ஞாயிறு, 14 ஜூன், 2015

உலகின் முதல் இஸ்லாமிய ஆட்சி வரலாறு 1

 உலகின் முதல் இஸ்லாமிய ஆட்சியின் வரலாறு, அல்லாஹுத்தாலாவின் பரந்த இந்த பூமியில் இரத்தமின்றி ஒரு சிறிய புள்ளியாக ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மூலமாக மதீனா என்ற அமைதியான நகரத்தில் துவங்குகிறது. இரண்டாம் நூற்றாண்டில் அரேபியாவில் ஹிஜாஸ் பகுதியில் யத்ரிப் நகரின் உள்ளேயும், வெளியேயும் து நுவாஸ் (யூதர்களின் தூ நுவாஸ் என்பவன் யூத போராளி. இவன் கடைசி காலத்தில் குதிரையில் சென்று செங்கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக வரலாறு) என்னும் தலைவர்கள் போலுள்ளவர்கள் கீழ் யூதர்கள் பரவுகிறார்கள். இந்த யூதர்கள் கிறிஸ்துவத்தை பலமாக எதிர்ப்பவர்கள். 6 ம் மற்றும் 7 ம் நூற்றாண்டுகளில் யூத இனம் கனிசமாகக் கூடுகிறது. இஸ்லாமுக்கு முன் இவர்கள் பனூ நதிர், பனூ கைனுகா மற்றும் பனூ குரைஸா என்று மூன்று பெரிய பழங்குடியினமாக இருந்தார்கள். இதில் பனூ நதிர் குலம்தான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எதிர்த்தது. மற்ற இரு குலங்களும் இஸ்லாமியர்களுடன் அனுசரித்து போயினர். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யத்ரிப் வந்த காலத்தில் மேலும் சிறு சிறு யூத குலங்களாக பனூ அவ்ஃப், பனூ ஹரித், பனூ ஜுஷாம், பனூ அல்ஃபகீர், பனூ நஜ்ஜார், பனூ ஸஃஇதா மற்றும் பனூ ஷுதைய்பா போன்றவையும் இருந்தன.
                                  பெர்ஷிய பேரரசின் காலத்தில் பெர்ஷிய மன்னர் ஷாவுக்கு வரி வசூலித்து கொடுப்பவர்களாக பனூ குரைய்ஸா குலத்தினர் இருந்தனர். ஏமனிலிருந்து பிறகு யத்ரிப் நகர் வந்த இரு குலங்களான பனூ அவ்ஃப் (பனூ ஆஸ்) மற்றும் பனூ கஸ்ரஜ் ஆகியோர்களால் சூழ்நிலைகள் மாறின. முதலில் யூத ஆட்சியாளர்களுடன் சுமுகமாக இருந்த இந்த குலங்கள் பிறகு, கலவரம் செய்து சுதந்திரமாக ஆனார்கள். 5 ம் நூற்றாண்டில் யூத ஆட்சியாளர்கள் பனூ அவ்ஃப் மற்றும் பனூ கஸ்ரஜ் வசமிருந்த பகுதிகளின் அதிகாரத்தை இழந்தார்கள். இதனால் யத்ரிப் நகரில் இந்த இரு குலங்களின் பலம் அதிகமானது. மற்ற யூத குலங்கள் இவர்களின் கீழ் இருந்தார்கள்.
                              
                          அரேபியாவின் வாணிப வழிகள் ஏமன், அரேபியா, சிரியா மற்றும் ஈராக்கை இணைத்தது. தொடர்ந்து ரோமர்களுக்கும், பெர்ஷியர்களுக்கும் போர் நடந்து கொண்டிருந்ததால் அந்த பகுதிகள் எப்போதும் பதட்டத்திலேயே இருந்தன. புதிய இறுதி நபி வரவிருப்பதை எதிர்பார்த்தும் சில தீவிர யூத, கிறிஸ்தவர்களும் யத்ரிபில் குடியேறினர். அதில் பஹிரா என்ற துறவியும், சல்மான் (ரலி) என்ற பெர்ஷியரும் அடங்கும். கொஞ்சம் சல்மான் (ரலி) அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு தொடர்வோம். சல்மான் (ரலி) அவர்கள் ஈரானின் இஸ்ஃபஹான் நகரில் ஸோரோஸ்ட்ரிய மதசார்புள்ள குடும்பத்தில் பிறந்தவர். பின் சிறு வயதிலேயே கிறிஸ்துவராகி மோஸுலின் பிஷப் ஒருவருடன் உண்மையான இறைவனை அறிந்து கொள்ள அவருடன் சிரியா நகரம் சென்றார். அப்படியே அந்த குழு செங்கடலின் வடபகுதி அகாபா நகரம் வந்தது. பிஷப் இறந்து போய்விட பயண குழுவினர் சிறுவர் சல்மான் (ரலி) அவர்களை ஒரு யூதரிடம் அடிமையாக விற்றுவிடுகிறது. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வருகைக்கு முன் சல்மான் (ரலி) அவர்கள் பனூ குரைஸாவின் யூதர் ஒருவரிடம் கைமாறுகிறார். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் இறுதி தூதர் என்பதை முந்தைய வேதங்கள் மூலம் புரிந்து கொண்ட சல்மான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுகிறார். அஹ்ஸாப் போரில் எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ள மதீனா நகரைச் சுற்றி அகழி தோண்டும் அறிவுரையை இவர்தான் கூறினார். சல்மான் ஃபரீஸ் என்று அறியப்படுபவர்.
                          யத்ரிப் நகருடனான ஏமனியர்களின் பகை கடைசி ஏமன் மன்னர் ஹிம்யரிட் பேரரசின் காலத்தில் இருந்ததாக புராதன முஸ்லீம் ஆய்வாளர் இப்ன் இஸ்ஹாக் தெரிவிக்கிறார். ஒருமுறை ஏமன் மன்னர் பயணத்தின் போது யத்ரிப் நகரை ஒட்டியுள்ள பள்ளத்தாக்கைக் கடக்கும் போது, அருகில் குடியிருந்தோர் தவறுதலாக மன்னரின் மகனைக் கொன்று விடுகிறார்கள். இதனால் கோபமடைந்த மன்னர் காரணமானவர்களைக் கொன்று அவர்களின் பேரிச்ச தோப்புகளை அழித்து விடுவதாக எச்சரிக்கிறார். அப்போது, பனூ குரைஸாவைச் சேர்ந்த இரு ரப்பிகள் (யூத பாதிரிகள்) மன்னரை மன்னிக்கும் படியும், இந்த பூமி எங்கள் வேத நூல் தோராவில் கூறப்பட்டுள்ள இறுதி தூதர் வந்து தங்க இருக்கும் பூமி என்று கூறி தடுத்து விடுகிறார்கள். உண்மையும் அதுதான் யூத மதத்தில் மிகவும் பற்றுள்ள பனூ நதிர், பனூ கைனுகா மற்றும் பனூ குரைஸா குலத்தினர் என்றாவது ஒருநாள் வரப்போகும் இறுதி தூதருக்காகவே யத்ரிப் நகரில் குடியிருந்தனர். 
                                இதன் பிறகு, ஏமனைட் மன்னர் நகரத்தை ஒன்றும் செய்யாமல் யூத மதத்தைத் தழுவுகிறார். பின் மன்னர் அந்த ரப்பிகளுடன் மக்கா நகரம் சென்று, பின் ஏமனுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு அந்த ரப்பிகள் எரியும் தீயில் நுழைந்து அற்புதம் காட்ட ஏமன் மக்களும் யூத மதத்தைத் தழுவுகின்றனர். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யத்ரிப் நகருக்கு ஹிஜ்ரா வரும் சமயத்திலும் பனூ அவ்ஃப் மற்றும் பனூ கஸ்ரஜ் குலத்தினரிடையே பகை இருந்தது. அந்த பகை 120 ஆண்டுகாலமாக அவர்களிடையே இருந்தது. பனூ நதிர் மற்றும் பனூ குரைய்ஸா குலத்தினர் பனூ அவ்ஃப் குலத்திற்கு ஆதரவாகவும், பனூ கைனுகா குலத்தினர் பனூ கஸ்ரஜ் குலத்தினருக்கு ஆதரவாகவும் இருந்தனர். அவர்களிடையே நான்கு போர்கள் நிகழ்ந்தன. அதில் மிகவும் கடுமையான போர் “பு அத் போர்” ஆகும். இது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யத்ரிப் வருவதற்கு சில ஆண்டுகள் முன்பு நடந்தது. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யத்ரிப் வருவதற்கு முன் பனூ கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த அப்துல்லாஹ் இப்ன் உபைய் என்பவர் தான் யத்ரிப் நகரில் புகழோடும், மரியாதைக்குரியவருமாக இருந்தார். பின்னாளில் யத்ரிப் நகரைச் சேர்ந்தவர்கள் ஒரு குழுவாக அகாபா என்ற இடம் சென்று ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும், அவரின் சிறிய நம்பிக்கையாளர்களையும் யத்ரிப் வந்து அவர்களிடையே எழுந்துள்ள குலப் பகைக்கு நடுவராக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்கள்.
                                 622 ம் வருடம் மக்காவின் குரைஷி குலத் தலைவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குலமும் குரைஷி குலம்தான்) ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கொல்வதற்கு திட்டமிடுகிறார்கள். இதனால் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை யத்ரீபைச் சேர்ந்த அவ்ஃப் மற்றும் கஸ்ரஜ் குலத்தின் பெரியவர்கள் மற்றும் இரு பெண்களும் அக்காபாவில் சந்தித்து தங்கள் குலத்தின் பகைக்கு மத்தியஸ்தராக வந்து இருக்க வேண்டியிருந்தனர். அவர்கள் அனைவரும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு  நம்பிக்கை அளிக்கும் வண்ணம் அங்கேயே இஸ்லாம் மதத்திற்கும் மாறினர். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யத்ரிப் வந்து தங்குவதால் அவ்ஃப் மற்றும் கஸ்ரஜ் குலத்தினரின் நீண்ட நாள் பகையும் தீருமென்று நம்பினார்கள். இறுதியாக அவர்களுக்குள் நடந்த பு அத் போரில் இரு குலமும் பலமாக பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், அவரைச் சேர்ந்தவர்கள், பெண்களுக்கும் மக்காவாசிகளால் எந்த ஆபத்து வந்தாலும் பாதுகாப்பதாக உறுதியும் அளிக்கிறார்கள்.
                                 622 ம் வருடம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், மக்கா நம்பிக்கையாளர்கள் 70 பேரும் யத்ரிப் நகருக்கு புலம் பெயர்ந்தார்கள். இந்த இடப்பெயர்ச்சி அல்லாஹுத்தாலாவின் அருளால் வரலாற்றில் இன்றளவில் மதம் மற்றும் அரசியல் அமைப்பை புரட்டிப் போட்டது. அவ்ஃப் மற்றும் கஸ்ரஜ் குலத்தினரையும் சில உள்ளூர் யூத பழங்குடியினரையும் இஸ்லாமுக்கு மத மாற்றம் செய்தது. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கஸ்ரஜ் குலத்தினரின் ஆதரவுடன் யத்ரிப் நகரின் பரிபாலன தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தனக்கு ஆதரவளித்து இஸ்லாத்துக்கு மதம் மாறிய யத்ரிப் நகர மக்களை அவர்கள் யாராயிருந்தாலும் “அன்சாரி” (உதவியாளர்கள்) என்று அன்புடன் அழைத்தார்கள். (அல்லாஹுத்தாலாவும் திருமறையில் அன்சாரி என்றுதான் கூறி இருக்கிறான்) மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்கள், மதீனாவிலிருந்த அன்சாரிகள் யூத குலத்தவர்கள் மற்றும் யூத பழங்குடிகள் அனைவரும் ஒரு மனதுடன் இணைந்து மதீனா நகரின் முழு கட்டுப்பாட்டையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒப்படைப்பதாகவும், அவர்களின் தீர்ப்புக்கு கட்டுப்படுவதாகவும் கையெழுத்திட்டு ஒப்பந்தம் செய்கிறார்கள். யத்ரிப் நகரம் “ மதீனத்துன் நபவீ” (தூதரின் நகரம்) என்று பெயரிடப்பட்டது. எதிர்பார்த்த விதமாக யூத குலங்களுக்கிடையே அமைதி ஏற்பட்டது. மக்கா முஹாஜிர்களுக்கும், மதீனா அன்சாரிகளுக்கும் இடையேயும் பலமான உறவுகளை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோற்றுவித்தார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், மதீனாவாசிகள் மற்றும் யூதர்களுக்குமான எழுதப்பட்ட நீண்ட ஒப்பந்தம் வெளியிடப்பட்டிருக்கின்றன். அது நமக்கு இங்கு தேவையில்லை என்று கருதுகிறேன்.
                                 ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எதிரிகளான குரைஷியர்களுடன் நடந்த பத்ர் போர் மிகவும் முக்கியமானது. இஸ்லாத்தின் எதிரி அபு சுஃப்யான் இப்ன் ஹர்ப் முப்பதுக்கும் மேற்பட்ட கூட்டத்தினருடன் சிரியாவிலிருந்து மக்கா திரும்புகிறார் என்ற நம்பகமான செய்தி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கிடைக்கிறது. முதல் முறையாக அதிகப்படியான 313 வீர்ர்களுடன் மதீனாவின் இஸ்லாமியப்படையினர் செல்கின்றனர். அபு சுஃப்யானின் வாணிபக் குழு மதீனா நகரை நெருங்கும் முன் சில பயணிகள் மூலம் தங்களை எதிர்க்க ஒரு கூட்டம் தயாராய் இருப்பதை அறிந்து கொள்கிறார். உடனே சற்று தாமதப்படுத்தி தம் தம் என்னும் ஒரு நபர் மூலம் மக்காவுக்கு சென்று குரைஷிகளை உஷார் படுத்தி கூட்டி வர உத்தரவிடுகிறார். மக்காவிலிருந்து 900 லிருந்து 1000 க்குள் உண்டான பெரும் கூட்டம் அபு சுஃப்யானின் வாணிபக்குழுவைக் காப்பாற்ற வருகிறது. அதில் பிரபலமான குரைஷிகள் அம்ர் இப்ன் ஹிஷாம், வலித் இப்ன் உத்பா, ஷைபா மற்றும் உமய்யாஹ் இப்ன் கலாஃப் ஆகியோர் இடம் பெற்றனர்.
                           போர் துவங்கியதும் இஸ்லாமிய படையிலிருந்து அலி(ரலி), உபைதா இப்ன் அல் ஹரித்(ரலி), மற்றும் ஹம்ஸா இப்ன் அப்த் அல் முத்தலிப் ஆகியோர் களத்தில் இறங்கினர். இந்த போரின் வரலாறுகள் நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள் என்பதால், நாம் மேற்படி நகருவோம்.
                             625 ல் மக்காவின் தலைவராக இருந்த அபு சுஃப்யான் இப்ன் ஹர்ப் வழக்கமாக அருகிலிருந்த பைசாந்திய (ரோம) பேரரசுக்கு வரி செலுத்தி வந்தார். இந்த முறை உஹுத் போரை ஆரம்பித்து இஸ்லாமிய படை மீது தாக்க உஹுத் மலை வந்தார். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மதீனாவிலிருந்து படையுடன் வந்தார்கள். இடையில் துரோகம் செய்யும் விதமாகவும், ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு மாற்றமாகவும் மதீனாவின் பனூ கஸ்ரஜ் குல தலைவர் அப்துல்லாஹ் இப்ன் உபைய் தன் கூட்டத்துடன் போரில் கலந்து கொள்ளாமல் திரும்பிவிடுகிறார். சிறிய கூட்டமுள்ள வீரர்களுடன் போரிட வேண்டிய கட்டாயத்திற்கு இஸ்லாமிய படை ஆளாகிறது. நபிகளாரின் சொல்லை மீறிய மலைப்பகுதி வீர்ர்கள் போன்ற இந்த போரின் வரலாறும் நீங்கள் நன்கு அறிந்ததுதான். இந்த போரில் இஸ்லாமிய படை தோல்வியடைகிறது. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் காயமடைகிறார்கள்.
                             627 ல் மீண்டும் அபு சுஃப்யான் ஒரு படையுடன் மதீனா நோக்கி வருகிறார். அது அஹ்ஸாப் போர். மதீனாவாசிகள் நகரைக் காப்பாற்ற சல்மான் (ரலி) என்பவரின் ஆலோசனையின் பேரில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒப்புதலுடன் பெரிய அகழியை மதீனாவைச் சுற்றி தோண்டுகிறார்கள். இதனால் அபு சுஃப்யான் மதினாவை விட்டு திரும்பும் போது பனூ குரைய்ஸா குலத்துடன் இஸ்லாமிய படையை பின்னிருந்து தாக்குவதற்கு ஒரு ஒப்பந்தம் செய்கிறார். இது நபிகளாருடன் செய்து கொண்ட ஒப்பந்திற்கு மாற்றமாகும். இந்த போரின் வரலாறும் என்னருமை சமுதாயம் நன்கு அறியுமென்பதால் மேற்படி மேலே செல்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக