட்டுமல்லாமல் அது அத்தியாவசியமானதாகவும், கௌரவத்தின் அடையாளமாகவும் இருந்தது. சாக்ரடீஸின் புகழ்பெற்ற வசனம் ஒன்றுதான் அடிமைகளின் விருப்பு வெறுப்புகளை முதல் தடவையாக சரித்திரத்தில் பதிவு செய்திருக்கிறது.
                                   ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் இரண்டு முறை மெஸ்ஸினியன் போர் நடந்ததால், பொருளாதார சுமையை சமாளிக்க ஸ்பார்டன்கள் “ஸ்யூடோ” அடிமைகளைக் குறைத்தார்கள் (குறைத்தார்களென்றால் எப்படி? கற்பனை செய்து கொள்ளுங்கள்). இந்த நடவடிக்கைக்கு “ஹிலோட்ரி” என்று பெய ரிட்டிருந்தனர். இந்த தொடர்ந்த ஹிலோட்ரியால் புரட்சி ஏற்பட்டது. ஸ்பார்டன்கள் ஸ்யூடோக்களின் பகுதிகளைக் கட்டுப்படுத்தி எல்லைக்கோடு வகுத்து தடுத்தனர். ஸ்பார்டன் தலைவர்கள் ஸ்யூடோக்களுக்கு ஆயுதப்படைப் பிரிவில் வேலை கொடுத்தால் அவர்களின் அபரிதமான எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று திட்டமிட்டனர். புராதன கிரேக்கத்தில் 30% சதவிகித மக்கள் அடிமைகளாக இருந்திருக்கிறார்கள். ரோமர்களுக்கு பண்ணைகளிலும், வீட்டு வேலை செய்யவும் தேவைப்பட்ட அடிமைகளை கிரேக்கத்திலிருந்தும், பொனிஷியனிலிருந்தும்       இறக்குமதி செய்துகொண்டார்கள். மேலும் நாட்டின் வளர்ச்சிக்காக ஐரோப்பாவிலிருந்தும் மெடிட்டரேனியன் பகுதியிலிருந்தும் அடிமைகளை வரவழைத்திருந்தனர். இதனால் சிறுபான்மையினராக ஆகிப்போன அவர்களால் அடிக்கடி கலவரங்கள் தோன்றின. அதில் ஸ்பார்டகஸால் நடத்தப்பட்ட மூன்றாம் செர்விலி போர் மிகவும் புகழ் வாய்ந்ததும், மோசமானதுமாகும். அந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்த நாடுகளும் அடிமைகளை பணிகளுக்காகவும், பொழுதுபோக்கு (காம இச் சை மற்றும் கிளாடியேட்டர் போன்ற விளையாட்டுகள்) களுக்காகவும் பயன் படுத்தினார்கள். எந்த அடிமையாவது தப்பித்துப் போனால் மற்ற அடிமைகளுக்கு பாடம் புகட்டும் வண்ணம் கொடூரமான முறையில் கொன்றார்கள். ரோம சாம்ராஜ்ஜியத்தின் பொருளாதாரத் தூணாக அடிமைகள் விளங்கினார்கள்.
                                 செல்டிக் பழங்குடியினரை ரோமர்கள் அடிமைகளாக வைத்திருந்தனர். கலவரங்களாலும், போரினாலும் கைப்பற்றப்பட்டவர்களை ஐரோப்பியர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்த வரலாறுகள் இருக்கின்றன. புகழ்பெற்ற செயிண்ட் பாட்ரிக் கூட கைப்பற்றப்பட்டு விற்கப்பட்ட ஒரு அடிமைதான். அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப்பெற அதிகமானோர் கிறிஸ்தவர்களாக மதம் மாறியதாக “லெட்டர் டூ தி சோல்ஜர்ஸ் ஆஃப் கோரோடிகஸ்” என்ற புத்தகம் தெரிவிக்கிறது. வைக்கிங்குகள் ஐரோப்பாவின் மீது படையெடுத்தபோது நிறைய அடிமைகளை பிரிட்டிஷ் தீவுகளிலிருந்தும், கிழக்கு ஐரோப்பாவிலிருந்தும் கைப் பற்றினார்கள். அப்படி கைப்பற்றிய அடிமைகளை வைக்கிங்குகள் “த்ரால்ஸ்” (THRALLS) என்ற பெயரில் பணிக்கு வைத்துக்கொண்டு, பெரும்பான்மையான அடிமைகளை பைஸாந்தியர்களுக்கும், இஸ்லாமிய சந்தைகளிலும் விற்றுவிடுவார்கள். ஐரோப்பாவின் மேற்கில் பிரிட்டிஷ், ஐரிஷ் மற்றும் ஸ்காட்டிஷ்களும், கிழக்கில் ஸ்லாவ்களும் பெருகி இருந்தனர். பதினோராம் நூற்றாண்டுகளில் வைக்கிங்குகளின் அடிமை வியாபாரம் படிப்படியாக குறைந்தது. வைக்கிங்குகள் ஐரோப்பா வில் எந்த பகுதிகளைக் கைப்பற்றினார்களோ அங்கேயே அந்த இன மக்களுடன் கலந்து தங்கிப் போனார்கள். முதலில் செர்ஃப் (சுய நபர்கள்) களாக இருந்த அவர்கள் நாளடைவில் கிறிஸ்துவர்களாக மாறிப் போனார்கள்.
                                 புராதன ஸ்பெயினும், போர்சுகலும் அடிக்கடி முஸ்லீம்களுடனும், கிறிஸ்தவர்களுடனும் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். அல் அண்டலூசிலிருந்து தொடர்ந்து ஐபீரிய கிறிஸ்தவ குடியாட்சிகளின் மீது படை எடுத்து அங்கிருந்து கொள்ளைப் பொருட்களுடன் அடிமைகளையும் பிடித்து வந்தார்கள். 1189 ல் அல்மொஹதின் கலீஃபா லிஸ்பனை எதிர்த்து போரிடும் போது 3000 பெண், குழந்தை அடிமைகளை கைப்பற்றிச் சென்றார். அதேபோல் 1191 ல் கார்டோபாவின் கவர்னர் சில்விஸில் பகுதியில் போரிடும் போது 3000 கிறிஸ்தவ அடிமைகளைக் கைப்பற்றினார். பைஸாந்திய, ஓட்டோமான் போரிலும், ஓட்டோ மான், ஐரோப்பிய போரிலும் மிகப்பெரிய அளவில் அடிமைகள் கைப்பற்றப்பட்டு இஸ்லாமிய சந்தைகளில் விற்கப்பட்டார்கள். லிபாண்டோ போரில் கடலில் படகுகளில் கைப்பற்றப்பட்ட ஏறக்குறைய 12,000 கிறிஸ்தவ அடிமைகள் ஓட்டோமான் பேரரசால் விடுதலை செய்யப்பட்டனர். கிறிஸ்தவர்களும் போரில் கைப்பற்றப்பட்ட முஸ்லீம் அடிமைகளை விற்றிருக்கிறார்கள். மால்டாவின் மன்னர்கள் கடல் கொள்ளை மூலம் முஸ்லீம் கப்பல்களைத் தாக்கி நிறைய அடிமைகளை கொள் ளையடித்திருக்கிறார்கள். வட அப்பிரிக்கா, துருக்கி நாடுகளுக்கு விற்கப்பட்டு வந்த அவர்களின் அடிமைச்சந்தை பதினெட்டாம் நூற்றாண்டு வரை மிகவும் புகழ் பெற்றது. அந்த காலகட்டத்தில் சுழற்சி முறையில் ஒரு கப்பலை இயக்குவதற்கு ஆயிரம் அடிமைகள் தேவைப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக