புதன், 17 டிசம்பர், 2014

செல்ஜுக்குகள் சரித்திரம் 5



இஸ்ஸத்தின் கெய்கவுஸ் இறந்த பிறகு, அவரால் அங்காரா கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த அவர் சகோதரர் அலாவுத்தீன் கெய்குபாத் விடுவிக்கப்பட்டு 1219 ல் மன்னரானார். இவரும் சகோதரர் போல் எல்லாத் துறைகளிலும் முன்னிலை வகித்து ஆட்சி நடத்தினார். அலாவுத்தீன் கெய்குபாத் சிறந்த ஓட்டப்பந்தய வீரராகவும், ஓவியராகவும், தச்சுத் தொழில் தெரிந்தவராகவும், சிறந்த பலமான இராணுவ கமாண்டராகவும் இருந்தார். இவரது இராணுவம் பதினைந்து ஆண்டுகளில் தியர்பாகர் பகுதி தவிர மொத்த அனடோலியாவையும் வெற்றி கொண்டது. அலாவுத்தீன் கெய்குபாத் விவசாயத்தை ஊக்கப் படுத்தினார். சர்க்கரை ஆலைகளை உண்டாக்கியும் மொத்த லீவண்ட் பகுதியின் வியாபாரத்தலமாக சிவாஸ் நகரை உருவாக்கினார். இவரின் முதல் வெற்றி லெஸ்ஸர் அர்மேனியாவின் சிலிஷியன் மன்னராட்சியிலிருந்து  மெடிட்டரேனியன் துறைமுக நகரமான கொலோனோரோஸ் (அலன்யா) நகரமாகும். வெற்றிக்கு பிறகு இதை ‘அலைய்யே’ என்று பெயர் மாற்றி கடற்படை தளமாகவும், கோடை காலத்தில் தான் தங்கும் விடுமுறை தலமாகவும் ஆக்கிக்கொண்டார். பின்பு படை நடத்தி கஹ்டா(1222), எர்ஸின் கன்(1230), எர்ஸுரும்(1230), செமிஸ்கிஸிக் கோட்டைகளையும், மேலும் ஹர்புத் மற்றும் அஹ்லத் ஆகியவற்றையும் வென்றார்.
                                 அலாவுத்தீன் கெய்குபாத் பெரும்பாலும் முன்னேற்ற பாதையிலேயே உயர்ந்த எண்ணத்தில் சிந்தித்தார். எதிரிகளாக இருந்தவர்களிடம் நல்ல உறவைப்பேணும் வகையில் 1221 ல் அர்மேனியன் இளவரசி மஹ்பெரி ஹுவாண்டையும், 1227 ல் அய்யுபிட் ராணி மெலிகி ஹதூனையும் மணந்து கொண்டார். இவரின் கட்டிட நிர்மாணங்களும் மிகவும் புகழப்பட்டது. கைசெரி, சிவாஸ் நகரங்களின் சுற்றுச்சுவற்றைப் பலமாக்கினார். கொன்யா நகரின் சுவர்களையும் பலப்படுத்தி, சுடுநீர் குளியலறை அடங்கிய ஆடம்பரமான அரண்மனையைக் கட்டினார். இராணுவ நடவடிக்கைக்காக 1221 ல் இவர் கட்டிய சிவப்பு கோபுரம், அலன்யாவின் இராணுவ மையம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. எண்ணற்ற கட்டிடப்பணிகளைச் செய்தார். 1229 ல் கொன்யா மற்றும் அக்சராய் இடையிலும்,  1232 ல் கைசெரி மற்றும் சிவாஸுக்கும் இடையிலும் சுல்தான் அரண்மனை, கரதாய் அரண்மனைகளையும், மேலும் அலாரா, ஸஸதின், கார்டக், கதின், எர்டோகுஸ், எக்ரிதிர், இஷாப் இ கெய்ஃப் போன்ற சிறப்பு மிக்க கட்டிடங்களைக் கட்டி னார். கைசெரிக்குகருகிலும், குபாதாபாத்தில் பெய்செஹிர் ஏரியின் மீதும் இவர் கட்டிய பாலங்கள் இன்றளவும் பெயர் சொல்லிக் கொண்டிருக்கின்றன. புகழின் மிக உச்சத்தில் இருந்தபோது ரமலான் மாதத்தின் முடிவில் மாமன்னன் மங்கோலிய கான் அளித்த விருந்தில் விஷம் வைக்கப்பட்டு மூன்று நாள் கழித்து இறந்து போனார். ஏற்கனவே கிழக்கில் மங்கோலியர்களால் துவக்கப்பட்டு விட்ட தன் தேசத்தின் அழிவைக் காணாமலேயே சென்றுவிட்டார்.
                                 அலாவுத்தீன் கெய்குபாதுக்குப் பின் அவரின் பிள்ளைகளுக்குள் நடந்த பல படுகொலைக்குப் பின் அவரின் ஒரு மகன் இரண்டாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரெவ் ஆட்சிக்கு வந்து அமைதியை கொண்டு வந்தார். தன் தந்தையின் மூலம் வந்த மைனர் ஆசியாவின் முழு நிலப்பரப்பையும் ஆண்டார். உடன் தியர்பாகிரின் அருகாமை இடத்தையும் கைப்பற்றி ஆண்டுவந்தார். ஆனால், விரைவில் எல்லாம் அழிவை நோக்கி சென்றது. 1241 ல் பாபா இஷாக் என்னும் மத பிரச்சாரகர் இரண்டாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரெவ்வை எதிர்த்து உள்நாட்டில் கலவரம் செய்தார், இது மத, சமூக, அரசியல் கலவரமாக உருவெடுக்க இறுதி யில் பாபா இஷாக்கை தூக்கிலிட்டு அடக்கினார். இந்த கலவரம் உள்நாட்டில் பெரும் பிரச்சினையாகவே இருந்தது. இது மட்டுமல்லாமல் வெளியே செல்ஜுக்கின் எல்லையோரத்தில் மங்கோலியர்களின் படையெடுப்பு அத்துமீறியது. 1241 ல் மங்கோலியர்களின் திறமையான தளபதி ஒருவர் எர்ஸுருமைக் கைப்பற்றினார். இரண்டாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரெவ் கூட்டு இராணுவமாக பைஸாந்தியர்கள், அர்மேனியர்கள் மற்றும் ஃப்ராங்கிஷின் கூலிப்படைகளை இணைத்து மங்கோலியர்களை எதிர்த்தார். சிவாஸ், எர்ஸிங்கன் அருகில் கோசிடாக் என்ற இடத்தில் 1243 ல் நடந்த போரில் இரண்டாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரெவ் படுதோல்வி அடைந்தார். பிறகு மங்கோலிய படைகள் சிவாஸ், கைசெரி போன்ற பகுதிகளையும் கைப்பற்றி கொள்ளையடித்தனர். மங்கோலியர்கள் பரவலாக போரிட்டு அனடோலியாவின் பிற நகரங்களை நாசப்படுத்தினர். இரண்டாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரெவ் எவ்வளவோ முயற்சி செய்து தங்கள் சுதந்திரப் பகுதிகளை மீட்க முனைந்தார். இறுதியில் மங்கோலியர்களுக்கு ஆண்டு வருவாய் செலுத்த ஒப்புக் கொண்டு செல்ஜுக்குகள் மங்கோலியர்களின் வேலைக்காரர்கள் போல் ஆனார்கள். இந்த காலகட்டம் செல்ஜுக்குகளின் இல்கானித் காலம் என்றழைக்கப்பட்டது. இரண்டாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரெவ் காலத்தில் அக்சிகரா அரண்மனை, இன்சிர், கிர்கோஸ், பஸார், சிம்சிம்லி சுல்தான் அரண்மனை, சிஃப்ட் லிக், கர்கி, சுசுஸ், ககால்லி, இன்சிர், செகிரிக்சு மற்றும் சரஃப்சா அரண்மனைகள் மிகவும் புகழ் வாய்ந்தவை. 1246 ல் இரண்டாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரெவ் மரணமடைந்தார்.

செல்ஜுக்குகள் சரித்திரம் 4



இரண்டாம் கிலிக் அர்சலனின் மரணத்திற்குப் பின் அவர் மகன்களின் பதவிச் சண்டையில் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ் என்ற மகன் மன்னரானார். அவரால் நீண்ட நாட்கள் பதவியில் நீடிக்க முடியவில்லை. அடுத்த சகோதரர் இரண்டாம் ரூக்னத்தீன் விரைவில் அவரை அகற்றி விட்டு ஆட்சியில் அமர்ந்தார். அமர்ந்த கையோடு கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ், அவர் மகன்கள் இஸ் ஸத்தீன் கெயுஸ்ரேவ், அலாத்தீன் கெயுஸ்ரேவ் ஆகியோரை பைஸாந்திய பேரரசுக்கு நாடு கடத்தினார். இரண்டாம் ரூக்னத்தீன் மலத்யா, அர்டுகிட்ச் மற்றும் ஹர்புத் ஆகிய நகரங்களைக் கைப்பற்றினார். எர்ஸுருமின் சால்துகிட் தலைமையகத்தை செல்ஜுக்குகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். மிகுந்த சிரமத்தில் ஆட்சி செய்த இவர் 1204 ல் மரணமடைந்தார். இவருக்குப் பின் மீண்டும் முதலாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ் ஆட்சியைக் கைப்பற்றினார்.  அந்த நேரத்தில் இரண்டு சம்பவங்கள் நடந்தன. ஒன்று, கான்ஸ்டாண்டிநோபிள் நான்காம் சிலுவைப்போராளிகள் வசம் வீழ்ந்தது. இரண்டாவது, மங்கோலிய மன்னன் ஜெங்கிஸ்கான் சூறாவளி போல் தனது முதல் படையெடுப்பை நடத்தினார்.
                                முதலாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ் பதவியேற்றதும் லத்தீன் பகுதி கான்ஸ்டாண்டிநோபிள் இவர் வசம் வந்து மீண்டும் மத்திய அனடோலியா செல்ஜுக்குகளின் ஆதிக்கத்தில் வந்தது. தற்போது செல்ஜுக்குகளின் மாகாணம் முன்பை விட இருபுறமும் கடல் அமைந்து பலமானது. இது முதலாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவின் முக்கியமான திட்டமாக கருதப்பட்டது. அடுத்து வெனிஷிய அல்டோப்ரந்தினியிடமிருந்து புத்திசாலித்தனமாக சண்டையிட்டு 1207 ல் மெடிட்டரேனியன் துறைமுக நகரமான அண்டால்யாவைக் கைப்பற்றினார். தென் மேற்கு துருக்கியில் அமைந்துள்ள அண்டால்யா நகரம் ரோம, பைசாந்திய சாம்ராஜ்ஜியங்களிலிருந்து மிகவும் புகழ் வாய்ந்த அழகான நகரம். சுற்றிலும் சுவர் எழுப்பப்பட்டு, கோட்டையுடன் தோட்டங்களும் அமைந்திருந்தன. இங்கு ஒரு பெரிய புகழ்வாய்ந்த மசூதியும் கட்டப்பட்டது. தனது பொழுதுபோக்கை பெரும்பாலும் பைஸாந்திய அரண்மனையில் தன் மகன் இஸ்ஸத்தீன் கெய்கவுஸ், அலாவுத்தீனுடன் சென்று கழிப்பார். மேற்கத்திய கிறிஸ்தவ நட்பை பலவகையிலும் விரும்பினார். இது செல்ஜுக்குகளின் மேற்குப்புற வாணிபத்திற்கு பெரிதும் உதவியது. அண்டால்யாவைக் கைப்பற்றிய பிறகு, செல்ஜுக்குகளுக்கும், வெனிஷியர்களுக்கும் இடையில் முதல் வாணிப ஒப்பந்தம் கையெழுத்தானது.
                                 முதலாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ், இரண்டாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ், மூன்றாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ் என்று வரிசையாக ஆண்டார்கள். முதலாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ் நிறைய கட்டிடங்களைத் தன் ஆட்சியின் போது கட்டினார். அதில் 1206 ல்  செல்ஜுக்குகளின் கட்டிடக்கலையை எடுத்துக்காட்டும் வகையில் கட்டப்பட்ட பிரமாண்டமான மருத்துவமனையும், தனது சகோதரி கெவ்ஹிர் நெசிபி ஹாதுன் நினைவால் கைசெரியில் கட்டப்பட்ட ‘சிஃப்டி மதரஸா’வும் மிகவும் புகழ் வாய்ந்தது. குறிப்பிடத்தக்க பல கட்டிடங்களை குருசெஸ்மி, டோகுஸ் டெர்பெண்ட் ஆகிய இடங்களில் கட்டினார். மரவேலைப்பாடு மிகுந்த அங்காரா மியூசியம் அழகானது. இஸ்னிக்கின் பைஸாந்திய சக்கரவர்த்தி முதலாம் தியோடர் லாஸ்கரிஸ் என்பவரிடம் அலாசஹிர் என்ற இடத்தை கைப்பற்ற நடந்த போரில் 1211 ல் முதலாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ் மரணமடைந்தார்.
                            இவருக்குப் பின் இவர் மகன் இஸ்ஸத்தின் கெய்கவுஸ் தந்தையின் வழியில் ஆட்சியை விரிவுபடுத்தியும், வாணிபத்தில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி ஆட்சி நடத்தினார். இவரும் இவர் சகோதரர் அலாவுத்தீன் கெய்குபாதும் நடத்திய நாற்பதாண்டு கால ஆட்சியில் செல்ஜுக் மாகாணம் அதிக பட்ச முன்னேற்றத்தைக் கண்டது. இஸ்ஸத்தின் கெய்கவுஸ் 1214 ல் நிரந்தரமாக கைப்பற்றிய கருங்கடலின் துறைமுக நகரமான ‘சினோப்’ பில் கப்பல் கட்டுமான வாணிபத்தை நிறுவினார். இதனால் சீனா, இந்தியா, பெர்ஷியா, க்ரீமியன் பகுதிகள் மற்றும் மேற்குப் புறங்களில் வாணிபத்தைப் பெறுக்கினார். சிலுவைப் போராளிகளால் கைப்பற்றப்பட்ட அண்டாலியா நகரம் மீண்டும் இஸ்ஸத்தின் கெய்கவுஸால் வெல்லப்பட்டது. செல்ஜுக்குகள் கருங்கடல் மற்றும் மெடிட்டரேனியன் கடல் பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மேலும், துணைகடல்களின் வழியாக வியாபாரங்களும் பெருகின.
                                  இஸ்ஸத்தின் கெய்கவுஸ் ஆட்சியில் செல்ஜுக்குகள் பல துறைகளில் முண்ணனியில் இருந்தனர். இராணுவம் மிகவும் கட்டுப்பாடுடன் இருந்தது. அரசியல் நிர்வாகம், வாணிபம் மற்றும் சிற்பக்கலை சிறந்தோங்கியது. இஸ்ஸத்தின் கெய்கவுஸ் ஒரு கவிஞராக இருந்தார். மேலும் பெர்ஷிய இலக்க ணம், சூஃபியிஸத்தில் மிகவும் ஆர்வமுள்ளவராகவும் இருந்தார். மஞ்சள் காமாலை நோயினால் மரணமடைந்து சிவாஸ் பகுதியில் தான் கட்டிய மருத்துவமனை வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார்.

செல்ஜுக்குகள் சரித்திரம் 3



1092 ல் இளம்வயது கிலிக் அர்சலன் மெலிக் ஷாவால் விடுதலை செய்யப்பட்டார். அவர் திரும்பி இஸ்னிக் வந்து க்ரேட் செல்ஜுக்குகளை ஒன்றும் செய்ய முடியாமல் போனார். ஆனால் அதேசமயம் அவர்கள் ஐரோப்பிய சிலுவைப் போராளிகளுக்கு எதிராக போரிடும் வரை நிரந்தர எதிரியாக இருந் தார். 1096 ல் முதல் சிலுவைப்போராளிகள் பைஸாந்திய பேரரசர் அலெக்ஸியஸை எதிர்த்து போரிட செல்லும் வழியில் மேற்கு அனடோலியா வந்தார்கள். அப்போது கிலிக் அர்சலன் எதிர்திசையில் கிழக்கில் மலட்யா என்ற இடத்தில் போரில் இருந்ததால் சிலுவைப் போராளிகள் தலைநகர் இஸ்னிக்கை கைப்பற்றுவதை தடுக்க முடியவில்லை. கிலிக் அர்சலன் சிலுவைப்போராளிகளை எதிர்க்க க்ரேட் செல்ஜுக்குகளுடன் இணைந்து போரிட சம்மதித்தார். ஆனால் இணைந்த இரு செல்ஜுக் படைகளும் 1097 ஜூனில் டோரிலாயெம் என்ற இடத்தில் படு தோல்வி அடைந்தன. அதன் பிறகு செல்ஜுக்குகள் கொன்யாவை புதிய தலைநகரமாக ஆக்கிக்கொண்டனர். சிலுவைப்போராளிகளின் வேகம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்ததால் அவர்கள் கொன்யாவையும் மேலும் எரிக்லி, கைசெரி ஆகிய இடங்களையும் செல்ஜுக்குகளிடமிருந்து வென்றார்கள். 75% சதவிகித நிலப்பரப்பு பைஸாந்தியர்களின் ஆளுமைக்கு சென்றுவிட்டது. ஜெருசலத்தை நோக்கி செல்ல வேண்டிய சிலுவைப்போராளிகள் சில காலம் அனடோலியாவிலிருந்து கொலைகளைச் செய்தும், கொள்ளை அடித்தும் அட்டூழியம் செய்து கொண்டு செல்ஜுக்குகளின் மேலும் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற ஆசையைத் தடுத்து மத்திய கடலோரம் நோக்கி விரட்டினர். மேலும் சிலுவைப்போராளிகளை எதிர்க்க ஒன்று கூடிய க்ரேட் செல்ஜுக்குகளுடனான நட்பை பிளவு படுத்தினர். ஆனால் அவர்கள் சென்ற பிறகு மீண்டும் செல்ஜுக்குகள் நட்பு கொண்டார்கள்.
                           கிலிக் அர்சலன் ஆட்சியில் சரியாக சூடான வெயில் காலமான ஆகஸ்டில் செல்ஜுக்குகள் அமஸ்யா என்ற இடத்தில் லம்பார்ட்சை எதிர்த்து போரிட்டனர். இந்த அமஸ்யா கருங்கடலுக்கு மேலே மலைப்பகுதியான இடமாகும். அவர்களின் தானியக்கிடங்கை குறிவைத்து தாக்கி சிலுவைப்போராளிகளை தவிக்கவிட்டனர். அடுத்தடுத்து செல்ஜுக்குகள் அமஸ்யா, எரிக்லி ஆகிய பகுதிகளை மீண்டும் திரும்ப கைப்பற்றி மத்திய அனடோலியாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதேசமயம் க்ரேட் செல்ஜுக்குகள் இதுவரை கூட்டாளியாக இருந்த துருக்கி செல்ஜுக்குகளுக்கு மேலும் கிழக்கு பகுதியில் மலத்யாவையோ, ஈராக்கின் மோஸுல் நகரையோ நோக்கி முன்னேற எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கிலிக் அர்சலனின் எல்லை பரப்பும் எண்ணம் பலனற்று போனது.
                           கிலிக் அர்சலனுக்குப் பிறகு வந்த முதலாம் மெலிக் ஷா என்பவர் தனது சகோதரர் முதலாம் மெசுத்துடன் சேர்ந்து 1116 ல் பலமுறை பைஸாந்தியர்களை எதிர்த்து தோற்றுக்கொண்டிருந்தார். இருந்தாலும் விடாமல் கிரேட் செல்ஜுக்குகளுடன் கூட்டு சேர்ந்து (இதற்காக சகோதரர் மெசுத்துக்கு க்ரேட் செல்ஜுக்கின் இளவரசியை திருமணம் செய்து வைத்தார்.) எதிர்த்தார். 1134 ல் க்ரேட் செல்ஜுக்கின் மன்னர் இறந்தவுடன், சூழ்நிலை மெசுத்துக்கு சாதகமாக இருக்க அவர் இரண்டாம் சிலுவைப்போராளிகளுடன் போரிட்டு எஸ்கிசெஹிர், டெனிஸ்லி, அனடோலியா ஆகிய நகரங்களைக் கைப்பற்றினார். இந்த செல்ஜுக் போரின் இடையூறாலேயே ஐரோப்பியர்களுக்கு இரண்டாம் சிலுவைப்போர் பெரும் தோல்வியைத்தந்தது. க்ரேட் செல்ஜுக்குகளின் வெகு தொலைவிலிருந்த பிரதேசங்களை எல்லாம் மெசுத் வென்றெடுத்தார். இவருடைய ஆட்சியில் கொன் யாவில் கட்டப்பட்ட அலாவுத்தீன் மசூதி (1153) செல்ஜுக்குகளின் கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாய் இருந்தது.
                               மெலிக் ஷாவுக்குப் பிறகு, இரண்டாம் கிலிக் அர்சலன் ஆட்சிக்கு வந்தார். இவர் சிலுவைப்போராளிகள், பைஸாந்தியமன்னர் மானுவேல்  க்ரேட் செல்ஜுக்குகள் மற்றும் இவர்களுடன் கூட்டு வைத்திருந்த சொந்த சகோதரர் ஷஹின் ஷா ஆகிய அனைவருடன் போரிட்டார். சகோதரருடனும், மற்ற செல்ஜுக்குடன் நடந்தபோரில் வெற்றிபெற்றார். தோற்ற இருவரும் மீண்டும் இரண்டாம் கிலிக் அர்சலனுடன் மவுண்ட் சுல்தான் தாக் என்ற இடத்தில் இறுதி யாக போரிட்டு ஆட்சியை இழந்தார்கள். போரில் கைப்பற்றப்பட்ட செல்வத்தை வைத்து இரண்டாம் கிலிக் அர்சலன் கொன்யா நகரை வளப்படுத்தினார். பைஸாந்தியர்களின் கையை விட்டு அனடோலியா முற்றிலும் நழுவி செல்ஜுக்குகள் வசமானது. ஐரோப்பியர்கள் அனடோலியாவை துருக்கி என்று அழைக்க ஆரம்பித்தார்கள். செல்ஜுக்குகளும் துருக்கியில் பொருளாதார நடிவடிக்கைகளை மேற்க்கொண்டார்கள். கட்டிடங்கள், வியாபாரம், துறைமுகம், மதரஸா என்னும் இஸ்லா மிய கல்விக்கூடங்கள் போன்றவற்றை நிர்மாணித்தார்கள். முக்கியமான முன்னேற்றங்களை துருக்கி நாட்டில் உண்டாக்கினார்கள். விஞ்ஞான ஆராய்ச்சி முன்னேற்றத்திற்கு பெரும் தூண்டுகோலாய் இருந்தார்கள்.
                              1190 ல் மூன்றாவது சிலுவைப்போரின் போது கொன்யா நகரத்தை சிலுவைப்போராளிகள் கைப்பற்றினார்கள்.  இரண்டாம் கிலிக் அர்சலனுக்கு எழுபது வயது ஆனபோது அவர் மிகவும் தளர்ந்துவிட்டார், அவரின் ஒன்பது பிள்ளைகளும், ஒரு சகோதரரும், சகோதரர் மகனும் தங்கள் இஷ்டம் போல் ஆட்சி அதிகாரத்தில் தலையிட்டார்கள். கொன்யா மட்டும் இரண்டாம் கிலிக் அர்சலனின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவரின் மகன்கள் ஒவ்வொரு பகுதிக்கும் தனி ஆட்சியாளர்கள் போல் செயல்பட்டனர். வேடிக்கை என்னவென்றால் தனித்தனி நாணயங்கள் கூட வெளியிட்டுக் கொண்டார்கள். 1192 ல் தனது 77 வது வயதில் இரண்டாம் கிலிக் அர்சலன் மரணமடைந்தார். அவரின் மகன்கள் ஏறக்குறைய பனிரெண்டு ஆண்டுகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு அந்த பேரரசின் ஸ்திரத்தன்மையைக் குலைத்தார்கள். 1190 ல் மூன்றாம் சிலுவைப் போரின்போது ஜெர்மனி சக்கரவர்த்தி ஃப்ரெடெரிக் பார்பரொஸ்ஸா ஜெருசலம் போக கிலிக் அர்சலனிடம் அவர் இறப்பதற்கு முன், தென் துருக்கி வழியாக கடந்து செல்ல அனுமதி கேட்டுப்பெற்றார். அந்த அனுமதியுடன் அவர் தென் துருக்கியைக் கடக்கும் போது, இரண்டாம் கிலிக் அர்சலனும், அவர் மகன்களும் திடீரென்று எதிர்பாராத விதமாக ஜெர்மனி சக்கரவர்த்தி ஃப்ரெடெரிக் பார்பரொ ஸ்ஸாவின் படையைத் தாக்கினர். இதில் நிலைகுலைந்து ஃப்ரெடெரிக், சிலிஃப்கி என்ற இடத்தில் கோக் ஆற்றின் வெள்ளத்தில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டு இறந்துபோனார். இது அவர்களுக்கும் சிலுவைப்போராளிகளுக்குமிடையில் பெரும் பிளவை ஏற்படுத்தியது.  1192 ல் இரண்டாம் கிலிக் அர்சலன் மரணமடைந்து கொன்யாவில் செல்ஜுக் சுல்தான்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

செல்ஜுக்குகள் சரித்திரம் 2



1063 ல் துக்ருல்பெக் மரணமடைந்த பின் இவருடைய சகோதரர் சக்ரிபெக்கின் மகன் அல்ப் அர்சலன் (அல்ப்-போர்வீரன், அர்சலன்-சிங்கம்) என்பவர் ஆட்சிக்கு வந்தார். இவர் பைஸாந்தியர்களை எதிர்த்துப் போரிட்டு மேற்குப் புறமாக முன்னேறினார். அப்போது கிழக்கு அனடோலியாவில் அவ்வளவாக மக்கள் தொகை இல்லை, பைஸாந்திய சக்கரவர்த்தி இரண்டாம் பாசில் அங்கு வசித்த 40,000 அர்மேனிய மக்களை வெளியேற்றி சிவாஸ் மற்றும் கைசெரியில் தங்க வைத்தார். அல்ப் அர்சலன் 1064 ல் அர்மேனியாவையும், 1070 ல் அனடோலியா மற்றும் அலிப்போவையும் கைப்பற்றினார். 1071 ல் ஜெருசலத்தையும் இவர் கைப்பற்றிய பின் தான் ஐரோப்பியர்கள் சிலுவைப்போருக்கான ஆரம்பத்தை ஆராய்ந்தார்கள். 1071 ல் பைஸாந்திய சக்கரவர்த்தி ரோமைன்டியாகினிஸ் (ரோமனாஸ்) அர்மேனியாவைத் திரும்ப வெற்றி கொள்ள ‘வான்’ ஏரியிலிருந்து 25 மைல் தொலைவிலுள்ள மன்ஸிகர்ட் என்ற கோட்டையில் அல்ப் அர்சலனால் தந்திரமாகத் தோற்கடிக்கப்பட்டார். தன்முன் கைதியாக நின்ற ரோமைன்டியாகினிஸிடம் , “ ஒருவேளை தாங்கள் கைதாகாமல் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்” என்று கேட்க, அதற்கு ரோமைன்டியாகினிஸு, “ நான் உங்களைக் கொன்றிருப்பேன் அல்லது கான்ஸ்டாண்டிநோபிள் தெருக்களில் கட்டி இழுத்து வரச் செய்திருப்பேன்” என்று கூற, அதற்கு அல்ப் அர்சலன், எனது தண்டனை தங்கள் மீது மன்னிப்பளிப்பதாகும்” என்று கூறியது மிகப்பெரிய சரித்திரப்பதிவு. தோற்றுப்போன பைஸாந்திய சக்கரவர்த்தி ரோமைன்டியாகினிஸுக்கு தனது மாளிகையில் விருந்து வைத்து கௌரவித்து ‘தினசரி ஆயிரம் தினார்கள் இரண்டு ஆண்டுகளுக்கு பைஸாந்தியர்கள் செலுத்தவும், கைது செய்யப்பட்ட செல்ஜுக்குகளை விடுவிக்கவும், கைப்பற்றப்பட்ட பகுதிகள் செல்ஜுக்குகளின் எல்லையுடன் இணைக்கவும், எப்போது அழைத்தாலும் உதவிக்கு வருவதாகவும் (FEUDEL SYSTEM), பைஸாந்திய சக்கரவர்த்தி ரோமைன் டியாகினிஸுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். இந்த வெற்றிக்குப் பிறகே அனடோலியாவில் துருக்கியர்களின் ஆட்சி நிலை பெற்றது. 1072 ல் அல்ப் அர்சலன் தனது கூடாரத்தில் படுகொலை செய்யப்பட்டார. அல்ப் அர்சலனின் மரணத்தால் பெர்ஷியாவின் மாபெரும் செல்ஜுக்குகள் கிழக்கு அனடோலியாவின் நிலப்பரப்பை செல்ஜுக்குகளின் ஒரு பகுதியாக மட்டுமே விட்டு விட்டு விலக வேண்டியதாகியது.
                          அடுத்ததாக அல்ப் அர்சலனின் மகன் மாலிக் ஷா 1072 ல் ஆட்சிக்கு வந்தார். செல்ஜுக்குகளில் இவர் மிகவும் பலம் வாய்ந்தவராகவும், புத்திசாலியாகவும் இருந்தார். இவர் 1079 ல் ட்ரான்ஸ்க்சியானா மற்றும் கிர்மான் பகுதிகளைக் கைப்பற்றினார். இவரின் ஆட்சியில்தான் மாபெரும் செல்ஜுக் சாம்ராஜ்ஜியம் பல திசைகளிலும் விரிவடைந்து மைனர் ஆசியாவிலிருந்து துருக்கிஸ்தான் வரை நீண்டது. இவர் தலைநகரை ரெய்யிலிருந்து இஸ்ஃபஹானுக்கு மாற்றிக் கொண்டார். மாலிக் ஷாவின் ஆட்சிகாலம் செல்ஜுக்குகளின் பொற்காலமாகும். இவரது ஆட்சி “கிரேட் செல்ஜுக்” என்று புகழப்பட்டது. அப்பாஸிட் கலீஃபா இவரை “கிழக்கு, மேற்கின் சுல்தான்” என்று புகழாரம் சூட்டினார். மாலிக் ஷாவின் ஆட்சியில் இராணுவம், விஞ்ஞானம், அரசியல், இலக்கியம் என்று பல துறைகளில் செல்ஜுக் சாம்ராஜ்ஜியம் வளர்ச்சியடைந்திருந்தது. இந்த மாபெரும் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தது மெலிக் ஷாவின் வலதுகரமாய் இருந்த நிர்வாகத்திறன் மிக்க பெர்ஷிய மந்திரி நிஜாம் அல் முல்க் என்பவராவார். பின்னாளில் இவர் சிலரால் படுகொலை செய்யப்பட்டார். இன்னும் ஒரு பெயர் பெற்ற மந்திரி தாஜ் அல் முல்க் என்பவர். பெர்ஷிய சரித்திரத்தில் செல்ஜுக்குகளின் திறமைக்கு சிறப்புண்டு. இஸ்ஃபஹானி லுள்ள ‘மஸ்ஜித் இ ஜாமி’ மசூதி இவர்கள் கட்டியது. கட்டிடக்கலையிலும் சிறந்து விளங்கினார்கள். நீலமும் கருப்பும் கலந்த பளிங்கு கற்கள் வேலைப்பாடு இவர்களின் சிறப்பம்சம். இஸ்லாமியர்களின் ஆட்சியில் செல்ஜுக்குகளின் கலை, சிலை வடிவமைப்புக்கு தனி சிறப்புண்டு. 1092 ல் மாலிக் ஷா மரணமடைந்த பின் செல்ஜுக் சாம்ராஜ்ஜியம் குடும்ப சண்டையினால் பல பகுதிகளாக சிதறி மத்திய ஆட்சியின் கட்டுப்பாடு இல்லாமல் போனது. உள் மாநிலங்களை சிரிய செல்ஜுக்குகளும், ஈராக்கை கோரசான் செல்ஜுக்குகளும், கிர்மான் செர்ஜுக்குகள், அனடோலியா செல்ஜுக்குகள் என்று பிரிந்து போயினர். ஷியா பிரிவினரின் இடையூறுகள், சிலுவைப் போர்கள் மற்றும் மத்திய ஆசியா விலிருந்து குடியேறிய துருக்கி பழங்குடியினரின் தொல்லைகள் என்று பல குழப்பங்களுக்கு நடுவே மாபெரும் செல்ஜுக் சாம்ராஜ்ஜியம் மேலும் ஒரு நூற்றாண்டைக் கடந்து ஆண்டது.                       
      
ரோம செல்ஜுக்குகள்
                     சிரிய செல்ஜுக்குகள், கோரசான் செல்ஜுக்குகள், கிர்மான் செர்ஜுக்குகள், அனடோலியா செல்ஜுக்குகள் என்று சிறிய பகுதிகளின் ஆட்சியாளர்களாகப் பிரிந்து போன செல்ஜுக்குகளில் அனடோலியா செல்ஜுக்குகள் திறமையாக செயல்பட்டு மீண்டும் சாம்ராஜ்ஜியத்தை நிலை நிறுத்தினார்கள். இவர்களை சரித்திரம் மைனர் ஆசியாவிலிருந்து வந்த செல்ஜுக்குகள், ரோமின் செல்ஜுக்குகள், துருக்கிய செர்ஜுக்குகள் என்றும் குறிப்பிடுகிறது. இவர்களை க்ரேட் துருக்கிகள் என்றும் அழைக்கிறார்கள். துருக்கிய செர்ஜுக்குகள் மன்ஸிகர்ட் போரில் வெற்றியடைந்தனர். மேலும் வடக்கு மேற்கு பகுதிகளில் முன்னேறி பெரும் பண்ணை யாளர்களாகவும், கால்நடை வளர்ப்பாளர்களாகவுமாகி ஆதாயம் பெற்றார்கள். இவர்களின் மத்திய அண்டோலியா பகுதிதான் தற்போதைய துருக்கி நாடானது. இவர்கள் இஸ்லாமிய மதத்தை துருக்கியில் பரப்பினார்கள்.
                         அந்த நேரத்தில் அனடோலியாவைச் சுற்றி அதிக அளவில் லத்தீன் மொழி பேசுபவர்கள், பைஸாந்தியர்கள், வெனிஷியன் மற்றும் ஜினோயெஸின்களின் காலனிகள், மெடிட்டரேனியன் பகுதிகளில் செயிண்ட் ஜானின் மன்னர்கள், மேற்குப்புறத்தில் க்ரீக் இனத்தவர்கள் மற்றும் அர்மேனியன்கள், ஜார்ஜியன்கள் கிழக்கிலுமான அரசியல் சூழ்நிலை இருந்தது. 1064 ல் சுலைமான் இப்ன் குதல்மிஸ் என்பவர் அல்ப் அர்சலனை எதிர்த்து புரட்சி செய்தார். ஆனால் அது தோல்வியடைந்து அவர் பெர்ஷியாவிலிருந்து அனடோலியாவுக்கு சென்றார். அங்கு அவருக்கு அருமையான வாய்ப்பு அமைந்து அவரும் அவர் மகனும் துருக்கி பழங்குடியின தலைவர்களாக அறியப்பட்டு பைஸாந்தியர்களை எதிர்த்துப் போரிட்டு கிழக்கு அனடோலியாவை கைப்பற்றினார்கள். மேலும் மேற்கில் முன்னேறி ஆண்டியாக், கொன்யா (கென்யா அல்ல) பகுதிகளை வெற்றி கொண்டார்கள். இவர்களில் சிலர் பைஸாந்திய சாம்ராஜ்ஜியத்தில் பல பகுதிகளில் பணியில் இருந்தார்கள். அங்கே அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து அந்த பகுதிகளுக்கும், நகரங்களுக்கும் எதிராக இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு திரட்டினார்கள். 1081 ல் முதலாம் அலெக்ஸியஸ் என்பவர் பைஸாந்திய சாம்ராஜ்ஜியத்தின் மன்னரான போது சுலைமான் இப்ன் குதல்மிஸ் உடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார். அதாவது சுலைமான் இப்ன் குதல்மிஸ் பைஸாந்தியர்களின் தலைநகர் கான்ஸ்டாண்டி நோபிளுக்கு அருகேயுள்ள இஸ்னிக் நகரில் தங்கள் தலைநகரை அமைத்துக்கொள்ளலாம் என்று முடிவானது. அதே நேரத்தில் இன்னொரு பிரிவு செல்ஜுக்குகள் பைஸாந்தியர்களுக்கு சொந்தமான சிவாஸ், அமஸ்யா மற்றும் அர்மேனியாவை கைப்பற்றி தென் அனடோலியாவில் சிலிஷியா என்ற பகுதியை தங்கள் தனி மாகாணமாக அறிவித்துக்கொண்டார்கள். அவர்களின் இந்த அதிகாரத்திற்கு சுலைமான் இப்ன் குதல்மிஸ் ஆதரவளித்தார். அதே நேரத்தில் அல்ப் அர்சலன் வழியில் வந்த க்ரேட் செல்ஜுக்குகளுக்கு தான் கட்டுப்பட மாட்டேன் என்றார். 1086 ல் சுலைமான் இப்ன் குதல்மிஸ் ஆண்டியாக்கைக் கைப்பற்றினார். அலொப்போவை வெல்ல பலமுறை முயற்சி செய்தார். அந்த முயற்சியில் இறந்து போனார். அவரின் மகன் கிலிக் அர்சலன் என்பவரை க்ரேட் செல்ஜுக்கின் ஆட்சியாளர் மெலிக் ஷா கைது செய்து ஈராக்குக்கு கொண்டு சென்றார்.