செவ்வாய், 9 ஜூன், 2015

ஃபாத்திமிட்கள் வரலாறு



                                                                நபி(ஸல்)களார் மற்றும் நான்கு நேர்மையான கலீஃபாக்களுக்குப் பிறகு, இஸ்லாமிய ஆட்சி அரபுலகத்தை விட்டு எகிப்து, சிரியா, மெஸோபொடோமியா மற்றும் பெர்ஷியா என்று பரவியது. அலி (ரலி) மரணத்திற்குப் பின் அப்து சப்பாஹ் என்பவர் ஆள்வதற்கு உரிமையுள்ளவர்கள் நபிகளின் வாரிசுகள் தான் என்று மிகப் பெரிய அளவில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அலி (ரலி), ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி), முஹம்மது வரிசையில் (இவர் அலியாரின் இன்னொரு மனைவிக்கு பிறந்தவர் என்று சொல்லப்படுகிறது) ஐந்தாவது இமாமாக அபு ஹாஷிம் என்பவரை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். இவர் வழி வந்தவர்களை சரித்திரத்தில் ‘ஹாஷிமித்’ என்றும் அழைப்பர்.
                             இந்த ஷியா, கராமானியர்கள், ஹாஷிமித்கள், இஸ்மாயிலிக்கள் இன்னும் பல பிரிவுகள் இருக்கின்றன. இவர்கள் பெரும் குழப்பவாதிகள் அலி (ரலி) அவர்களின் ஆண் மக்களின் வாரிசுகளிலிருந்து இமாம்களை தங்களுக்கு ஏற்றவாறு தேர்வுசெய்து எப்படியும் தாங்கள் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆட்சியைத் தொடர்வதற்கு உரிமையுள்ளார்கள் என்று அடம் பிடித்தார்கள். இவர்களின் சரித்திரம் என்னதான் சொன்னாலும் குழப்பம் தான் மிஞ்சும். அவ்வளவு சிக்கலான இமாம்களின் வழிமுறைத் தகவல்களை உள்ளடக்கியது. நபிகளாரின் சிறிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்களின் வழி வந்த அப்பாஸியர்களின் ஆட்சிக்கு எதிராக ஜாஃபர் என்பவரை இமாமாக ஏற்றவர்கள் கலகம் செய்தார்கள். பன்னிருவர் என்று (வரலாறு இவர்களை “TWELVERS”) அழைக்கப்பட்டவர்கள் தான் இந்த “ஃபாத்திமிட்கள்.
                              899 ல் அல்ஜீரியாவைச் சேர்ந்த குதாமா என்ற பழங்குடியினரான உபைத் அல்லாஹ் அல் மஹ்தி பில்லாஹ் என்பவர் 11 வது இமாமாக இருந்தார். இவர் 905 ல் கிழக்கு மொரோக்கோவில் சிஜில்மசா என்ற இடத்திற்கு குடிபெயர்ந்து வியாபாரம் செய்தார். இடையில் இவர் இஸ்மாயிலிய கொள்கைகளைப் பரப்பியதால் கைது செய்யப்பட்டார். அல் ஷியா இ என்பவர் படைகளை அனுப்பி உபைத் அல்லாஹ் அல் மஹ்தியை மீட்டார். உபைத் அல்லாஹ் அல் மஹ்தி இமாமாகவும், கலீஃபாவாகவும் மாறி வட ஆப்பிரிக்கா, பாலஸ்தீன், சிரியாவையும், குறுகிய காலம் பாக்தாதையும் ஆட்சி செய்தார். ஃபாத்திமிட்களின் ஆட்சி அட்லாண்டிக் கடலின் லிபியா வரை பரவி இருந்தது.                                                               909 ல் வட அப்பிரிக்காவைக் கைப்பற்றி துனிஷியாவில் மஹ்தியா என்ற இடத்தை தலைநகரமாக ஆக்கிக் கொண்டார்கள். 949 ல் அல் மன்சூரியாவையும் பின்னர் 969 ல் எகிப்தை வென்று கெய்ரோவையும் தலைநகரங்களாக மாற்றிக் கொண்டார்கள்.        
                         மெடிட்டரேனியன் மற்றும் இந்திய பெருங்கடல்களின் இடையே பெரும் வாணிபத்திற்கு வழி வகுத்து எகிப்தை வளப்படுத்தினார்கள். மேலும் வாணிபத்தை சீனா வரை வளர்த்தார்கள். அரசு நிர்வாகங்களில் ஷியா பிரிவினர் உயர் பதவிகளில் இருந்து கொண்டு சுன்னிப்பிரிவு முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் மீது ஆதிக்கம் செலுத்தினார்கள். ஃபாத்திமிட்கள் காலத்தில் செராமிக் என்ற ஒரு வகையான கல்லில் செய்யும் கலை மிகவும் புகழ் பெற்றது. இன்றும் அல் அஸார் பல்கலைக் கழகம், அல் ஹகீம் மசூதி இவர்களின் செராமிக் கலையை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. எகிப்தில் அஸ் ஸஹ்ரா (ஃபாத்திமா (ர.அ): தி ப்ரில்லியண்ட்/அறிவானவர்) என்ற மதரசாக்களை துவக்கினார்கள்.
                               ஃபாத்திமிட்களின் இராணுவத்தில் பெரிய அளவில் குதாமா பகுதி பழங்குடியினரே இருந்தார்கள். எகிப்தை வென்ற பின் எகிப்தியர்களும் பின்னால் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். போர் செய்யும் நாடுகளுக்கேற்றவாறு பிறகு கருப்பு ஆப்பிரிக்கர்களையும், துருக்கியர்களயும் குதிரைப்படை மற்றும் அம்பெறியும் வீரர்களாக படையில் சேர்த்துக் கொண்டார்கள். கலீஃபாக்கள் தங்கள் பெயரின் ஆரம்பத்தில் அபூ என்றும் முடிவில் லாஹ் என்றும் வைத்துக் கொண்டார்கள். இப்படியாக மஹ்திபில்லாஹ், அம்ரல்லாஹ், மன்சூர்பில்லாஹ், மு இஸ்லி தீனல்லாஹ், அஜீஸ்பில்லாஹ், ஹகீம் பி அம்ரல்லாஹ், இஸ்ஸதீனல்லாஹ், முஸ்தன்ஸீரல்லாஹ், முஸ்தலிபில்லாஹ், அஹ்கமல்லாஹ், மஜீத் அல் ஹாஃபிஸ், அல் ஸாஃபிர், அல் ஃபாயிஸ், அல் ஆதித் ஆகிய 14 கலீஃபாக்கள் 1171 வரை ஆண்டார்கள்.

                           இவர்களின் இமாம்களை கெய்ரோவில் “அல் மஷ்ஷாத் அல் ஹுசேன்” என்ற கல்லறையில் அடக்கம் செய்துள்ளார்கள். இந்த இடத்தை அரபியில் “பாப் மகல்லிஃப் அத் அர் ரசூல்” (அதாவது ‘ரசூலின் எஞ்சிய கதவு’) என்று அழைத்தார்கள். இங்கு நபி (ஸல்) அவர்களின் தலை முடி உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
1040 ல் வட ஆப்பிரிக்காவின் கவர்னராக இருந்த பெர்பெர் ஸ்ரித் என்பவர் சுன்னிப்பிரிவு அப்பாசிய கலீஃபாவின் ஆதரவில் ஃபாத்டிமிட்களை எதிர்த்தார். 1070 ல் துருக்கியர்களால் சிரியாவில் தாக்கப்பட்டனர். பின் சிலுவைப்படையினராலும் தாக்கப்பட்டு, எகிப்து மட்டுமே இவர்கள் வசம் இருந்தது. நூருத்தீன் என்பவரின் ஆட்சியின் கீழ் ஜெனரல் ஷிர்குஹ் மற்றும் ஸலாவுத்தீன் அல் அய்யூபி என்பவரால் 1171ல் எகிப்தை வெற்றி கொண்டு ஃபாத்திமிட் ஆட்சிக்கு முடிவைக் கொடுத்து அய்யுபிட்கள் ஆட்சியை நிறுவினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக