செவ்வாய், 30 ஜூன், 2015

மொகலாய வரலாறு 8

நசீர் உத் தீன் முஹம்மது ஹுமாயுன்
கூ.செ.செய்யது முஹமது
                     பாபரின் முதல் மனைவி மாஹம் பேகமுக்கு பிறந்தவர்கள் ஹுமாயுன், பார்பூல் மிர்சா, மிஹ்ர்ஜான் பேகம், இஷான் தௌ லத் பேகம் மற்றும் ஃபாரூக் மிர்சா. இரண்டாவது மனைவி மசூமா சுல்தான் பேகம் பிரசவத்தில் இறந்து போனதால், அவருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு அவர் பெயரே சூட்டப்பட்டது. மூன்றாவது குல்ருக் பேகம் என்ற மனைவிக்கு காம்ரான் மிர்சா, அஸ்கரி மிர்சா, ஷாருக் மிர்சா, சுல்தான் அஹ்மது மிர்சா மற்றும் குல் இஸார் பேகம் ஆகியோர் பிறந்தனர். நான்காவது மனைவிக்கு குல்ரங்க் பேகம், குல்சிஹ்ரா பேகம், ஹிண்டால் மிர்சா, குல்பதன் பேகம் மற் றும் அல்வார் மிர்சா ஆகியோர் பிறந்தனர். நசீருத்தீன் முஹம்மது ஹுமாயுன் 1508 மார்ச் 6 ல் (துல்கதா 4, 913) காபூல் அரண்மனையில் பிறந்தார். இவர் பிறந்த தற்குப் பிறகு தான் எல்லா மகன்களுக்கும் “மிர்சா” என்று வருமாறு பாபர் பெய ரிட்டார். தன்னையும் பாபர் பாதுஷா என்று அழைத்துக் கொண்டார்.
           ஒருமுறை ஹுமாயுன் கடுமையாக நோய் வாய்ப்பட்டு, மிகவும் பலவீனமாக போன போது பாபர் தொடர்ந்து தொழுகை யில் ஈடுபட்டு, இறைவனே உன்னுடைய அதிகாரத்தில் உயிர்களை பறிமாறிக் கொள்ளும்படி இருந்தால், என் மகன் ஹுமாயுனுக்குப் பதில் என்னுடைய உயிரை எடுத்துக் கொள் என்று வேண்டினார். பாபர் 1530 டிசம்பர் 26 ல் (ஜுமாதா 5, 937) இறந்தார். இறப்பதற்கு முன்பிருந்தே தனக்குப் பிறகு ஹுமாயுன் தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார். ஹுமாயுன் அழகாக திருக்கு ரானை ஓதக்கூடிய 60 நபர்களை சில தினங்கள் பாபரின் மறுமைக்காக ஓதச் செய்தார்.
                                                                           1530 ஆம் ஆண்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக ஹுமாயுன் ஆட்சிக்கு வந்தார். இவரால் அமைதியாக ஆட்சி செய்ய முடியவில்லை. எதிரியான ஷேர்ஷாவினால் பல தொல்லைகளுக்கு ஆளா னார். ஹுமாயுனின் சகோதரர்கள் பல மாகாணங்களை கவர்னர்களாக நிர்வகி த்தனர். காபூல் மற்றும் கந்தஹாரை காம்ரானும், ஆள்வார் மற்றும் மெவாத் தை மிர்சா ஹிண்டாலும், சம்பலை மிர்சா அஸ்கரியும், பதக் ஷானை உறவி னர் மிர்சா சுலைமானும் நிர்வகித்தார்கள். இந்த சகோதரர்களின் சதியாலும், ராஜதுரோகத்தாலும் மொகலாயப் பேரரசு ஆரம்பத்திலேயே நிலை குலைந் தது.  பாபரை விட திறமை குறையவராக இருந்தார். ஹுமாயுனின் தாராள குணமும், தாட்சன்யமும் அவரின் மிகப்பெரிய குறையாக இருந்தது. அரசியல் சூழ்நிலை ஸ்திரமற்று இருந்தது. கிழக்கில் ஆஃப்கானில் ஷேர்கானும், மேற் கில் பஹதூர்ஷாவும் மொகலாய ஆட்சியை அப்புறப்படுத்த திட்டமிட்டனர். ஹுமாயுனின் சகோதரர்களோ தாங்கள் இருந்த பகுதிகளை சொந்தம் கொண் டாடுவதில் மும்முரமாய் இருந்தார்கள். சில தலைவர்களும், ஹுமாயுனால் பதவி அளிக்கப்பட்ட சில இராணுவ அதிகாரிகளும் ஹுமாயுனுக்கு எதிராகவே இருந்தார்கள்.
                     முஹம்மது ஸமான் என்பவனால் ஒரு குழப்பம் ஹுமாயுனுக்கு எதிராக உண்டானது. அதில் அவன் வெற்றி பெற்றிருந்தால் இந்தியாவின் சரித்திரம் வேறு மாதிரியாக இருந்திருக்கும். திட்டம் செயல்படு த்துவதற்கு முன்பாகவே வெளிப்பட்டு விட்ட்தால் அவன் தப்பியோடி குஜராத் தில் பஹதூர்ஷாவிடம் சேர்ந்து கொண்டான். அடுத்து சுல்தான் இப்ராஹிம் லோடியின் சகோதரன் அலாவுத்தீன் என்பவன் தன் மகன் டாடார்கானின் தலைமையில் 40,000 வீரர்களை ஹுமாயுனுக்கு எதிராக அனுப்பினான். பியா னாஹ் என்ற இடத்தில் சண்டை இடப்பட்டு தோற்கடிக்கப்பட்டு டாடார்கான் கொல்லப்பட்டான். காபூல், கந்தஹாரிலிருந்து ஹுமாயுனின் சகோதரர்கள் அஸ்கரியும், காம்ரானும் பெரும் படையுடன் திரண்டு வந்து ஹுமாயுனுக்கு ராஜ விருது வழங்க இருப்பதாக நாடகம் ஆடினர். ஆனால் ஹுமாயுன் முன் கூட்டியே ஒரு படையை அனுப்பி தான் காபூலுக்கு பதிலாக லம்கானையும், பெஷாவரையும் தன் பிரதேசத்தில் இணைத்துக் கொண்டதாக அறிவிக்கிறார். கம்ரான் அதைப் பொருட்படுத்தாமல் பஞ்சாபைக் கைப்பற்றி தனது காபூல் மற்றும் கந்தஹாருடன் இணத்துக் கொண்டார். சகோதரனுடன் போர் செய்ய விரும்பாத ஹுமாயுன் அமைதியாக இருந்தார். இது ஹுமாயுனின் மிகப் பெரிய தவறாகப் போனது. வடமேற்கில் மொகலாயப் படைகளுக்கு எதிராக ஒரு தடுப்புப்படையை உருவாக்க ஏதுவானது. டெல்லியில் இருந்து படை கந்தஹார் வந்தால் வழியிலேயே தடுக்கப்பட்டுவிடும்.
                 இதற்கிடையில் வளமானதும், பலமானதுமான குஜராத்திலிருந்து பஹதூர் ஷா, ஹுமாயுன் மீது படையெடுத்து வந்தார். பஹ தூர் ஷா ஹுமாயுனை சற்று குறைவாக மதிப்பிட்டார். ஹுமாயுன் பலமான பீரங்கித் தாக்குதல் கொடுக்க பஹதூர் ஷா தப்பித்து போர்ச்சுகீசியர்களிடம் ஓடி டையூ என்ற இடத்தில் அடைக்கலம் ஆனார். ஹுமாயுன் குஜராத் மற்றும் மால்வாவின் பெரும் பகுதியை தன் பிரதேசத்துடன் இணைத்துக் கொண்டார். வெற்றிபெற்ற பகுதிகளை நிரந்தரமாக தன்னுடன் வைத்துக் கொள்ள திட்டமிட தவறினார். பஹதூர் ஷா நம்பகமான இமாத் உல் முல்க் என்னும் தளபதியின் கீழ், போர்ச்சுகீசியர்களின் உதவியுடன் ஒரு படையை ஏற்பாடு செய்தார். இதை அறிந்த ஹுமாயுன் முன்னேறிச் சென்று இமாத் உல் முல்கை விரட்டினார். தன் சகோதரர் அஸ்கரியின் அதிகாரத்தில் குஜராத்தை விட்டார். அஸ்கரியின் நடவடிக்கைகள் அவரின் அதிகாரிகளுக்கே பிடிக்காது. சரியான சந்தர்பத்திற் காக காத்திருந்த பஹதூர் ஷா அஹமதாபாத்தின் மீது படையெடுத்து தான் இழந்த பகுதிகளை மீட்டார். ஹுமாயுன் மாண்டுவுக்கு சென்றதால் மால்வா வும் இழக்கப்பட்டது. ஆனால், பஹதூர் ஷாவால் ஆளமுடியாமல் துரதிஷ்ட வசமாக கடலில் தவறி விழுந்து இறந்து போனார். இதற்கிடையில் ஷேர்கான் சௌஸா என்ற் இடத்தை வென்று தன்னை “ஷேர் ஷா” என்று அழைத்துக் கொண்டார். ஹுமாயுனை கனாஜ் என்ற இடத்திலும் படுதோல்வி அடையச் செய்தார். இந்த தோல்விகள் ஹுமாயுனை இந்தியாவை விட்டு விரட்டியது. சர் ஹிந்த் பகுதிக்குச் சென்ற ஹுமாயுனை, இவரால் பாசமாகக் கவனிக்கப் பட்ட அவரது சகோதரர்களே பாதுகாப்பளிக்க மறுத்துவிட்டனர்.
          இந்த சூழ்நிலையில் ஷெய்க் அலி அக்பர் ஜாமி என்பவரின் மகள் ஹமீதா பானு பேகம் என்பவரை திருமணம் செய்து கொண் டார். ஜோத்பூரின் ராஜா இருபத்தைந்தாயிரம் ராஜ்புத் இராணுவ வீரர்களை தந்து உதவுவதாக வாக்களித்ததின் பேரில் ஹுமாயுன் அவரிடம் சென்றார். ஆனால் ராஜாவும் ஏமாற்றினார். இறுதியாக அமர்கோட் என்ற இடத்திற்கு சென்றார். அங்கு ராணா பிரசாத் ஹுமாயுனுக்கு நம்பிக்கை அளித்து தட்டா மற்றும் பக்கரை தாக்குவதற்கு உதவுவதாகக் கூறினார். இது மீண்டும் ஹுமா யுன் இந்தியாவின் பேரரசர் ஆவதற்கு சந்தர்பத்தைத் தந்தது. இந்த தருணத்தில் ஹுமாயுனுக்கு அக்பர் என்ற மகன் பிறந்தார். ராணா பிரசாதின் உதவியுடன் பக்கரை தாக்கினார். இடையில் ராஜ்புத் வீரர்களுக்கும், ஹுமாயுனின் வீரர்களு க்கும் இணக்கமில்லாமல் போக, ஹுமாயுனின் வீரர்கள் தனிமைப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக பக்கரின் ஆட்சியாளர் போரினால் தளர்ந்து சமாதானத்திற்கு உடன்பட்டார். சமாதானத்தின் அடையாளமாக ஹுமாயுனுக்கு முப்பது படகு களும், பத்தாயிரம் மிஷ்கால்களும், ஆயிரம் மூட்டை தானியங்களும், முன் னூறு ஒட்டகங்களும் கிடைத்தன. அத்தனையும் எடுத்துக் கொண்டு கந்தார் செல்ல திட்டமிட்டார். ஆனால் அந்த பகுதி முழுவதும் சகோதரர்கள் காம்ரான், அஸ்கர் மற்றும் ஹிந்தால் வசமிருந்தால் பாதுகாப்பிருக்காது என கருதி பெர் ஷியா செல்ல முடிவெடுத்து ஷாவுக்கு தெரியப்படுத்தினார். தனது ஒரு வயது மகன் அக்பரை பிரிந்து பெர்ஷியா செல்ல ஹுமாயுன் முடிவெடுத்தார். பெர் ஷியாவின் ஷா ஹுமாயுனுக்கு ராஜ வரவேற்பு கொடுக்க வேண்டி தன் அதி காரிகளுக்கு உத்தரவிட்டார். பெர்ஷியாவின் ஷா ஷியா பிரிவு கொள்கை கொண்டவராக இருந்ததால், சுன்னிப் பிரிவு ஹுமாயுனையும் ஷியாவுக்கு மாறும்படி வற்புறுத்தினார். ஹுமாயுனின் உடனிருந்தவர்களும் ஆலோசனை கூறியதால் ஷியா பிரிவுக்கு மாற ஒப்புக் கொண்டார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஷா காபூல், கந்தார் மற்றும் பொகாரா ஆகியவற்றை வெல்ல ஹுமா யுனுக்கு இராணுவ உதவி அளிப்பதாக ஒப்புக் கொண்டார்.
இடைப்பட்ட ஷேர் ஷா சூரியின் ஆட்சி                              
                                                    வெற்றிபெற்ற ஷேர் ஷா சூர் டெல்லியைக் கைப்பற்றி ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஆண்டார். ஷேர் ஷாவின் உண்மைபெயர் ஃபரீத். இவர் 1486 ல் ஹிசார்ஃபிரோஸ் என்ற இடத்தில் பிறந்தார். இவர் தந்தை பெயர் ஹசன். ஹசனுக்கு நான்கு மனைவிகள். ஷேர் ஷா சிறுவயதில் மாற்றாந்தாய் கொடுமைகளை அனுபவித்தார். தந்தை ஹசன் மகன்களிடம் பாசமற்று இருந் தார். ஃபரீத் என்ற ஷேர்ஷா வீட்டைவிட்டு விலகி, ஜான்பூர் என்ற இடத்தில் தந்தையின் நண்பர் பீஹாரின் கவர்னராய் இருந்த ஜமால் கான் என்பவரிடம் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அரபி மற்றும் பெர்ஷிய மொழிகளைக் கற்றார். ஷேர்ஷாவின் திறமைகளை அறிந்த கவர்னர் ஜமால்கான் ஹசனிடம் பிள்ளை யிடம் கனிவாக இருக்க கேட்டுக்கொண்டார். திரும்ப வந்த மகன் ஃபரீதுக்கு ஹசன் நிர்வாகத்தில் வேலை கொடுத்தார். இவரின்நிர்வாகம் வெகு சிறப்பாக இருந்தது. 1519 ல் மாற்றாந் தாய்களின் பிரச்சினையால் அந்த வேலையிலிரு ந்து திரும்பிவர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். பீஹார் சென்று தரியா கான் லோஹானியின் மகன் கவர்னர் பஹார்கானிடம் வேலைக்குச் சேர்ந்தார். 1522 லிருந்து 1526 வரை ஃபரீத் பஹார்கானிடம் மிகவும் சிறப்பாக சமூக மற்றும் வருவாய்துறையில் பணியாற்றினார். இயற்கையாக இவருக்கிருந்த வேட்டை யாடும் திறமையால் ஒரு முறை புலி ஒன்றைக் கொன்றதால் “ஷேர்கான்” என்ற சிறப்புப்பெயர் பெற்றார். தனது எஜமானரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட் டதால் ராஜினாமா செய்துவிட்டு, பாபர் அவர்களிடம் பணிக்குச் சேர்ந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக