சனி, 11 ஜூலை, 2015

மொகலாய வரலாறு 28


கூ. செ. செய்யது முஹமது
ஔரங்கஸேபின் மறைவிற்குப் பிறகு, மனைவி நவாப் பாய் மூலம் பிறந்த மகன் குத்ப் உத் தின் முஹம்மது முஃஅஸ்ஸிம் என்ற முதலாம் பஹதூர் ஷா ஆட்சிக்கு வந்தார். ஐந்தாண்டுகள் ஆண்ட இவர் தந்தையால் ஷா ஆலம் என்றும் அழைக்கப்பட்டார். துருக்கிய மொழியில் பஹதூர் என்றால், தைரியமானவர் என்று பொருள். பஹதூர் ஷா என்ற பெயரிலேயே    1707 ல் அறுபத்தி மூன்று வயதில் பொறுப்பேற்றார். இவருக்கு நூருன்னிசா பேகம், மெஹருன்னிசா பேகம், அமத் உல் ஹபீப் பேகம், பேகம் நிசாம் பாய் மற்றும் பேகம் அம்ரிதா பாய் என்று ஆறு மனைவிகள். ஜஹந்தர் ஷா, அஸீமுஷ் ஷான், ரஃபீ உஷ் ஷான், குஜிஸ்தா அக்தர் ஜஹான் ஷா, புலந்தர் ஷா உட்பட எட்டு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். 1643 அக்டோபரில் பிறந்த இவர் டெக்கானின் கவர்னராக இருந்தார். பூனாவின் மீது படையெடுத்த போது தோல்வியுற்று எட்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். 
1670 ல் தந்தைக்கு எதிராக புரட்சியில் இடுபட்டு தன்னை மொகலாய மன்னராக அறிவித்துக் கொண்டார். ஔரங்கஸேப், தாயாரான நவாப் பாயை அனுப்பி பஹதூர் ஷாவிடம் பேசி அமைதி பெற வைத்தார். மீண்டும் 1680 ல் ஔரங்கஸேப் அவருக்கு பிடித்தமான ராஜபுத்திர தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்த போது புரட்சி செய்தார். ஔரங்கஸேப் அதேபோல் தாயாரை அனுப்பி அடக்கி வைத்தார். 1681 ல் ஔரங்கஸேபுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்ட சகோதரர் சுல்தான் முஹம்மது அக்பரை அடக்கவும், 1683 ல் கொங்கன் பகுதியில் முற்றுகை இடவும் அனுப்பப்பட்ட பஹாதூர் ஷா வேண்டுமென்றே இரண்டிலும் தோல்வியுற்றதாகக் கருதப்பட்டது. 1687 ல் ஔரங்கஸேப் இவரை கோல்கொண்டா மீது படையெடுக்கச் சொன்னார். பஹதூர் ஷாவுக்கும், மன்னர் அபுல் ஹசனுக்கும் இடையே இருந்த ரகசியத் தொடர்பை ஔரங்கஸேபின் ஒற்றன் ஒருவன் அறிந்து வந்து சொல்ல, டெல்லியை விட்டு வெகுதொலைவில் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். அவரின் பணியாட்களும் நீக்கப்பட்டனர். பஹதூர் ஷாவின் ராஜதுரோகம் ஔரங்கஸேபை பெரும் கோபம் கொள்ள வைத்தது. ஆறு மாதங்களுக்கு நகம் மற்றும் தலைமுடி வெட்டிக் கொள்ளவும், நல்ல உணவும், குளிர்ந்த நீரும் கொடுக்கக் கூடாது என்றும், தன் அனுமதியின்றி யாரும் சந்திக்கக் கூடாது என்றும் கடும் உத்தரவு பிறப்பித்தார். 1694 ல் அவரை ஔரங்கஸேப் வீட்டுக்காவலிலிருந்து விடுவித்து, ஒற்றர்களை வைத்து கண்காணித்தார். பஹதூர் ஷாவின் மகன்களை டெக்கானை விட்டு வட பகுதியில் சில இடங்களில் மாற்றி தான் இறக்கும் வரை அவர்களை இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடை செய்தார். 
1695 ல் பஞ்சாப் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னபோதும் மறுத்து விட்டார். அதே ஆண்டு லாகூருக்கு மாற்றப்படும் வரை, அக்பராபாதில் கவர்னராக நியமிக்கப்பட்டார். காபூலின் சுபேதார் அமின் கான் இறந்த பிறகு 1696 லிருந்து ஔரங்கஸேப் மரணமடைந்த 17007  வரை அங்கேயே கவர்னராக இருந்தார். இறக்கும் தருவாயில் அடுத்த மன்னர் யாரென்று ஔரங்கஸேப் குறிப்பிடவில்லை. பஹதூர் ஷாவின் மாற்று சகோதரர் கள் கம் பக் ஷ் டெக்கானிலும், முஹம்மது ஆஸம் ஷா குஜராத்திலும் கவர்னர்களாக இருந்தனர். கம் பக் ஷ் தன் பெயரில் நாணயம் வெளியிட்டுக் கொண்டார். ஆசம் தன்னை மன்னராக அறிவித்துக் கொள்ள ஆக்ரா விரைந்தார். பஹதூர் ஷாவால் ஜஜாவ் போரில் தோற்கடிக்கப்பட்டார். அவரும் அவர் மகன் அலி தாபரும் போரில் கொல்லப்பட்டனர். கம் பக் ஷையும் டெக்கானில் கவர்னராக தொடரும் படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் மறுக்கவே ஒரு போரில் கொலை செய்யப்பட்டார். 1707 ஜூனில் 63 வயதில் முதலாம் பஹதூர் ஷாவாக ஆட்சிக்கு வந்தார்.
ஔரங்கஸேப், தாரா ஷிகோவின் பதவிச் சண்டையின் போது, ஜோத்பூர் ராத்தோர்களின் மன்னன் அஜீத் சிங் தாராவை ஆதரித்தார். இதனால் ஔரங்கஸேப் ஒரு போரின் போது அவரைக் கொன்றார். அவரது மகன் இளைய அஜீத் சிங்கை மன்னித்து டெக்கானில் கவர்னராக இருக்க வைத்தார். ஔரங்கஸேப் இறந்த பிறகு, இளைய அஜீத் சிங் மீண்டும் ஜோத்பூரை மொகலாயர்களிடமிருந்து கைப்பற்றினார். உதைபூரின் மன்னர் இரண்டாம் அமர் சிங் சகோதரர் பக்த் சிங் மூலம் நூறு தங்க நாணயங்களையும், இரண்டு குதிரை, யானையையும் பஹதூர் ஷாவுக்கு பரிசாக அனுப்பினார். இப்போது பஹதூர் ஷா ஜோத்பூரையும், ஏற்கனவே மொகலாயர்கள் இழந்திருந்த ராஜபுத்திர நகரங்களையும் வெல்ல படையெடுத்தார். பதவியேற்ற அதேவருடம் நவம்பரில் அம்பர் நோக்கி செல்லும் வழியில் ஃபதேபூர் சிக்ரியில் சலீம் சிஷ்டி கல்லறைக்கு விஜயம் செய்தார். மிஹ்ரப் கானை அனுப்பி ஜோத்பூரைக் கைப்பற்றினார். 
1708 ஜனவரியில் பஹதூர் ஷா அம்பரை அடைந்த போது, அங்கு சகோதரர்கள் ஜெய் சிங்கும், பிஜாய் சிங்கும் பதவிக்கு அடித்துக் கொண்டிருந்தார்கள். பஹதூர் ஷா ஜெய்சிங்கின் சொத்துக்களை பறிமுதல் செய்து அம்பரை ‘இஸ்லாமாபாத்’ என்று பெயரிட்டு மொகலாய பிரதேசத்தில் இணைத்துக் கொண்டார். பிஜாய் சிங்கை பெயருக்கு இஸ்லாமாபாதின் மன்னராக ஆக்கி மிர்சா ராஜா என்று பெயரிட்டு, லட்ச ரூபாய் வரை பரிசளித்தார். போர் செய்யாமலே அம்பர் மொகலாயர்கள் வசம் வந்தது. பின்னர் ஜோத்பூர் சென்ற பஹதூர் ஷா, கான் ஸமானின் உதவியுடன் அதையும் போரின்று வென்றார். 1707 மார்சில் நாடெங்கும் ஔரங்கஸேப் இறந்த செய்தி பரவி இருந்தது. மாற்று சகோதரர் முஹம்மது கம் பக் ஷ் பிஜப்பூர் சென்ற போது அப்போதைய அதன் மன்னர் சய்யித் நியாஸ் கான் எதிர்ப்பின்றி சரணடைய கம் பக் ஷ் ‘பாதுஷா கம் பக் ஷ் இ தின்பனா’ என்று பெயரிட்டுக் கொண்டு மன்னரானார். அங்கிருந்து குல்பர்கா, வகின்கேராவை வெல்ல கிளம்பினார். பிஜப்பூரில் தகர்ரப் கான் மேலும் சிலரின் கூட்டுடன் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பெரிய மசூதிக்கு வரும் கம் பக் ஷைக் கொல்லத் திட்டமிட்டார். கம் பக் ஷ் அவரை விருந்துக்கு அழைத்து கொன்றார்.
1708 டிசம்பரில் பஹதூர் ஷாவை எதிர்க்க, கம் பக் ஷ் பெரும் படையுடன் ஹைதராபாதுக்கு அருகில் வந்தான். பஹதூர் ஷா கான் ஸமானை தளபதி ஆக்கி இருந்தார். ராஜஜோதிடர் நிச்சயமாக கம் பக் ஷ் வெல்வார் என்று கணித்துச் சொல்லி இருந்தார். ஆனால் மொகலாய தளபதிகளால் கம் பக் ஷ் கொல்லப்பட்டார். பஹதூர் ஷா குத்பாக்களில் அலி (ரலி) அவர்களின் பெயரை வசியாக முன்மொழியச் செய்தார். இது பெரும் பிரச்சினையாக வெடித்து பாதுஷா மசூதியின் தலைவரை பஹதூர் ஷா கைது செய்தார். அடுத்த வெள்ளிக்கிழமை தொழுகை அலி (ரலி) யின் பெயர் கூறப்படவில்லை. பஹதூர் ஷாவின் காலத்தில் வெளியிடப் பட்டிருந்த நாணயங்கள் மிகவும் எடை கொண்டதாக இருந்தது.
1712 ல் பஹதூர் ஷா லாகூரில் ஷாலிமார் தோட்டத்தை புணரமைத்துக் கொண்டிருந்த போது மரணமடைந்தார். அடுத்த மன்னர் யாரென்று அறிவிக்கப்படாததால் மனைவி மெஹ்ருன்னிசாவிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. மெஹ்ரௌலியில் சூஃபி ஞானி குத்புதீன் பக்தியார் காய் என்பவரின் சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இவருக்குப் பிறகு, மகன் ஜஹந்தர் ஷா ஆட்சிக்கு வந்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக