ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

அறிமுகம்



         அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு
என் பெயர் கூ. செ. செய்யது முஹமது. நான் ஏற்றுமதி இறக்குமதி துறையில் மேலதிகரியாக இருபதாண்டுகளுக்கும் மேலாக துபாயில் பணியாற்றிக் கொண்டி ருக்கிறேன். நாம் உலகளவில் இஸ்லாமிய மதத்தில் கொள்கைகள், ஐம்பெரும் கடமைகள், ஷரியா சட்டங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இது இந்த பூமிப்பந்தின் எந்த மூலைக்குப் போனாலும் நம்மை மாற்றிவிடாது. அதே சமயம் நாம் உலகளாவிய இஸ்லாமிய வரலாற்றை அறிந்து வைத்திருக்கிறோமா என்று பார்த்தால், மிக மிக சொற்ப அறிவே மிஞ்சிக் கிடக்கிறது.  இஸ்லாமிய ஆட்சி என்பது நபி (ஸல்) அவர்களால் மதீனாவிலிருந்து துவங்கப்பட்டது. உலகில் முதல்முறையாக தனது சொந்த பணத்தில் வழிபாட்டுத்தலம், கல்விக்கூடம் மற்றும் பாராளுமன்றம் அமைத்தது நமது நபிகள் நாயகம் தான்.
                                       நம் இந்திய நாட்டில் நாம் சரித்திரப்பாடம் எப்படி படிக்கிறோம் என்பது நீங்கள் அறிந்ததே. வாழும் நாட்டின் சரித்திரம் அறிவது கடமையே. அதே நேரத்தில் மதரீதியாக நபி (ஸல்) அவர்களால் துவக்கப்பட்ட இஸ்லாமிய ஆட்சியின் வளர்ச்சி, செழிப்பு மற்றும் சுருங்கிப்போன வரலாறுகளை நாமும், நமது வருங்கால சந்ததியும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. இந்த சரித்திரங்களை அரபு தேச குழந்தைகள் பள்ளியிலும், கல்லூரிகளிலும் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.  அதனாலேயே நாமும் அந்த இஸ்லாமிய ஆட்சி யார் யார் மூலம் எப்படியெல்லாம் ஆளப்பட்டது எப்படிப்பட்ட பேரரசுகளானது, எப்படி சுருங்கியது, தற்போதைக்கு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று உணருகிறேன். அதிகம்பேர், நபிகள் (ஸல்) அவர்கள், நான்கு நேர்மையான கலீஃபாக்கள், அலி (ரலி), காலித் பின் வலீத், அப்பாஸ் (ரலி) இன்னும் சிலரது சரித்திரம் மட்டும் அறிந்து வைத்திருக்கிறார்கள். நாம் வாழும் நாட்டிலோ சொல்லவே வேண்டியதில்லை. ஔரங்கஸேப் கலீஃபாக்களுக்கு இணையாக (அவர்களைப் போலல்ல இவர் இந்துக்களையும் இந்துக்களாகவே ஆளவேண்டிய கட்டாயத்திலிருந்தார்) ஆட்சி செய்தார் என்று அடுத்து வந்த ஆங்கிலேய சரித்திர ஆசிரியர்கள் சான்றளித்திருக்க இந்த மேதாவிகள் அவர் துரோகி போலவும், அக்பர் மாவீரன் நல்லவர் போலவும் (அக்பர் ராஜ புத்திர இந்து பெண்களை மணந்தார். அதனால், இந்துக்களுக்கான ‘ஜிஸ்யா’ வரியை நீக்கினார். இஸ்லாத்தையும், இந்து மதத்தையும் இணைத்து ‘தீனே இலாஹி’ என்ற புதிய மதத்தை தோற்றுவித்த காரணங்களால்) சரித்திரம் எழுதி தங்கள் புழு பூத்த மேனியை சொறிந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு கல்வி அமைச்சர் மாறும் போது இங்கு இஸ்லாமிய சரித்திரம் மட்டும் மாறுகிறது. இம்மைக்காக மட்டுமே வாழ்பவர்கள். நம் சமுதாயம் உலக இஸ்லாமிய சரித்திரம் அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் பிள்ளைகளையும் அறிந்திடச் செய்யுங்கள். அதில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. சிறு புள்ளியாக மதீனாவில் நபி (ஸல்) அவர்களால் இஸ்லாமிய மத ஆட்சி ஆரம்பித்து, கலீஃபாக்கள், உமய்யாக்கள், அப்பாஸிட்கள், செல்ஜுக்குகள், மம்லுக்குகள், அய்யுபிட்டுகள், ஓட்டோமான்கள், மங்கோலியர்கள், தைமூரியர்கள், மொகலாயர்கள் மற்றும் இப்போது இருக்கும் அமெரிக்க, மேற்கத்தியர்களின் விசுவாசிகளாகிப்போன இஸ்லாமிய நாடுகளாக எப்படி மாறிப்போனார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்குள்ளேயே எத்தனை துரோகம், எத்தனை கொலைகள் இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டே இதை எழுதுகிறேன்.
                                       திருக்குர்ஆனின் இறைவனின் சொல்லாலும், நபி(ஸல்)அவர்கள் மற்றும் நான்கு நேர்மையான (சரித்திரம் இவர்களை RIGHTFUL KHALIFAS) கலிஃபாக்களின் வழிகாட்டுதலாலும், உண்மையான ஈமான், ஜிஹாத் மற்றும் இறையச்சம் (தக்வா) மட்டுமே தாங்கி, காலில் செருப்புகூட அணியாமல், பல நாட்டு தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு உடைகள், வரைபடம் கூட இல்லாமல் இஸ்லாமிய படைகள் நிலம், நீர் என்று கடந்து ஸ்பெயின் வரை வென்று காட்டிய வீரம் அறிந்து கொள்வோம். ஒரு கட்டத்தில் ஐரோப்பியர்கள் முஸ்லீம்களுக்கு கடற்போர் தெரியாது என்று ஏளனப்படுத்தி, அவமானப்பட்ட சரித்திரத்தை தெரிந்து கொள்வோம். இன்று ஆயிரம் மைல்தாக்கக்கூடிய ஏவுகணைகள், சீறிப்பாயும் போர்விமானங்கள், வேவு பார்க்கும் சாட்டிலைட் வசதிகள், நவீன ஆயுதங்கள் இருந்தும் இஸ்லாமிய ஆட்சியாளர்களால் தங்கள் சொந்த நாட்டையே காப்பாற்றிக்கொள்ள முடியாத கேவலமான நிலைக்கு ஆளாகிவிட்டார்கள். காரணம் உண்மையான ஜிஹாத், இறையச்சத்தை மறந்து போனார்கள். வேதனை வேதனை சொல்லமுடியாத வேதனை.
                                          இந்த சரித்திரங்களில் வருடம் மற்றும் பெயர்குழப்பங்கள் இருந்தால் நான் பொறுப்பல்ல. ஒவ்வொரு நாட்டின் வரலாற்றுக்கேற்றவாறு ஒருவேளை மாறுதல் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் நிச்சயமாக சொல்லமுடியாது. இவைகள் ஆங்கிலத்திலிருந்து விக்கி, எகிப்து, துருக்கி, சிரியா மற்றும் பல வெப் ஸைட்டுகளிலிருந்து எடுத்து தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். இஸ்லாமிய கடமை மட்டும் போதும் இதெல்லாம் தெரிந்து என்ன செய்யப் போகிறோம் என்று எண்ணுபவர்கள் மாற்று சிந்தனைக்கு வழி கொடுக்காமல் சட்டென்று இதிலிருந்து விலகிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். முதலில் நீங்கள் படியுங்கள் உங்களுக்குப் பிடித்தால் மற்றவர்களுக்கு பரிந்துரையுங்கள்.
வஸ்ஸலாம்
கூ. செ. செய்யது முஹமது.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக