வியாழன், 14 ஆகஸ்ட், 2014

ஸலாவுத்தீன் வரலாறு 11பாகம் : 21
ஸலாவுத்தீன் மாபெரும் போருக்கு தயாராவதை அறிந்த எதிரிகள் தாங்களும் தயாராகி டைபீரியஸ் வந்தனர். இரு படைகளும் ஹத்தீன் என்ற இடத்தில் சந்தித்தன. காலையின் வெயில் கடுமையாக இருந்தது. குடிநீர் ஆதாரம் முஸ்லீம்கள் வசம் இருந்ததால் எதிரிகள் தாகத்தில் தவித்தனர். ஸலாவுத்தீன் அவர்களைத் தாக்கி சிதறடித்தார். எதிரிகள் தாக்குதலின் தீவிரத்தினாலும், தாகத்தினாலும், பயத்தினாலும் அவமானகரமான தோல்வியைத் தழுவினர். பத்தாயிரம் சிலுவைப்படை போராளிகளைக் கொன்று, எண்ணற்றவர்களை சிறைப்பிடித்தார் அக்ராவின் பிஷப்பைக்கொன்று அவரின் சிலுவையைக் கைப்பற்றினார். எதிரிகளுக்கு மாபெரும் இழப்புண்டாக்கிய தோல்வி இது. எஞ்சியவர்கள் 150 குதிரை வீரர்களும், ஜெருசலத்தின் மன்னன் மட்டுமே. அவர்களால் அதிக தாகத்தினாலும், பயத்தினாலும், களைப்பினாலும் சண்டையிட முடியவில்லை. அவர்களை ஸலாவுத்தீன் சிறை பிடித்தார். சண்டைக்கு காரணமான ரெஜினால்டும் கைது செய்யப்பட்டான். சுல்தான் ஸலாவுத்தீன் தனது ஆதரவாளர்களுடனும், நல்ல மனம் படைத்தவர்களுடனும் கூடாரத்தில் கூடி வெற்றி தந்த இறைவனை வணங்கினார். பின் கூடி அவர்களுடன் ஆலோசனை செய்தார்.
ஸலாவுத்தீன் தனது வீரர்களை அழைத்து ஜெருசலத்தின் மன்னனையும், லூஸிக்னனை சேர்ந்த நபர் ஒருவரையும், கிராக்கின் பிரபு ரெஜினால்டையும் அழைத்து வரச் செய்தார். அவர்களுக்காக குடிநீர் கொண்டு கொடுக்கச் செய்தார். மன்னன் பெருவாரியாக நீர் அருந்தி விட்டு, ரெஜினால்டுக்கு கொடுத்தார். ஸலாவுத்தீன் ரெஜினால்டுக்கு ஜெருசல மன்னன் தண்ணீர் கொடுப்பதை தடுத்து, அவன் தங்கள் ஒப்பந்தத்தை முறித்து, வியாபாரக் கூட்டத்தை கொள்ளை அடித்து, நபிகள் நாயகத்தை அவதூறாக பேசிய குற்றத்திற்காக கொல்லப்பட வேண்டியவன் என்று கூறி தனது சபதத்தின் படி மன்னன் முன்னிலையில் தானே கொன்றார். ஜெருசல மன்னன் அதிர்ச்சியில் உறைய ஸலாவுத்தீன், “பயப்பட வேண்டாம் எல்லை மீறி ஒரு மன்னன் இன்னொரு மன்னனை கொல்ல மாட்டான்” என கூறினார். அவரையும், எஞ்சியவர்களையும் டமாஸ்கஸுக்கு அனுப்பி கவுரப்படுத்தினார். சிலுவைப் போராளிகளுடனான போரின் வெற்றிக்கு முஸ்லீம் இராணுவத்தின் சரியான திட்டமிடலும், சிறப்பாக தயாராகியதும், நல்ல அநுபவமும், துல்லியமாக போரிடும் இடத்தை தேர்வு செய்ததும், எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனின் கருணையுமாகும். அடுத்து ஸலாவுத்தீன் அக்ரா துறைமுகத்தை குறி வைத்து நகர்ந்தார். 583 A.H. ல் அனைவரும் சரணடைந்தனர். எதிரிகள் டயர் நகரத்தை விட்டும் அகன்றனர். ஸலாவுத்தீன் மேலும் தப்னைன், ஸிடான், ஜுபைல், பெய்ரூத் நகரங்களையும், கோட்டைகளையும் வென்றார். கடற்கரை வழியாக அஸ்காலன் சென்று 14 நாட்கள் முற்றுகையிட்டு எதிரிகளை சரணடைய செய்தார். அதன் பிறகு, ஜெருசலத்தின் மீது படையெடுத்தார். கடல் மார்க்கமாக ஜெருசலத்துக்கு செல்லும் உணவு மற்றும் இதர பொருட்களைத் தடுத்து, முன்னேறி ரம்லாஹ்ம் அத் தரும், பெத்லஹேம், அந் நத்ரும் நகரங்களைக் கைப்பற்றினார்.
ஜெருசலத்திற்குள் தான் நுழையும் போது அதன் புனிதம் கெடும் வண்ணம் வன்முறையாகவோ, கட்டிடங்களை அழித்தோ, சண்டையிட்டோ செல்லாமல், முதன் முறை உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கேட்டுக் கொண்டது போல “ ஜெருசலத்தின் புனிதத்தின் மீது உங்களுக்கு உள்ளது போலவே நம்பிக்கை எனக்கும் உள்ளது. ஆகவே தான் தாக்குதலை விரும்பவில்லை நீங்களாகவே சரணடைந்து விடுங்கள்” என்று செய்தி அனுப்பினார். ஆனால், ஃப்ராங்க்ஸ் அந்த சுமூகமான வழியை நிராகரித்தனர். கொஞ்சம் கூட அமைதியாக சிந்தித்துப் பார்க்காமல்  சரணடைய உடனே மறுத்தனர். அதனால் ஸலாவுத்தீனுக்கு ஜெருசலத்தை எதிர்த்துப் போரிட்டு வெல்ல வேண்டிய கட்டாயமானது. ஒரு வார கால சண்டைக்குப் பிறகு, சமாதானத்திற்கு ஒத்துக் கொண்டனர். நாற்பது நாட்களில் ஜெருசலத்தை விட்டு காலி செய்வதாகவும், விடுதலை ஆகும் ஒவ்வொரு ஆணுக்கும் 10 தினாரும், பெண்ணுக்கு 5 தினாரும், ஆண் குழந்தைக்கு 2 தினாரும் பணயத் தொகையாக கொடுப்ப தாகவும்,  பணயத் தொகை கொடுக்க முடியாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் சமாதானம் ஆகியது. ஸலாவுத்தீன் ஈட்டுத் தொகைகளை வசூலிக்க ஆட்களை அமர்த்தினார். சரியாக நபிகள் நாயகம் மிஹ்ராஜ் இறங்கிய நினைவு நாள் அன்று 583 A.H. ரஜப் மாதம் 27 ந் தேதி எதிரிகள் ஜெருசலத்தை விட்டு வெளியேறினர். அல் கதி மொஹி அத்தீன் இப்னு அஸ் ஸகி யின் முன் சொன்ன வாக்கு பலித்தது. அவர் ஸலாவுத்தீனுக்கு எழுதிய கடிதத்தில், “நீங்கள் வாளோடு அலிப்போவை வென்ற மாதம் ஸஃபர். நல்ல சகுணத்துடன் ஜெருசலத்தை வென்ற மாதம் ரஜப் என்று நினைவு கூர்ந்தார்.
நூற்றாண்டுகளுக்கும் மேலான ஆக்கிரமிப்பிலிருந்து ஜெருசலத்தை மீட்ட பிறகு, முதல் வெள்ளிக்கிழமை தொழுகையில் அல் கதி மொஹி அத்தீன் இப்னு அஸ் ஸகியை அல் அக்ஸா மசூதியில் உரை நிகழ்த்தச் செய்தார். அந்த தொழுகை பெரும் திரளான மக்களுடன் மகிழ்ச்சியாக காலத்துக்கும் நினைவு கூறும் வகையில் அமைந்தது. இது ‘அர் ரவ்ததைன்’ என்னும் புத்தகத்தின் இரண்டாம் பதிப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது.
மாபெரும் வெற்றிக்கு பிறகு, மதபோதகர்களும், கவிஞர்களும், எழுத்தாளர்களும். சரித்திர பதிவாளர்களும் குவிந்து ஸலாவுத்தீன் மீது கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதினர். உதாரணத்திற்கு அபு அல் ஹசன் இப்னு அலியின் கவிதையாவது:
மன்னருக்கு அல்லாஹ்வினால் சொர்கத்து படை வீரர்கள் வழங்கப் பட்டது
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அளித்ததைப் போன்ற வெற்றி வழங்கப்பட்டது
இது பலத்தால் பாராட்டப்படுவதல்ல, நன்றிகளால் மட்டுமே பாராட்டப்படுகிறது.
எதிரி மன்னர்களின் கைகள் என்றுமே கைப்பற்றுவதில் பலம் வாய்ந்தது.
ஜெருசலமும், ஆக்கிரமிக்கப்பட்ட மற்ற பகுதிகளும் 90 ஆண்டுகள் அழுதன. முஸ்லீம் தலைவர்களின் காதுகளும், கண்களும் அடைபட்டு கிடந்தன.
அல்லாஹ்வின் உத்தரவால் தற்போது ஸலாவுத்தீன் மூலம் வெற்றி கிடைத்தது. யாருக்கு தேவையோ உதவியும், ஆதரவும் அவர்களுக்கு. என இருந்தது.
ஸலாவுத்தீன் எதிரிகள் ஜெருசலத்தை விட்டு வெளியேறும் நாள் வரை இரக்கத்துடனும், நல்ல முறையிலும் கவனித்துக் கொண்டார். அதன் மூலம் அவர்கள் இஸ்லாம் இரக்கமும், மனிதாபமானமும் உள்ள ஒரு மார்க்கம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. இஸ்லாம் எந்த ஒரு மனிதனுக்கெதிராகவும் வீணே வாளை உயர்த்தாது என்றும், திம்மிகளை ( முஸ்லீம்கள் நாட்டில் வாழும் முஸ்லீம் அல்லாதவர்கள் ) கொல்ல மாட்டார்கள் என்றும், நியாயமில்லாமல் யாரையும் தாக்க மாட்டார்கள் என்றும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
ஆம் ஸலாவுத்தீன் முஸ்லீம்கள் என்றென்றும் தங்கள் இன மன்னன் என்று பெருமையாக நினைத்துப் பார்க்க வேண்டியவர். ஃப்ராங்க்ஸுகள் தங்கள் வயதான பெற்றோர்களை முதுகுகளில் சுமந்து வெளியேறுவதை கனத்த இதயத்துடன் காண சகிக்காமல், பணமும், சுமப்பதற்கு மிருகங்களையும் தந்துதவி அவர்கள் கவலையற்று நாட்டை விட்டு வெளியேறச் செய்தார். நூற்றாண்டுகளாக தன் இன மக்கள் மீது கொடுமை இழைத்த ஒரு சமுதாயத்திற்கு வெற்றி பெற்ற ஒரு மன்னன் துவேஷம் காட்டாமல் செய்யும் உதவியைப் பாருங்கள். பெண்களின் மீது மிகவும் கருணை காட்டினார். பைஸாந்திய மன்னனின் மனைவியும், வசதி படைத்தவளும், பிற்காலத்தில் கிறிஸ்தவ கன்னியாக வும் மாறிய ஒரு பெண்மனியின் பின்னால் பெருங்கூட்டமாக சிலர் செல்ல, ( அந்த பெண்மனி முஸ்லீம்கள் தொழுவதற்காக ஜெருசலத்தில் ஒரு இடத்தையும் ஏற்படுத்தித் தந்திருந்தார்.) ஸலாவுத்தீன் தானே அந்த பெண்மனிக்கும். அவரின் ஆதர வாளர்களுக்கும் பாதுகாப்பளித்து சென்றார். ஸைபிலின் ராணி தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து வெளியேற உத்தரவு கேட்க, எதிர்பாராத சூழ்நிலையில் அவர்களை வெளியேற்றும் சூழ்நிலை க்கு கருணையுடன் மன்னிப்பு கோரினார். அவர் ராணியை அவரின் கணவர் சிறை வைத்திருக்கும் நப்லூஸ் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்று அவருடன் சேர்ந்துகொள்ள அனுமதித்தார். எண்ணற்ற பெண்மனிகள் தங்கள் கைகளில் குழந்தைகளை சுமந்த வண்ணம் சுல்தானிடம் வந்து, “சுல்தான் அவர்களே நாங்கள் சிறையில் இருக்கும் கைதிகளின் தாய்மார்களும், மனைவிகளும், மகள்களும் ஆவோம். எங்களின் உறவுகளையும், பாதுகாவலர்களையும் விட்டு நிரந்தரமாக வெளியேறு கிறோம். நீங்கள் அவர்களை கொன்றால் நாங்கள் வாழ்வை இழந்து விடுவோம். நீங்கள் அவர்களை விடுதலை செய்தால் எங்கள் வேதனையையும், வறுமையையும் போக்க உதவியவர் ஆவீர்கள். எங்களை வாழ வைப்பவர்களில்லாமல் நாங்கள் எங்கு சென்றாலும் வாழ முடியாது” என்று நெஞ்சுருக வேண்டி னர். ஸலாவுத்தீன் மனம் கலங்கி கைதிகளில் இளைஞர்களை தாய்மார்களுடனும், கணவர்களை மனைவிகளுடனும், வயதானவர்களை மகள்களுடனும் விடுதலை செய்து அனுப்பினார். எஞ்சிய கைதிகளை இரக்கத்துடனும், கருணையுடனும் நடத்துவதாக வாக்களித்தார். இது ஏதோ கதைக்காகவும், கற்பனைக் காகவும் சொல்லப்படவில்லை. இஸ்லாத்தில் எதிரிகளின் மீது இப்படியொரு கருணை கொண்ட சக்கரவர்த்தி இருந்தார் என்பதை நாம் எண்ணிப் பெருமை கொள்ளலாம். இவையெல்லாம் ஐரோப்பிய சரித்திர ஆய்வாளர்களாலும் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக