செவ்வாய், 23 ஜூன், 2015

அய்யுபிட்கள் வரலாறு 2

அல் காமிலுக்கும், அல் முஃஅஸ்ஸிமுக்கும் இடையில் அதிகாரத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இருவரும் சிஸிலியின் மன்னர் இரண்டாம் ஃப்ரெடெரிக் முன் சமாதானம் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டனர். இதற்குள் 1227 ல் முஃஅஸ்ஸிம் மரணமடைந்தார். ஃப்ரெடெரிக் ஆறாம் சிலுவைப்போருக்கு தயாரானார். அல் காமில் ஜெருசலம் மற்றும் அனைத்து புனித இடங்களையும் விட்டுக் கொடுத்து விடுவதாக அடுத்த பத்தாண்டுகளுக்கு அமைதி ஒப்பந்தம் போட்டார். அதில் கோவில் பகுதி, டோம் ஆஃப் ராக், அக்ஸா மசூதி ஆகியவை முஸ்லீம்கள் வசமிருக்கும் என்றும் முடிவானது. அவர்களுக்கு உண்டான புனித பகுதிகளை தனி அதிகாரிகளை வைத்து அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். அல் காமில் 1238 ல் மரணமடைந்தார். அவருக்குப் பிறகு அவர் மகன்கள் அஸ் ஸாலிஹ்ஹும், இரண்டாம் அல் ஆதிலும் எகிப்தையும், சிரியாவையும் ஆண்டார்கள். அய்யுபிட் பேரரசில் கடுமையான உள்நாட்டுப் போர் நிலவியது. இதற்கிடையில் 1239 ல் ஃப்ரெடெரிக்குடனான அமைதி ஒப்பந்தம் முடிவடைய ஜெருசலம் அய்யுபிட் வசமானது.   
                        அல் காமில் இஸ்லாமிய முறையில் போரிட்டார். சிலுவைபோரில் ஃப்ராங்க்ஸ்கள் தோல்வி அடைந்த போது, படைகளுக்கு உணவளித்ததாக ஆலிவர் ஷோலஸ்டிகஸ் புகழ்ந்தார். அவர்களின் பெற்றோர்களும், மகன்களும், மகள்களும், சகோதர, சகோதரிகளும் எங்கள் கையால் இரக்கமின்றி சாகடிக்கப்பட்டார்கள். அவர்களின் உடமைகளைப் பறித்து கொண்டு நிர்வாணமாக துரத்தி னோம். ஆனால் சுல்தான் எங்கள் படைகளுக்கு உணவளித்தார். இது இறைவனிடமிருந்து வந்த உதவியா கவே கருதுகிறோம் என்றார்.
                            சைஃபுத்தீன் அல் மாலிக் அல் ஆதில் அபுபக்கர் என்ற் இரண்டாம் ஆதில் 1238 ல் எகிப்து அய்யுபிட் சுல்தானாக ஆட்சியில் அமர்ந்தார். இரண்டு ஆண்டுகளே ஆண்ட இவர் சகோதரர் அஸ் ஸாலிஹின் புரட்சியால் சிறை பிடிக்கப்பட்டு, எட்டாண்டுகள் சிறையிலிருந்தே மரண மடைந்தார். பின் ஆட்சிக்கு வந்த அஸ் ஸாலிஹ் 1221 ல் ஐந்தாம் சிலுவைப் போரில் பணயக்கைதியாக ப்ரெய்னியின் ஜானிடம் இருந்தார். பின்னர் அல் ஜஸீராவில் விடுவிக்கப்பட்டார். 1234 ல் எகிப்தில் இவரால் மம்லுக்குகளுடன் குழப்பம் வர டமாஸ்கஸின் அதிபராக தந்தை இவரை அனுப்பினார். அங்கிருந்து இவர் சிறிய தந்தை அஸ் ஸாலிஹ் இஸ்மாயில் விரட்ட ஜஸீராவில் கவாரிசிம்களிடம் அடைக்கலமானார். பின் சில நாளில் டமாஸ்கஸைக் கைப்பற்றி தனது பகுதிகளை பெரிதாக்கினார். அப்போது சகோதரரை நீக்கக் கோரி எகிப்திலிருந்து உதவி கோர, எகிப்து வந்து சுல்தான் ஆனார். டமாஸ்கஸில் மீண்டும் அஸ் ஸாலிஹ் இஸ்மாயில் ஆட்சியைப் பிடித்தார். அஸ் ஸாலிஹ் இப்போது தன்னை எகிப்துக்கு அழைத்தவர் களைக் கூட நம்பத்தயாராய் இல்லை. மத்திய ஆசியாவில் மங்கோலியர்கள் நுழைந்த பிறகு, பரவலாக கிடைத்த கிப்சக் (மம்லுக்) அடிமைகளை படைக்கு வாங்கினார். இவர் மட்டுமே மம்லுக் அடிமைகளை வாங்கிய முதல் அய்யுபிட் சுல்தான் அல்ல. ஆனால், அஸ் ஸாலிஹ் மட்டுமே மம்லுக்குகளை முழுமை யாக நம்பினார். அவர்களை ஆயிரம் பேர் கொண்ட ‘பஹ்ரிய்யாஹ்’ என்று பிரித்து நைல் நதியின் ரவ்தாஹ் தீவில் வைத்தார். இன்னொரு குழுவை ‘ஜம்தாரீயாஹ்’ என்று பிரித்து தன் சொந்த பாதுகாப்புக்கு வைத்துக் கொண்டார். பலகாலமாக அடிமையாகவே இருந்த மம்லுக்குகள் அருமையான சந்தர்ப்பம் வாய்க்க அஸ் ஸாலிஹை நீக்கி விட்டு அய்யுபிட் பேரரசுக்கு முடிவு கட்டினார்கள்.
                            மம்லுக்குகளுக்கு இது இரு சரித்திரப் பதிவாகிப் போன நிகழ்ச்சி. ஆட்சியைப் பிடித்த மம்லுக்குகள் தங்களை பாஹ்ரி மம்லுக் என்று சொல்லிக் கொண்டார்கள். ‘அஸ் ஸாலி ஹால் அமைக்கப்பட்ட ‘பஹ்ரிய்யாஹ்’ மம்லுக்குகள் சில சமயம் ‘சாலிஹிய்யாஹ்’ என்று சொல்லிக் கொண்டார்கள். அல் காமிலால் ஃப்ரெடெரிக்கிடம் இழக்கப்பட்டிருந்த ஜெருசலத்தை அஸ் ஸாலிஹ் சிரியா மற்றும் பாலஸ்தீன் வழியாக கவாரிஸ்மிகளுடன் உதவியுடன் கைப்பற்றினார். சிலுவைப் படையுடன் கூட்டு வைத்திருந்த அஸ் ஸாலிஹ் இஸ்மாயிலையும், கவாரிஸ்மிகளின் உதவியுடன்  ‘லா ஃபோர்பி’ போரில் வெற்றி கொண்டார். அஸ் ஸாலிஹ் 1245 ல் டமாஸ்கஸைப் பிடித்த போது தான் பாக்தாத் கலீஃபா அல் முஸ்தஃஸிம் மூலம் ‘சுல்தான்’ என்று அழைக்கப்பட்டார். கவாரிஸ்மிகள் எப்போதும் ஆபத்து என்றும், கையாள்வது சிரமம் என்றும் கருதிய அஸ் ஸாலிஹ் ஹாம்ஸ் பகுதியில் அவர்களின் தலைவரைக் கொன்று, சிரியா மற்றும் பால்ஸ்தீனில் மிச்சமிருந்த அவர்களின் அடையாளங்களை அழித்தார். அஸ் ஸாலிஹ் சிரியாவில் சண்டையில் இருந்த போது சிலுவைப் போராளிகள் நுழைந்து விட்டதாக செய்திவர, எகிப்து திரும்பி அல் மன்சூராவில் முகாமிட்டார். அங்கு அவரின் கால்கள் முட்டுக்கால் வரை அழுகி விட்டிருக்க நோய்வாய்ப்பட்டார். தனக்குப் பிறகு, அல் முஃஅஸ்ஸம் துரன்ஷா சரியான ஆட்சியாளராக இருக்க மாட்டர் என்று கருதிய அஸ் ஸாலிஹ் அவரை எகிப்தை விட்டு தூரப்பிரதேசமான ஹசன் கெய்ஃபில் வைத்திருந்தார்.  அஸ் ஸாலிஹ் இறந்து போக அவர் மனைவி ஷஜர் அத் துர் இறப்புச் செய்தியை துரன் ஷா வரும் வரை ரகசியமாக வைத்திருந்தார்.
                        துரன்ஷா அல் முஃஅஸ்ஸிம் ஓராண்டு தான் ஆட்சியில் இருந்தார். தந்தை அஸ் ஸாலிஹால் எகிப்தின் அரசியலுக்கு நிராகரிக்கப்பட்டு, தள்ளி வைக்கப்பட்டார். தந்தை இறந்த பிறகு, பஹ்ரி மம்லுக் கமாண்டர் ஃபரீசுத்தீன் அக்டாயால் ஹசன்கெய்ஃபிலிருந்து அழைத்து வரப்பட்டார். அக்டாய் 1249 டிசம்பரில் 50 வீரர்களுடன் அவரை அழைத்துக் கொண்டு, பதவிப்போட்டியில் இருப்பவர்கள் கண்ணில் படாமல் ரகசியமாக 1250 ஜனவரியில் டமாஸ்கஸின் குஸைர் கிராமத்திற்கு வந்தார்கள். அங்கேயே அவர் சுல்தானாக அறிவிக்கப்பட்டார். துரன்ஷா ஊர் தலைவர்களுக்கும், தன் பாதுகாப்புக்கும் பெரும் பணம் செலவு செய்தார். எகிப்தின் அல் மன்சூராவுக்கு வந்த அவர் தந்தையின் பாஹ்ரி மம்லுக்கு களை நீக்கிவிட்டு, தனியாக தனக்கென மம்லுக்குகளை நியமித்துக் கொண்டார். கருப்பு மம்லுக் அடிமை களை நம்பகமான பதவியில் வைத்தார். ஒரு கருப்பு அரவாணியை உஸ்ததராக (தலைமை செயலாளர்) வும், இன்னொரு கருப்பரை அமீர் ஜன்தார் (தலைமை அரசு பாதுகாவலர்) ஆகவும் நியமித்தார்.
                        துரன்ஷா சரித்திர ஆசிரியர்களால் நல்ல விதத்தில் மதிப்பிடப்பட வில்லை. குறைந்த புத்திசாலித்தனமும், விரைவில் உணர்ச்சிவசப்படுபவராகவும் இருந்தாராம். ஒருமுறை கத்தியில் மெழுகுவர்த்திகளை வேகமாக நறுக்கிக் கொண்டே, ‘இதுபோல் தான் பாஹ்ரி மம்லுக்குகளை கையாள் வேண்டும்’ என்றாராம். சிலுவைப்போராளிகளிடமிருந்து டமெட்டாவை மீட்டார். பைபர்ஸ், துரன்ஷாவைத் திட்டமிட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. 1250 ல் துரன்ஷா பெரும் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது பைபரும், சில மம்லுக்குகளும் விரைந்து அவரைக் கொல்ல முயர்ச்சித் தார்கள். வாளொன்று அவர் கையைப் பிளக்க, தப்பித்த துரன்ஷா நைல் நதி அருகிலிருந்த கோபுரத்தில் ஏறிக் கொண்டார். அதைக் கவனித்த மம்லுக் ஒருவன் கோபுரத்திற்கு தீ வைத்தான். தீயிலிருந்து தப்பிக்க ஆற்றை நோக்கி ஓடிய துரன்ஷாவை மம்லுக் ஒருவன் இடுப்பில் வெட்ட, ஆற்றில் விழுந்த சுல்தான் துரன்ஷா உயிர் பிச்சைக் கேட்க விடாத மம்லுக்குகள் அம்புகளை எறிந்தார்கள். பின்னர் அவரை வெளியில் இழுத்து தூக்கிலிட்டார்கள். ஃபரிசுத்தீன் அக்டாய் தான் துரன்ஷாவின் நெஞ்சைப் பிளந்து இருதயத்தை வெளியே எடுத்தாராம். பின்னாளில் இதே அக்டாய் பைபரால் கொல்லப்பட்டாராம்.
                               அதன் பிறகு, மம்லுக்குகளுக்கு சிரியா அய்யுபிட்களிடமிருந்து எதிர்ப்புவர ஆறு வயது குழந்தையான அல் அஷ்ரஃப் மூஸாவை சுல்தானாக பாஹ்ரி மம்லுக் இஸ்ஸதீன் அய்பக் அறிவித்தார். அல் அஷ்ரஃபைப் பற்றி முழு விவரம் சரித்திர ஆசிரியர்களுக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் இவர் அலிப்போவின் ஆட்சியாளராக இருந்த அஸ் ஸாஹிர் காஸியின் கொள்ளுப் பேரர் என்று சொல்லப்படுகிறது. ஏமனில் அய்யுபிட் ஆட்சியாளராக இருந்த அல் மஸ் ஊதின் வழி வந்தவர் என்றும் சொல்லப்படுகிறது. இதன் பிறகு, சிரியாவிலிருந்த அய்யுபிட் ஆட்சியாளர் அந் நாசிர் யூசுஃப் எகிப்தின் மீது போர் தொடுக்க, 1253 ல் எகிப்து மம்லுக்குகள் வசமானது. ஓராண்டு இடைவெளியில் இஸ்ஸத்தீன் அய்பக், சுல்தான் சிறுவர் அல் அஷ்ரஃபை அவரின் அத்தையிடமே அனுப்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக